தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 januari 2012

கிருஸ்ணரே! மகிந்தவை மனித உரிமைச் சிக்கலிருந்து காக்கப்போகிறீரா? அழிக்கப்படும் தமிழரைக் காக்கப் போகிறீரா? : பூநகரான் குகதாசன்



[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 05:13.57 PM GMT ]
இலங்கையின் இனப் இரச்சனைக்கு வழங்கப்பட வேண்டியது தீர்ப்பேயொழிய தீர்வல்ல. முதலாவதாக இரண்டு தரப்பும் ஏற்கும் தீர்வு என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. காரணம் என்றுமே இரண்டு தரப்பும் ஒருபொதுப் புள்ளியை சென்றடைந்து இணங்க,....
தென் இலங்கை சிங்கள மகாவம்ச மேலாதிக்க சக்திகள் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தைக் கூட அனுமதிக்கப்போவதில்லை. இதுவே இலங்கைத் தீவின் இனப் பிரச்சினை வரலாறு கற்றறிந்தபாடமாகும். ( பண்டா–செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இன்றுவரை இந்த நிலை தொடர்வதற்கு பாராளுமன்றப் பதிவேடுகளே சாட்சி)
இரண்டாவதாக, காலா காலமாக தமிழ் மக்கள் தேர்தல்கள் மூலம் தங்களது தலைமைக்கு வழங்கும் ஜனநாயக ஆணையை சிறீலங்கா பாராளுமன்ற பெரும்பான்மை பலம் முறியடித்தே வந்துள்ளது. அதாவது தமிழரின் ஜனநாயக உரிமையை சிங்கள ஜனநாயக பலம் தொடர்ந்து அழித்தே வருகின்றது வந்துள்ளது.
எனவே பாராளுமன்ற பொறிமுறைக்குள் ஒருஅரசியல் அறிவார்ந்த சமஷ்டி வடிவத் தீர்வுச் சுதந்திரம் கூட சாத்தியமில்லை என்ற நிலையில் தமிழரிற்கான தீர்வு என்பது இலங்கைத் தீவிற்குள்ளேயோ அதன் பாராளுமன்ற வளாகத்திற்குள்ளோ அதன் பெரும்பான்மையினரிற்காகவே மாற்றியும் திருத்தியும் எழுதப்பட்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு பெட்டிக்குள் சாத்தியமற்ற ஒன்று.
இந்த அரசியலமைப்பே தமிழர் உரிமை மறுப்பின் மகாவம்ச சாசனமாக இருக்கும் போது, இன அழிப்பின் கொலைக் களமாக இருக்கும் போது, இதற்கு வெளியே ஆன ஒரு தீர்ப்பே சாத்தியமான ஒன்றாகும்.
இதனையே மேற்குலகம் பெட்டிக்கு வெளியேயான தீர்வு என்று உரைத்து வந்துள்ளது. ஆனால் சிங்களத் தலைமைகளோ இனப் பிரச்சனையை நீதி தேவதையின் கை வாளைக் கொண்டே தமிழரை வெட்டி சாய்த்து வருகின்றன.
அந்த நீதி தேவதையை அதாவது சிறீலங்காவின் இறுதி அதிகாரம் என்பது பாராளுமன்றமா ? அரசியலமைப்பா ? அரச தலைவரா ? என்பதற்கு அப்பால் இந்த 3 அம்சங்களையும் சிறுபெரும்பான்மை இனவாதக் கட்சிகளும் ,மதவாத நிறத் துணிகளை போர்த்தியவர்களும் குழப்பியும் கட்டுப் படுத்தியும் வந்துள்ளமையே சுதந்திர இலங்கையின் இனப் பிரச்சனை வரலாறாகும்.
இந்த இறுதி அதிகாரம் இராணுவ சீருடைக்கு கை மாறியபோதுதான் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கே இந்திய அனுசரனையுடன் கூடிய உலக அங்கீகாரம் கிடைத்தது. உண்மையில் இலங்கைத் தீவில் தொடர்வது நீங்கள் தேர்தல்களைக் கண்டு நம்பும் ஜனநாயகமல்ல இன நாயகமே.
மூன்றாவதாக சுதந்திர இலங்கையின் முதலாவது சோல்பரியின் அரசியலமைப்பு மாற்றம் ஒரு“அரசியலமைப்பு மற்றும் மனித இன உரிமை மோசடி”என்பதே சர்வதேச அரசியலமைப்பு சட்டவாளர்களின் முடிவாக உள்ளது.
இதற்கு “றயல் அற்பார்” வழக்கு முடிவு வலுச் சேரப்பதாக உள்ளது. எனவே சிங்கள பௌத்த பெரும்பான்மை தலைப் பட்சமான சட்டங்களின் அடிப்படைப் பெட்டிக்குள் நின்று கொண்டு அதற்குள்ளே ஒருநியாயமாக தீர்ப்பை தேடுவது இருட்டு அறைக்குள்ளே கறுத்தைப் பூனையை பிறவிக் குருடன் தேடுவது போன்றதாகும்.
சிங்கள இனவாதமானது பிறவிக் குருடன் போலுள்ளது. அது பிறருடைய ஆலோசனைகளைக் கூட காதுகொடுத்து கேட்பதாகக் கூட இல்லை. பல்லினங்களின் பொது இறையான்மை என்பது பெரும்பான்மையினருடையது மட்டுமே என்றே பேராசிரியர் அறிவுமட்டத்தின் நிலையாகவும் மதபீடாதிபதிகளின் மனோநிலையாகவும் உள்ளது.
மறு புறத்தில் சுதந்திரகால பாகிஸ்தான் ஜின்னா போலன்றி தேசிய இனங்களின் நல் இணக்கப்பாட்டிற்கு அன்றே தமிழரான சேர். பொன் இராமநாதன் ஒத்துழைத்தார். இன்று வரை பிரபாகரன் , சம்பந்தன் அடங்கலாக தமிழ்த் தலைமைகள் இணங்கியே வருகின்றன.
பிரபாகரன் கூட ரணிலுடன் 2002 இல் சென்றடைந்த இணக்கப்பாட்டை குழப்பியமை தொடர்பாக உலகம் நோர்வே அறிக்கையையே படிக்கவேண்டும்.
ஓவ்வொரு தடவையும் முன்னைய தமிழ்த் தலைமைகள் யாவும் அரசியல் பேரம் பேசலில் மிகவும் குறைந்த கோரிக்கைகள் வரை கீழிறங்கிய போதும் அதனைக் கூட அமுலாக்க சிங்கள பௌத்த சிந்தனை அனுமதியாது குழப்பங்களை ஏற்படுத்தி வந்துள்ளது. அதுவே இன்றும் தொடர்கிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் போலவே அவற்றிற்கு எதிராக சட்டங்களையும் நீதிமன்றத் தீர்வுகளையும் ஏவி வருகின்றது. இதனையே இன்றும் இந்தியாவும் சர்வதேசமும் காண்கின்றன.

எனவே, தீவின் அரசியல் காலநிலைக்குள் வளர்க்கப்பட்டு சென்றடையப்படும் தீவின் உள்நாட்டு தீர்வு என்பது மத்தியில் மட்டும் அதிகாரங்கள் அனைத்தையும் குவிக்கும் ஒற்றையாட்சிஆகவும் உலகநாடுகளெல்லாம் கைக் கொள்ளும் சமஷ்டியைக் கூட ஏற்காது மறுத்து நிராகரிப்பதுடன் அதிகாரப் பகிர்வை மட்டுமன்றி அதிகாரப் பரவலாக்கத்தைக் கூட மூர்க்கத் தனமாக எதிர்த்து நின்று சன்னதமாடுகிறது.
தேசிய சிறுபான்மை மக்களின் தேர்தல் ஆணைகளின் ஜனநாயக விழுமியவலுக்களை நிராகரித்து அவற்றை அடுத்தமட்ட பாராளுமன்ற வாக்கெடுப்பில் தோற்கடிப்பதே சிறீலங்கா வளர்த்தெடுத்துள்ள ஜனநாயக மரபாகும்.
சிங்கள ஜனாதிபதிகளும் மதபீடாதிபதிகளும் மக்களும் ஜனநாயகத்தை இறுகத் தழுவுவது ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள தீராத காதலால் அல்ல. தமிழ் இன அழிப்பின் மீதுகொண்டுள்ள கொலைவெறி காரணமாகவே. இதனையே அமெரிக்காவின் சிறீலங்காவிற்கான சமகால தூதரும் தேர்தல்களை நடாத்துவது மட்டும் ஜனநாயகம் அல்லஎன்று அண்மையில் உரைத்திருக்கவேண்டும்.

தேர்தல் என்பது ஜனநாயக தீர்ப்புக்களை சென்றடைய பாவிக்கப்பட வேண்டிய கருவியே ஒழிய அதுவே ஜனநாயகம் அல்ல. தமிழ்ச் சனங்கள் எப்படி ஆளப்பட வேண்டும் என இந்த உலகின் அரசியல் அறிவும் நிபுணத்துவமும் முடிவு செய்வதை நிராகரித்து இனரீதியாக புள்ளடிபோடும் சாமான்ய பெரும்பான்மை வாக்காளர் கையில் அதற்கான அதிகாரத்தை கொடுப்பதுதான் ஜனநாயகமா?
இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா ஆகட்டும், வெளிநாட்டு இராசதந்திரிகளாகட்டும் ஏதோ ஒரு முடிவு சென்றடைய வேண்டுமாயின் சர்வதேச அணுகுமுறையின் பிரகாரம் மகிந்தவை வழிக்கு கொண்டு வரவேண்டும்.
அதனை 2009 மே சர்வதே சபோரக் குற்ற விசாரணையில் ஆரம்பித்து 1983 யூலை, 1977 இன அழிப்புக்கள் ஊடாக 1958 வரை செல்ல வேண்டும். மலையக மக்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்த 1948 இல் நிறைவேற்றப் பட்ட சட்டம் வரை, குறிப்பாக 1972 அரசியலமைப்பு சட்ட நிறைவேற்றுதல் தொடர்பான ஒரு ஜனநாயக அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளப்பட வேண்டும்.
அதனடிப்படையில் ஒருநியாயமான தீர்ப்பு வெளியிலிருந்து வழங்கப்படவேண்டும். தனிச் சிங்களச் சட்டம் போன்றவை நல்லிணக்கத்திற்கான தடைச் சட்டங்கள் இல்லையா? கூட்டமைப்பினரின் இன்றைய இறுதிக் கோரிக்கைகள் மிகவும் குறைந்தபட்சமானவை. ஆவற்றைமட்டுப்படுத்தல் என்பதற்கு இடமேயில்லை.
முடிவாக இருட்டில் தேடுவதை உலகம் நிறுத்துமா? அல்லது தாயக ஈழக் கோட்பாட்டை சிதைக்க வடகிழக்கில் சிங்களக் குடியேற்றமும் தெற்கில் தமிழர் வாழ தற்காலிக அனுமதியும் என்ற கபடம் தொடருமா? என்பதை இன்று சர்வதேச தளத்தில் தொடரும் தமிழர் சிங்களவர் தரப்புக்களின் கயிறு இழுவையிலிருந்து விலகி நிற்கும் புலம் பெயர்ந்தநாட்டுத் தமிழர்களின் விவேகத்திலேயே தங்கியுள்ளது.
அதாவது தமிழரிற்கான அரசியற் கொடுப்பனவுகள் ஒரு சர்வதேச நிபுணத்துவ கணிப்பீட்டுத் தீர்ப்பிற்குள் தள்ளப்பட வேண்டுமே ஒழிய தற்காலிக பெரும்பான்மை தீர்விற்குள் அல்ல. வேண்டியது மனித உரிமை மற்றும் ஜனநாயக விழுமிய ரீதியிலான தீர்ப்பே ஒழிய சிறீலங்காவின் பெரும்பான்மையின் தீர்வல்ல.
சீனா தொடர்பில் தன்னையே காக்க முடியாத கிருஸ்ணா தமிழராகிய நம்மைக் காப்பாற்றுவார் என்று நாம் நம்பாவிடினும் இந்திய அணுசரணையே இன்றைய உலகின் இந்து சமுத்திர வாசல் என்பதால் ஓலமிடுகிறோம்.
ரோஜாவின் ராஜா முதல் அன்னை இந்திராவரை தொழுதோம். அழுதோம். மகிந்தவே இந்தியாவின் துணையோடு அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் எதிர்கொள்வேன் என்பதால் எழுதுகிறோம். வாலியை அன்று மறைந்திருந்து கொன்றதும் நீர் முள்ளிவாய்க்காலில் புலியை அழித்ததும் நீர். கிருஸ்ணரே! மகிந்தவை மார்ச் மாத மனித உரிமைச் சிக்கலிருந்து காக்கப் போகிறீரா ?அல்லது அழிக்கப்படும் தமிழரைக் காக்கப் போகிறீரா?

Geen opmerkingen:

Een reactie posten