தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் செனட் சபையொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
உத்தேச செனட் சபை வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் செனட் சபையொன்றை அமைக்கும் திட்டத்தை நிராகரிப்பதாகவும், உத்தேச செனட் சபைக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.
இதேவேளை செனட் சபையொன்றை அமைப்பதன் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் நிரந்தர தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பிலிருந்து விடுபட்டு செல்வதற்காகவே அரசாங்கம் செனட் சபையொன்றை உருவாக்கும் யோசனையை முன்வைத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அரசாங்கம் காலத்தை வீண்விரையம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கையில் செனட் சபையை நிறுவுவது தொடர்பான யோசனை மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அது முழுமையாக தயாரிக்கப்பட்ட சட்டமூலமல்லவென குறிப்பிட்டுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, சர்வகட்சி பிரதிநிதிகளினால் உத்தேச செனட் சபை தொடர்பில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten