தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 januari 2012

கிட்டு குறித்து அமெரிக்கா சேகரித்து இருந்த சுவாரஷியமான தகவல்கள்!


[ Monday, 23 January 2012, 08:30.12 PM. ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான கிட்டு குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தொகுத்து எடுத்து இருந்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை.சொந்தப் பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். பிரபாகரனுக்கு நெருங்கிய உறவினர்களில் ஒருவர் என்று அறியப்படுகின்றார். கரையார் என்கிற சாதியைச் சேர்ந்தவர்.
சொந்த இடம் வல்வெட்டித்துறை. தமிழில் மாத்திரம் பேசக் கூடியவர். ஆங்கிலத்தில் கொஞ்சம் விளங்கிக் கொள்வார் போல் தெரிகிறது. 10 ஆம் வகுப்பு வரை படித்து இருக்கின்றார்.

யாழ். பிராந்திய தளபதி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கு ஏதேனும் நேருமாக இருந்தால் அந்த இயக்கத்தை தொடர்ந்து கொண்டு நடத்தக் கூடியவராக உள்ளார்.

புலிகள் இயக்கத்தின் இரண்டாவது பெரும் தலைவர். பிரபாகரனின் லெப்டினண்ட். பிரபாகரனின் கட்டளைகளை அமுல் படுத்துபவர்.

சிறுத்தையின் தோலிலான துப்பாக்கி உறை வைத்திருக்கின்றார். இவரது வளர்ப்புப் பிராணியாக குரங்கு ஒன்று உள்ளது. இதன் பெயர் பில் என்பது.
நாய்கள் கூட்டம் ஒன்று இவரைச் சூழ நின்றதாக இவரை பேட்டி எடுக்க சென்று இருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். கிட்டு மிகவும் மோசமான சாரதி.

இவர் மோட்டார் தாக்குதல் ஒன்றில் 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் படுகாயம் அடைந்தார் என்று இலங்கை இராணுவ தரப்பு கூறுகின்றது, மோட்டார் தாக்குதல் ஒன்றில் ஒரு காலை இழந்தார் என்று தமிழர் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

இவர் காரை பயன்படுத்தாமல் தற்போது ஸ்கூட்டி ஒன்றில் சுற்றித் திரிகின்றார் என்று யாழ்ப்பாண செய்திகள் கூறுகின்றன. இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம்.
ஒரு வேளை இவர் இயக்கத்தில் பதவி நிலை இறக்கப்பட்டு இருக்கலாம். அல்லது இலங்கை அரசு யாழ்ப்பாணம் மீது விதித்திருந்த எரிபொருள் தடையால் ஏற்பட்ட தாக்கமாகவும் இருக்கலாம். ஒரு வேளை கிட்டு அவரின் காரை சேதப்படுத்தி இருந்திருக்க கூடும்.

இயற்கைக்கு மாறுபட்ட ஒருவர் என்று நாம் மேல் குறிப்பிட்டு இருந்த ஊடகவியலாளர் கிட்டு குறித்து கூறி உள்ளார்.

"மேக்கோ ஸ்வாக்கர்" ஒன்று இவரிடம் உள்ளது. சிறுத்தையின் தோலிலான துப்பாக்கி உறைக்குள் ஏ. கே – 47 வைத்திருக்கின்றார். மக்னம் 357 சுழல் துப்பாக்கியும் இவரது ஆயுதமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முறை காரில் யாழ்ப்பாணத்தில் சுற்றுப் ப்யணம் சென்று கொண்டிருந்தபோது கிட்டு காரை திடீரென நிறுத்தி விட்டு பிஸ்டலை வெளியில் எடுத்து காகங்களை நோக்கி சுட்டார் என்றும் மேற்சொன்ன ஊடகவியலாளர் கூறி உள்ளார்.

கைது செய்யப்படுகின்ற இடத்து தற்கொலை செய்கின்றமைக்காக நெஞ்சில் சயனைட் குப்பி அணிந்து உள்ளார் கிட்டு.

அரச படைகளுடன் சேர்ந்து செயல்படுகின்றார் என்று சந்தேகிக்கப்படுகின்ற தமிழ் இளைஞர்கள் விடயத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கின்றார்.

யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் அதிபர் எட்வின் ஆனந்தராஜாவை சுட்டுக் கொன்றார். இராணுவத்துடன் சேர்ந்து உதைபந்து விளையாடினார் என்பதே ஆனந்தராஜா மீது காணப்பட்ட குற்றம்.

கிட்டு இயல்பாகவே மிகவும் கோபக்காரர் என்றும் வன்முறையாளர் என்றும் இராணுவ தரப்பு கூறுகின்றது.

கிட்டுவின் வீட்டில் அண்மையில் இயக்க உறுப்பினர்களுக்கு கூட்டம் ஒன்று நடந்தது என்றும் இயக்க உறுப்பினர்கள் வீட்டுக்கு வெளியில் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர் என்றும் வானத்தில் அந்நேரம் இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்திகள் திரிந்தன என்றும் எச்சரிக்கை அடைந்த கிட்டு வெளியில் நிறுத்தி இருந்த சைக்கிள்களை அப்புறப்படுத்த சொல்லி வந்திருந்த உறுப்பினர்களுக்கு கட்டளை இட்டார் என்றும் ஆனால் கட்டளையை நிறைவேற்றுகின்றமையில் உறுப்பினர்கள் தாமதித்தனர் என்றும் இதனால் பொறுமை இழந்த கிட்டு கோடாரி ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து சைக்கிள்களை கொத்தினார் என்றும் இச்செய்திகள் கூறுகின்றன.

இவரது அரசியல் கொள்கை என்ன? என்பது சரியாக தெரியவில்லை. இராணுவ தமிழ் தேசியவாதமாக இருக்கக் கூடும். புலிகள் புரட்சிகர சோசலிஷ்டுகள் என்று ஒரு முறை கூறி இருக்கின்றார்.

கிட்டுவுக்கு தமிழ் வைத்தியர் ஒருவர் மீது காதல். அவ்வைத்தியரை திருமணம் செய்ய இருக்கின்றார். போரை விட காதலில் அதிக ஈடுபாடு வந்து விட்டது போலும்?
பிரபாகரனுக்கும் கிட்டுவுக்கும் இடையில் முறுகல் என கொழும்பு ஊடகங்கள் கடந்த மாதங்களில் சொல்லிக் கொண்டு இருந்தன.

கிட்டு மாயமாக மறைந்து விட்டார் என்றும் ஒரு வேளை பிரபாகரனால் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் எழுதி இருந்தன.
கிட்டு – பிரபா முறுகல் இலங்கை இராணுவத்தால் கட்டிச் சமைக்கப்பட்ட கதையாக இருக்கக் கூடும். புலிகள் சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்கிற பிரசாரத்துக்காக இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட உத்தியாக இருக்கக் கூடும்.-
கொழும்பில் உள்ள அமெரிக்க 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten