தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 januari 2012

பரமசிவன் கழுத்தில் இருந்தால் எதையும் பேசலாமோ இதயச்சந்திரன்???


இந்திய இலங்கை நலன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் கிருஷ்னா !
23 January, 2012 by admin
- இதயச்சந்திரன்

பேரினவாதத்தின் மரபு வழிச் சிந்தனை முறைமையில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. எப்பாடுபட்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுவார்த்தை நாடகத்தை நீடிப்பதையே அரசு விரும்புகிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கூட்டமைப்பு நிராகரித்தவுடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு குறித்தான அரசின் கடும்போக்கு தீவிரமடைந்து செல்வதை அவதானிக்கலாம். மத்திய மாகாண சபைகளுக்கான உறவுப் பாலமாக �செனட் சபை' அமையுமென்கிறார் அரசின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. இரண்டாவது சபையொன்று அமைக்கப்பட வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த பரிந்துரையையே செனட் சபை என்கிறார் அமைச்சர்.

அதேவேளை, இந்திய வெளிநாட்டமைச்சர் கிருஸ்ணாவின் விஜயத்தோடு அரசின் நிலைப்பாடு இறுக்கமடைவதைக் காணலாம். இலங்கை -இந்திய உறவு ஆழமானது. அகலமானதென நீட்டி முழக்கும் இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இந்தியா தம்பக்கம் இருப்பதாக சர்வதேசத்திற்குப் புரிய வைக்க முயற்சிக்கிறார் போலிருக்கிறது. கிருஸ்ணனின் இந்த தூது, பாண்டவர்களுக்கு ஐந்து ஊர், ஐந்து வீடுகள் பெற்றுத் தருவதற்காக மேற்கொள்ளப்படவில்லை. மாறாக 5 பில்லியன் டொலர்களை எட்டியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க, மார்ச் மாதம் உருவாக்க உத்தேசித்துள்ள �சீபா' ஒப்பந்தத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதற்கான விஜயமாகவே பார்க்க வேண்டும்.

இலங்கை இந்தியாவிற்குமிடையிலான இருதரப்பு உறவானது வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததெனக் கூறும் எஸ்.எம். கிருஸ்ணா, பொருளாதார ஒத்துழைப்பிற்கான பரந்துபட்ட கட்டமைப்பொன்று அவசியமென்கிறார். மேலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பயனுள்ள பரிந்துரைகள் இருப்பதாகவும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு நல்லதொரு நகர்வென்றும் கூறுகின்றார். அதேவேளை, அலரி மாளிகையில் தைப்பொங்கலைக் கொண்டாடிய அமைச்சர் கிருஸ்ணா, வட பகுதிக்கும் சென்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை ஒன்றிற்கான உபகரணங்கள் கையளிப்பு, பாடசாலை மீள் திறப்பு, இடம்பெயர்ந்தோருக்கு சைக்கிள்கள் அன்பளிப்பு, நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குதல் போன்ற நீண்ட நிகழ்ச்சி நிரலோடு அவர் தனது தமிழருடனான உறவினை மேம்படுத்தியுள்ளார்.

இவை யாவும் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் உறவினை வெளிப்படுத்தும் வழமையான சடங்குகளே. ஆனாலும் இலங்கை அரசோடு இந்தியா மேற்கொண்ட ஐந்து புரிந்துணர்வு (MOD) ஒப்பந்தங்களை நோக்கினால், அவை சீனாவுடனான ஒப்பந்தங்களை விட மிகச்சிறியளவு பெறுமதிமிக்கதாக இருந்தாலும் சைக்கிள்களை வழங்குவதைவிட பெரிதாகவே தென்படுகிறது.
350 மீற்றர் உயரமான தொலைத்தொடர்புக் கோபுரம், அனல் மின் நிலையம், எண்ணெய் சேமிப்பு குதம், இரண்டாவது சர்வதேச விமான நிலையம், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, வட பகுதி வீதிப் புனரமைப்பு மற்றும் கொழும்புத் துறைமுகத்தில் பண்டங்களைக் கையாளும் வசதிகள் போன்ற சீனாவின் உதவிகளோடு ஒப்பிடுகையில், தம்புள்ளையில் 633 மில்லியன் டொலர் செலவில் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் நீர் விநியோகத் திட்டம், கையளவு என்றே கூற வேண்டும்.

இந்தியாவோடு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்பு, விவசாயம், வட பகுதி ரயில் சேவைக்கான பாதை அமைத்தல் என்பன உள்ளடங்குகின்றன. ஆனாலும் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் 13 டீசல் இயந்திரங்களை சீனா வழங்கப் போகிறது. ஏற்கெனவே �சீபா' ஒப்பந்தத்திலுள்ள பல முதலீட்டுக்கான துறைகள், பாரியளவில் சீனாவிடம் சென்றடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது. அதாவது 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பல சரத்துகளை 18 ஆவது சட்டம் விழுங்கியது போன்று, முழுமையான இருதரப்பு பொருளாதார உடன்பாடானது (CEPA), அரைகுறையான இருதரப்பு பொருளாதார உடன்பாடு என்கிற நிலைக்குத் தாழ்ந்து விட்டதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இருப்பினும் தனது இறுதி முயற்சியை இந்தியா கைவிடவில்லை. இருப்பதையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென கங்கணம் கட்டிச் செயற்படுகிறது.

