தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் செனட்சபை ஒன்று அமைக்கப்படும் என்ற இலங்கை அரசின் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முற்றாக நிராகரித்துள்ளது.
செனட்சபை என்பது இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு அல்ல. அது முழுமையான அதிகாரப்பகிர்வின் ஓர் அங்கமே எனச் சுட்டிக் காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வுக்கும் செனட்சபைக்கும் எதுவித சம்பந்தமுமில்லை.
இதுகுறித்து எமது உறுதியான நிலைப்பாட்டை அரசிடம் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளோம் என்றும் அறிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்ப தற்கு செனட்சபை அமைக்கப்படுவதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது என இலங்கை அரசுதான் கூறுகின்றது.
அதனை இந்தியா கூறவில்லை என்று தமிழ்க் கூட்டமைப்பு தக்கவகையில் பதிலடி கொடுத்துள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் மீண்டும் செனட்சபை ஒன்று அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முன்மொழிவை இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அது கூறியுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் குறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் கேட்டபோதே, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியவை வருமாறு:
அரசுடன் பேச்சு இடம்பெற்ற காலகட்டத்தில் இந்த செனட்சபை குறித்து அது யோசனைகளை முன்வைத்தது. நாம் அதற்கு மிகவும் தெளிவானதொரு பதிலை வழங்கினோம்.
செனட்சபை என்பது மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதாகும். மாகாணசபைகளுக்கான அதிகாரப் பகிர்விற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. செனட்சபைக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்லர் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
மாகாணசபைகளுக்கான சுயாட்சியை நாம் கோரி நிற்கின்றோம். அதிகாரப்பகிர்வென்பது எமக்கு அவசியம்.
பொலிஸ், காணி அதிகாரங்கள், நிதி, கல்வி, வேலைவாய்ப்பு உட்பட முக்கியமான சில விடயங்களை நிர்வகிக்கக்கூடியதொரு தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
செனட்சபை என்பது முழுமையான அதிகாரப் பகிர்வின் ஒரு பகுதியே. எனவே, அதிகாரப்பகிர்வுடன் அதனைப் போட்டு அரசு குழப்பிக்கொள்ளக்கூடாது.
தீர்வு விடயத்திற்கு செனட்சபை அமைப்பதானது முட்டாள்தனமான விடயமாகும்.
அரசுக்கு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என உண்மையானதொரு அக்கறையில்லை.
எனவேதான், முட்டாள்தனமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றது. அதனை நம்புவதற்கு நாம் ஒன்றும் முட்டாள்கள் அல்லர் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
அமைச்சர் பசிலுக்குப் பதிலடி
இதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இங்கு வந்தபோது, அவருடன் இணைந்து நாம் உழவு இயந்திரங்களைக் கையளித்தோம். அவை தென்பகுதிக்குத்தான் சென்றன. இந்த விடயம் அமைச்சர் பஸிலுக்குத் தெரியாதா?
தற்பொழுது சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சைக்கிள்களும் எங்கு செல்லுமோ என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
வடபகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் புறக்கணிக்கவில்லை. எமக்கு சரியான நேரத்திற்கு அழைப்பு கிடைக்கவில்லை. இதுதான் உண்மையும் கூட. என்றார் எம்.பி.
Geen opmerkingen:
Een reactie posten