[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 01:33.43 PM GMT ]
இலங்கைத் தீவின் தமிழ் மக்களென கூறப்படும் வடக்கு, கிழக்கு வாழ் மக்களும், புலம்பெயர் வாழ் மக்களுக்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் அனர்த்தத்தின் பின்னர் எல்லாமே இரண்டுபட்ட நிலையில் உள்ளனர்.
இன்று நாம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் மூன்றாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். தோல்வியின் மேல் தோல்வி. ஏமாற்றம் அதிர்ச்சி, இனிமேலும் நாம் தலைநிமிர முடியுமா என்ற கேள்விக் குறியுடன் ஏதோ, தானோ என்று வாழ்க்கை நடத்துகிறோம்.
இவ்வளவிற்கு பின்னரும் எம் இனத்திற்கு உள்ள அகங்காரம், போட்டி, பொறாமை, எரிச்சல் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை போடும் வழக்கம் குறைந்தபாடாய்க் காணவில்லை. எந்த விடயத்திலும் எம் இனத்திற்குள் விட்டுக்கொடுப்பு என்ற விடயத்திற்கே இடமில்லை.
அன்று நாம் சிறுவர்களாக இருக்கும்பொழுது எமது ஊர் பெரியவர்கள் அரசியல் பேசும்பொழுது, “மோட்டுச் சிங்களவரென'' கதைப்பதை நன்றாக கேட்டுள்ளோம். இது இன்று எதிர்மாறாக நாம், “மோட்டுத் தமிழரா?'' என எம்மை நாம் பார்த்து ஏளனமாக கேட்கும் நிலைக்கு எமது இனத்தின் நிலை இன்று உள்ளது.
இன்று இலங்கை அரசு பெற்றிருக்கும் அரசியல் இராணுவ வெற்றி என்பது எம்மிடையே யாவற்றையும் இரண்டு இரண்டாக பிரித்து உடைத்து எமது இனம் மீண்டும் தலைநிமிர முடியுமா என்ற நிலைக்கு இந்த மூன்று வருட காலம் தள்ளியுள்ளது.
இவற்றைப் பட்டியலிடுவதனால் இலங்கையில் தமிழர் தரப்பு இரண்டாக பிளவுபட்டுள்ளது, அத்துடன் பல இனந்தெரியாதோர் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் காவலர்களாக உருவாகியுள்ளனர். இதனால் எந்த தங்கு தடையுமற்ற சுதந்திரமான சிங்களக் குடியேற்றம், புத்தமயப்படுத்தல், மூலை முடுக்கெல்லாம் இராணுவ கடற்படை முகாம்கள் உருவாகியுள்ளன.
எல்லாமே இரண்டு
இதேவேளைஇ உள்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பேச்சுக்கு இடமில்லாதது மட்டுமல்லாது புலத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் பல பிரிவாக உடைந்து தம்மிடையே தினம் சர்ச்சைகளை வளர்க்கின்றனர்.
இதே இடத்தில் இம் மூன்று வருட காலத்தில் எந்த தேவையும் அற்ற தமது பொருளாதாரங்களை வீண் விரயம் செய்து புலத்தில் எம்மிடையே இரு தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அடுத்து வருடா வருடம் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வந்த ஒரே ஒரு மாவீரர் தினம், விளையாட்டுப் போட்டி யாவும் இரண்டு இரண்டு நடைபெறும் அருவருப்பான விடயத்தை காண்கிறோம்.
இது மட்டுமல்லாது இன்று அரசின் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கொடுக்கும் பொருட்டு தமக்கு பிடிக்காத ஒவ்வொரு செயற்பாட்டாளர் பற்றிய இறந்த காலச் செயற்பாடுகள் நிகழ்காலச் செயற்பாடுகள் யாவும் ஆதாரங்களுடன் பல இணைய தளங்கள், பத்திரிகைகள், வானொலிகளில் புலம் நாடுகளில் வெளியிடப்படுகின்றன.
இப்படியான நிலையிலும் கூட எமது மக்களிடையே ஒற்றுமை என்ற கதைக்கே இடமில்லை. இன்று யதார்த்த ரீதியாக பார்க்கும்பொழுது தமிழ்மக்களின் அரசியல் சமூக பொருளாதார, கலாசார உரிமைகளின் அடிப்படையில் கூறப்படும் சுய நிர்ணய உரிமை என்பது செல்லாக் காசாகியுள்ளன.
ஒவ்வொருவரும் தம்டன் ஒத்து வராதவர்களுக்கு உதைபந்தாட்டத்தில் மத்தியஸ்தர் சிவப்பு, மஞ்சள் அட்டைகள் காட்டுவது போல் “துரோகி'' பட்டம் வழங்கப்படுகின்றன.
இந் நிலை இன்னும் சில வருடங்கள் தொடருமானால் முன்பு கூறிய “தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா'' என்பது தமிழன் என்று சொன்னால் தலை நிமிர்ந்து வாழ முடியாது'' என மாற்ற வேண்டிய நிலை உருவாகும்.
ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்?
யாரை நம்புவது
1979 ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் பின்னர் ஈரானியர் தமது சொந்த சகோதரங்கள், குடும்பத்தவர், அயலாரையே நம்ப முடியாத நிலை ஒன்று உருவாகியதாக படித்துள்ளேன். ஈழத் தமிழர்களாகிய நாம் இன்று இப்படியான ஓர் வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறோம். நாம் குற்றவாளியோ சுற்றவாளியோ உலகில் ஒதுங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். காரணம் நாம் மாலுமி அல்லது மாலுமிகள் அற்ற பயணத்தை மேற்கொள்கிறோம்.
இவ்விடத்தில் நாம் தேடும் மாலுமி அல்லது மாலுமிகள் யார்? என்ற கேள்வி எழுகிறது. இது யாராக இருக்க முடியும்! இவர்களுக்கு என்ன தகைமைகள் இருக்கவேண்டும். இப்படியாக இனம் காணபபடுவோரினால் என்ன செய்ய முடியும்? போன்ற கேள்விகள் இங்கு உருவாகின்றன.
எமது நீண்ட சாத்வீக போராட்டம், ஆயுதப் போராட்டம் ஆகியவை எந்த பயனையும் எமக்கு தரவில்லை. ஆகையால் நாம் தற்போதும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுவது நிச்சயமாக இராஜதந்திர போராட்டமே. இங்கு உணர்ச்சிவசமான பேச்சுகள், அணுகுமுறைகள், நடைமுறைகள் மீண்டும் எமது இனத்தை அதலபாதாளத்திற்கு தள்ளும்.
ஆகையால் இவ்வேலைத் திட்டத்தை முதிர்ந்த அனுபவம் பெற்ற, இராஜதந்திரம் தெரிந்த ஏற்கனவே நீண்ட விடுதலைப் போராட்டத்தினால் இனம் காணப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்டவர்களினால் தான் முன்னெடுக்க முடியும். அத்துடன் நிலத்தில் சகல சத்திய சோதனைகளையும் அனுபவிக்கும் மக்களின் வாழ்க்கையின் பக்கபலமாக உள்ளவர்களே முன்வர வேண்டும்.
அது மட்டுமல்லாது எமது நிலத்தில் அயலவர்களான இந்தியாவுடன் விருப்பு வெறுப்புகளை பாராது, உறவு கொள்ளக் கூடியவர்களே எமது மாலுமிகளாக இருக்க தகுதியுடையவர்கள். இது தவிர்ந்த வேறு அடையாளம் கொண்ட எவரானாலும் தமது உணர்ச்சிவச அரசியலினால் எமது அழிந்து கொண்டிருக்கும் இனத்தை அழித்தே தீருவார்கள்.
ஸ்கொட்லாந்து
இன்று பிரித்தானியாவில் உள்ள ஸ்கொட்லாந்தை பாருங்கள். அங்கு பிரித்தானியாவின் பிரதமர் ரொனி பிளேயர் பதவிக்கு வந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம்! ஆனால் ஸ்கொட்லாந்து அரசியல்வாதிகளின் திறமையான இராஜதந்திர அணுகுமுறை ஸ்கொட்லாந்து மக்கள் 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறுவதா இல்லையா என்பது பற்றி ஓர் வாக்கெடுப்பு நடத்தப் போகின்றனர்.
இங்கு தான் நாம் தவறவிட்ட மிக அருமையான சந்தர்ப்பமான 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை எம் முன்னே தோன்றுகின்றது. வடக்கு கிழக்கு வாழ் மக்கள் 1987 ஆம் ஆண்டு முன்வைக்ககப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை ஏற்கவில்லையென்பது சரித்திரம். ஆனால் இதன் மூலம் தமிழர் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்படுகிறது.