இந்நிலையில், தமிழர் தரப்பின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசின் மீது அழுத்தங்களை இந்தியா மேற்கொள்ளுமா என்கிற கேள்வி எழுகிறது.
அத்தோடு யாழ். மாவட்ட பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் விடுக்கும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்கிற வேண்டுகோளை, இந்தியா பரிசீலிக்குமா எனத் தெரியவில்லை.
இந்தியாவின் பிராந்திய மற்றும் பூகோள நலன்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், இன முரண்பாட்டுத் தளத்தில் மூன்றாம் தரப்பாக அது வருமா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேவேளை, மாகாண சபைக்கு, காணி, காவற்துறை அதிகாரம் வேண்டுமெனக் கேட்டால் தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்கிறது அரசு. இந்த இலட்சணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவேன் என இந்திய அமைச்சரிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார் ஜனாதிபதி.

அதனை வரவேற்ற கூட்டமைப்பு எம்.பி. ஒருவர், இந்தியாவிடம் அரசு உறுதியளித்துள்ளதால் 13 ஆவதிலுள்ள காணி, காவல்துறை பற்றிப் பேசாமல் 13+ பற்றி அரசுடன் பேசுவோமென வியாக்கியானமளிக்கிறார். ஆகவே, உள்ளக சுய நிர்ணய உரிமை, சமஷ்டி என்பன மாகாண சபையோடு சமரசம் செய்துவிடும் போல் தெரிகிறது. சிற்றூழியர் ஒருவரைக் கூட நியமிக்கும் அதிகாரமற்ற கிழக்கு மாகாண சபை போன்ற தொரு கட்டமைப்பை வடக்கிலும் உருவாக்கவே அரசு முனைவதைக் காணலாம். தீர்வு காண வேண்டுமென்கிற அக்கறை இலங்கை அரசுக்குமில்லை. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்கிற எண்ணம் இந்தியாவிற்குமில்லை. அத்தோடு கூட்டமைப்பின் அமெரிக்க மற்றும் தென்னாபிரிக்கப் பயணங்கள், இலங்கை அரசிற்கு மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதென்கிற விடயத்தை அவதானிக்கும்போது ,இந்தியாவிற்கும் அது சிக்கலை ஏற்படுத்துமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இலங்கை அரசைப் பொறுத்தவரை, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தமது கழுகுப் பார்வையை திருப்பப் போகிறோமென அண்மையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிய விடயம், இந்திய அரசோடு அதிகம் இணைந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை அதற்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம். இருப்பினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்கும் கூட்டமைப்பானது, சுயாதீன போர்க்குற்ற விசாரணை தேவையென அழுத்திக் கூறுவதும், பேச்சு மூலம் அரசு எம்மை ஏமாற்றினால் சாத்வீக வழியில் மக்களை அணி திரட்டி போராடப் போவதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அறைகூவல் விடுப்பதும் அரசின் கோபத்தை கிளறிவிட்டதென ஊகிக்க இடமுண்டு. பேச்சுவார்த்தை மேசையில் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்காமல் அரசு தவிர்த்த விடயத்தில், நாடாளுமன்றத் தெரிவுக் குழு விவகாரத்தோடு போர்க்குற்ற விசாரணை குறித்தான கருத்துக்களும் வெளிநாட்டு விஜயங்களும் அடங்கும்.

அதேவேளை, வடக்கிலிருந்து படை முகாம்களை அகற்றமாட்டோமெனக் கூறும் அரசு, அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு என்கிற எத்தகைய சொல்லாடல்கள் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பேசப்பட்டால் அதனை விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகப் பார்க்கும் போக்கினை கடைப்பிடிக்கின்றது. ஆகவே தனது பிராந்திய நலனைக் கைவிட்டு, ஒடுக்குமுறைக்குள்ளாகும் தமிழ் பேசும் தரப்பிற்காகப் பேச அல்லது அவர்களின் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தை ஆதரிக்க இந்தியா முன்வருமா? புலிகளின் தூரப் பார்வையற்ற தன்மையால் தான் இந்தியா எம்மிடமிருந்து விலகி இலங்கை அரசோடு கைகோர்த்து நிற்கிறது என்று எவராவது கற்பிதம் கொண்டால் இந்திய நலன் குறித்த புரிதல் குறைபாடாகவே அப் பார்வை இருக்கும். இரு தினங்களுக்கு முன்பாக தமிழ் நெட் இணையத்திற்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் புதிய மக்கள் இராணுவத்தை (NPA) கட்டியமைத்தவருமான பேராசியர் ஜோசே மரியா சிசன் (Jose Maria sison) வழங்கிய நேர்காணலில் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் தமிழ் தேசமானது தமது இறைமையை வென்றெடுப்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்பதே அந்தப் போராட்ட அனுபவமிக்க மனிதனின் கோரிக்கையாக இருந்தது.
ஆகவே, சைக்கிளும் வீடும் தந்து, தூதரகத்தையும் வங்கியையும் திறந்து, தமிழர் பிரச்சினையைத் தீர்க்கலாமென இந்தியா எத்தகைய நகர்வுகளை மேற்கொண்டாலும் அல்லது நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் செல்ல வேண்டுமென கூட்டமைப்பை நிர்ப்பந்தித்தாலும், இறுதியில் இந்தியாவை பகைக்கவும் கூடாது ஆனால், நம்பவும் கூடாது என்கிற முடிவிற்கே தமிழ் மக்கள் செல்வார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten