திருகோணமலை கடற்கரையில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஐந்து மாணவர்களை விசேட அதிரடிப்படையினரே படுகொலை செய்ததாக, தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும், அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசகரான பசில் ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பின் அடிப்படையில் இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்பு இருப்பதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ ஒப்புக் கொண்டுள்ளதாக பிளக் தெரிவித்துள்ளார்.
எனினும், மாணவர்கள் மீது துளைக்கப்பட்ட குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினருக்கு சொந்தமானதல்ல. யாரையேனும் கொலை செய்யும் போது விசேட அதிரடிப்படையினர் வேறு துப்பாக்கிகளைப் பயன்படுத்திருக்கக் கூடும் என பசில் தெரிவித்திருந்ததாகக் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
யார் இதனைச் செய்தார்கள் என்பது எமக்குத் தெரியும் ஆனாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக பிளக், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமை விவகாரங்கள் குறித்து இலங்கை இராணுவத்தினருக்கு போதியளவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, எனினும் கடற்படையினருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படாத காரணத்தினால் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவே அதிகளவில் குற்றம் சுமத்தப்படுகின்றது என என பிளக்கிடம், பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten