தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 januari 2012

அன்று, இலங்கை இராணுவம்! இன்று, 'தானே' புயல்!- சூறையாடப்படும் இலங்கைத் தமிழர்கள்!



பட்ட காலிலேயே படும் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... இலங்கைத் தமிழர்களுக்குப் பொருந்திவிடுகிறது. 'தானே’ புயல் புரட்டிப் போட்டதில், புதுவை, கடலூர், நாகை பகுதிகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது கூடுதல் சோகம்!
1990-ல் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே இலங்கையில் நடந்த போரின்போது... வவுனியா, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் இருந்து உயிர்தப்பிய இலங்கைத் தமிழர்கள், அகதிகளாக கடலூர் மாவட்டத்தில் ஆலப்பாக்கம், குறிஞ்சிப்பாடி, சத்திரம் போன்ற பகுதிகளில் குடும்பம் குடும்பமாகக் கரை ஏறினார்கள்.
ஆங்காங்கே சிதறிக்கிடந்த இவர்களை, தமிழக அரசு ஒன்றாக்கி கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடியிலும், அம்பலவாணன்பேட்டையிலும் குடி அமர்த்தியது. குறிஞ்சிப்பாடியில் பத்துக்குப் பத்து அளவில் களிமண் சுவர்களால் ஆன கூரை வேய்ந்த 168 வீடுகளையும், அம்பலவாணன்பேட்டையில் சிமென்ட் ஸீட் போட்ட 171 வீடுகளையும் கட்டிக் கொடுத்தது.
கடந்த 20 வருடங்களாக இந்தக் களிமண் குடிசைதான் இவர்கள் சொத்து. இதுவும் 'தானே’ புயலில் சூறையாடப்பட்டதால், குடிசைகளை இழந்து மீண்டும் அகதிகளாக நிற்கிறார்கள். சோகத்தில் தவித்த சிலரை சந்தித்துப் பேசினோம்.
நாங்களும் கடந்த 15 நாட்களாக மின்சாரம், குடிதண்ணீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல்தான் தவித்தோம். எங்களது உரிமைகளைக் கேட்க வீதியில் இறங்கிப் போராடவா முடியும்... நாங்கள் அகதிகள்தானே? அதனால்தான் எங்கள் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் விதமாக, அரசு எங்களுக்கு டென்ட் அடித்துக்கொள்ள அப்போது கொடுத்த தார்ப்பாய்களைக்கொண்டு, சுவர் இல்லாத குடில்களை அமைத்து இருக்கிறோம். உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் மிகுந்த நெருக்கடியில் தவித்து வருகிறோம்.
தமிழக அரசு எங்களுக்கும் நிவாரணத் தொகையாக 2,500 ரூபாயைக் கொடுத்தது. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? சூறைக்காற்றில் பறந்துபோன துணிகளை வாங்குவதா... இல்லை, சுவர் இடிந்து விழுந்து உடைந்துபோன பாத்திர பண்டங்களை வாங்குவதா..? அந்தப் பணத்தை வைத்து  திருத்த வேலைகூட செய்ய முடியாது.
ஆளும் கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என ஆளாளுக்குப் புயலினால் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டனர். ஆனால், எங்களைத்தான் யாரும் கண்டுகொள்ளவில்லை. உடல் உபாதைகளைக் கழிக்கவும் எங்களுக்கு இடம் இல்லை. கூரைகள் பிய்ந்துபோன குட்டிச்சுவர்களுக்கு இடையே புதைகுழிக்குள் வாழ்வதைப்போல காலத்தைக் கழிக்கிறோம்.
எங்களுக்கும் நிரந்தரமான காரை வீடு கட்டிக் கொடுத்து, எங்கள் பிழைப்புக்கு ஏதாவது வழி வகை செய்து கொடுத்தால், ஏழேழு ஜென்மத்துக்கும் நாங்கள் இந்தத் தமிழகத்துக்கு கடன்பட்டுக் கிடப்போம்'' என்று கண்ணீர் வடித்தார்கள்.
ஏற்கெனவே அவர்கள் இங்கு மூன்றாம்தர மக்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் வீடு ஒரு மாட்டுத் தொழுவத்தைப் போலத்தான் இருந்தது. வாழ்வதற்குத் தகுதி அற்றதாக இருந்த அந்தக் கூரை வீடுகளும் புயல் காற்றில் பறந்துவிட்டது. அகதிகள் என்பவர்களும் மனிதர்கள்தானே... அதுவும் அவர்கள் நம் தமிழர்கள். அதனால் அரசாங்கம் அவர்களை மனிதநேயத்துடன் நடத்த வேண்டும்.
இப்போது இருக்கும் பத்துக்குப் பத்து வீட்டை விரிவுபடுத்தி, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். அவர்களுக்கும் நம்மைப் போன்று சமஉரிமை கிடைக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைமை ஆட்சிக் குழு உறுப்பினரான லோகு அய்யப்பன்.
குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ​-வான சொரத்தூர் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) கவனத்துக்கு இலங்கை அகதிகளின் நிலைமையைக் கொண்டு சென்றோம். அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்ற சொரத்தூர் ராஜேந்திரன், பாதிக்கப் பட்டவர்களுக்கு அரிசி மற்றும் வேட்டி, சேலைகள் கொடுத்து ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
அங்கிருந்தே நம்மைத் தொடர்பு கொண்ட அவர், அகதிகள் முகாமில் இருப்பவர்களும் நமது இரத்த சொந்தங்கள்தான். அவர்களது குறைகள் எதுவாக இருந்தாலும், என்னிடம் முறையிடச் சொல்லி இருக்கிறேன். அதனைத் தீர்த்துவைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
இனியாவது அப்பகுதி இலங்கைத் தமிழர்களின் துயரம் தீரட்டும்!
ஜூனியர் விகடன்

Geen opmerkingen:

Een reactie posten