தமி ழர் ஒருவர் முதலமைச்சர், அத்துடன் தமிழ் ஈழத்தின் தலைநகராக திருகோணமலையில் வடக்கு கிழக்கு மாகாண சபையின் தலைமைச் செயலகம். இத் தீர்வை அவ்வேளையில் அதாவது 1987 ஆம் ஆண்டு நாம் மனப்பூர்வமாக ஏற்றிருந்தால் இன்று ஸ்கொட்லாந்துமு தென் சூடான்மு கொசோவா ஆகியவற்றிற்கும் முன்பே நாம் அயலவரின் துணையுடன் சுதந்திரத்தை பெற்றிருப்போம்.
ஆகையால் நாம் இனி மேலும் உணர்ச்சி வச அரசியலைவிட்டு மதிநுட்ப இராஜதந்திர நகர்வுகளை சரியான திட்டமிடலுடன் முன்னெடுக்க வேண்டும்.
நாம் எமது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் சுதந்திர தமிழீழத்திற்காக மேற்கொண்ட சகல கட்டமைப்புகள் சரியான முறையில் சரி செய்து எதிர்காலத்தை திட்டமிட வேண்டியுள்ளோம்.
தவறுகள் நடப்பது சகஜம், தவறுகள் என்பது எதிர்காலத்தின் ஓர் படிப்பினையாக அமைய வேண்டும். உலகில் பல இடங்களில் பல இனங்களின் விடுதலைப் போராட்டங்களில் வேறுபட்ட அரசியல் இராணுவ தவறுகள் இடம்பெற்றுள்ளன. சில இனங்கள் அடியோடு தொடர்ந்தும் தமது அரசியல் உமைகளை பெற முடியாதளவுக்கு அழிக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள்
நாம் எமது விடுதலைப் போராட்டத்தை வேறு இனத்தின் விடுதலைப் போராட்டத் துடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் எமது விடுதலைப் போராட்டத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர்.
உலகில் விடுதலைப் போராட்டங்கள் நடைபெறும் ஒரு இனத்தினுடைய 500,000 மேற்பட்ட மக்களுக்கு மேல் புலம்பெயர்ந்த சர்வதேச ரீதியாக பல நாடுகளில் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவே வசிப்பவர்களானால் அது நிச்சயம் தமிழ் மக்களே என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அப்படியாக வாழும் எம்மால் நாம் ஆயுதப் போராட்டம் மூலம் பெற்ற ஓர் நிர்வாக அரசை தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. இதற்கான பிரதான காரணம் எமது இராஜதந்திர நகர்வுகளில் உள்ள தவறே எனலாம்.
ஆகையால், இது போன்ற தவறை இனி மேலும் செய்யாது சரியான திட்டமிட்ட இராஜதந்திர நகர்வுகளை சர்வதேச ரீதியாக நாம் மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்பட்ட அரசியல் நகர்வுகள், மேடைப் பேச்சுகள், சவால் விடுதல் போன்றவற்றை நிறுத்தி, நேரம் பணம் மனிதவலு போன்றவற்றை வீண் விரயம் செய்யாத நகர்வுகள், வேலை திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.
ஊர்வலங்கள், செய்யும் வேளையில் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில் மனுக்கள், சுலோகங்கள், துண்டு பிரசுரங்களை வசனப் பிழை, எழுத்துப் பிழையில்லாது எழுதி வெளியிட வேண்டும்.
உரத்து சத்தம் போடுவது, ஊர்திகள் செய்வது பிரயோசனமற்ற முறையில் கூட்டங்களை நடத்துவது யாவும் நாம் எங்களை திருப்திப்படுத்துவதற்காகவும் எமது இணைய தளங்களுக்கான செய்தியாக இருக்குமே தவிர அதனால் சர்வதேச ரீதியாக நாம் ஒன்றையும் சாதிக்க மாட்டோம்.
புலம்பெயர் வாழ் மக்களிடையே திட்டமிடல் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு யாவும் இருக்குமேயானால் நாம் நிச்சயம் இழந்தவற்றை மீளப் பெறவும் எமது இனத்திற்கு ஏற்பட்ட அநியாயங்களை நீதி கேட்பதுடன் எமது தாயக பூமியில் வாழும் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வை தேடுவதற்கு நிச்சயம் உதவுவோம். இதனைச் செய்ய இப்போதே தயாராகுவோம்.
Geen opmerkingen:
Een reactie posten