17-1-12
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அந்த இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு இருந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றார். 2003 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் புலிகள் புறக்கணிக்க வேண்டும் என்பது பிரபாகரனின் விருப்பமாக இருக்க அம்மாநாட்டில் புலிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பது அன்ரனின் விருப்பமாக இருந்தது என்றும் இந்த அபிப்பிராய பேதத்தை தொடர்ந்து இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது என்றும் சுரேஸ் சொல்லி இருக்கின்றார்.
சமாதான முன்னெடுப்பு நடவடிக்கைகளில் கடும்போக்கை கைக்கொள்ள பிரபாகரன் தீர்மானித்து இருந்தார் என்றும் அன்ரனின் மென்மையான போக்கு பிரபாவுக்கு ஒத்து வரவில்லை என்றும் இதனால் தமிழ்ச்செல்வனுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி இருக்கின்றார் என்றும் சுரேஸ் மேலும் சொல்லி இருக்கின்றார். 2003 ஆம் ஆண்டு மாநாட்டை பிரபாகரனின் உத்தரவின் பேரில் புலிகள் புறக்கணித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அன்ரன் பாலசிங்கத்தின் நடவடிக்கைகளை சமாதான முன்னெடுப்புக்களில் அந்நாட்களில் காண முடியாது இருந்தது என அமெரிக்கா கண்டு கொண்டது.
உடல் நிலை மோசமான நிலையில் அன்ரன் ஒதுங்கிக் கொண்டார் என்றும் செய்திகள் அந்நாட்களில் ஊடகங்களில் வெளியாகி இருந்தன. அத்துடன் தமிழ்ச்செல்வனுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருந்ததாக தெரிந்து உள்ளது. இந்நிலையில் உடல் நிலை காரணமாக அன்ரன் ஒதுங்கிக் கொண்டாரா? அபிப்பிராய பேதம் காரணமாக பிரபாகரனால் ஒதுக்கப்பட்டு இருக்கின்றாரா ? என்று அமெரிக்காவுக்கு சந்தேகம் எழுந்து இருந்ததாம் என்றும் சொல்லப்படுகிறது. சுரேஸ் பிறேமச்சந்திரன் இச் செய்திகளை தமக்குத் தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ள தகவலின் அறியமுடிகிறது.
Geen opmerkingen:
Een reactie posten