தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 maart 2012

தமிழ் பெண்ணின் மானத்தில் சுட்ட இந்திய மிருகம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 13) – நிராஜ் டேவிட்!


 [ நிராஜ் டேவிட் ]
ஈழத்தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் முள்ளிவாய்காலில் புரிந்திருந்த கொடுமைகள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரங்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உலகமே ஒன்று திரண்டு தமிழருக்காக பச்சாத்தாபப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் நடுவண் அரசு மாத்திரம் சிங்களம் மேற்கொண்ட அந்தக் கொலைவெறி ஆட்டத்திற்கு ஆரம்பத்தில் வக்காலத்து வாங்கியிருந்தது.
    இலங்கைப் படைகளின் படுபாதகச் செயல்களைக் கண்டிக்கும் நடவடிக்கையில் மிகுந்த தயக்கத்தையே வெளிப்படுத்தி வந்தது.
    தமிழ்நாட்டில் இருந்து எழுந்த மிதமிஞ்சிய அழுத்தங்கள், அமெரிக்காவின் இராஜதந்திர அழுத்தங்கள் போன்றனவற்றைத் தொடர்ந்து கொஞ்சம் யோசித்து, இழுத்தடித்துதான் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவு என்கின்ற ஒரு சம்பிரதாய நகர்வை நோக்கி வேண்டா வெறுப்பாக நகர ஆரம்பித்துள்ளது.
    அதற்கு அரசியல்;, இராஜதந்திரம், அயல் நாடு, என்று பல காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும் இதேபோன்ற பல கொடுமைகளை ஈழத் தமிழருக்கு எதிராக இந்தியாவும் மேற்கொண்டுள்ளது என்பதும் ஒரு முக்கிய காரணம்.
    ஆம். முள்ளிவாய்க்காலில் இலங்கை மேற்கொண்டது போன்று மனிதத்திற்கு எதிரான மிகப் பெரிய கொடுமைகளை இந்தியாவும் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஈழ மண்ணில் அரங்கேற்றியிருந்தது.
    அப்பாவித் தமிழர்களைக் கொன்றொழித்தது, தமிழ் பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது, சரணடைந்த போராளிகளைச் சுட்டுக்கொலை செய்தது, பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டு வீசியது. 
    இப்படி இந்தியாவினால் ஈழத் தமிழர் அனுபவித்த அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அந்த அவலங்களைத்தான் தற்பொழுது இந்தத் தொடரில் மீட்டுக்கொண்டிருக்கின்றோம்.
    கோர தாண்டவம்
    ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் மிகவும் கொடூரமானவை. எழுத்தில் எழுத முடியாதவைகளும் கூட.
    ஈழத்தில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோர தாண்டவங்கள் பற்றி பல சம்பவத் தொகுப்புக்கள் வெளியாகியிருந்தன. 'அம்மானைக் கும்பிடுகிறானுகள்' என்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்பொன்று வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
    அதேபோன்று இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான மற்றொரு உண்மைச் சம்பவத் தொகுப்பொன்று, 'வில்லுக்குளத்துப் பறவை' என்ற பெயரிலும் வெளியாகி இந்தியாவை தலைகுனிய வைத்திருந்தது.
    அந்தத் தொகுப்பில் வெளியிடப்பட்டிருந்த ஒரு உண்மைச் சம்பவத்தை இந்தத் தொடரில் பகிர்ந்து கொள்ளுவது, ஈழ மண்ணில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான ஒரு சரியான பார்வையைப் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
    உண்மைச் சம்பவம்:
    அந்தச் சம்பவம் 06.11.1987 இல் இடம்பெற்றது.
    கீரிமலைக் கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவமே 'எங்கள் கடல் செந்நீராகிறது' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.
    அந்த உண்மைச் சம்பவம் இதுதான்:
    மருமகன் பஞ்சாட்சரத்தின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து இந்திய வெறியர்கள் சுடுவதைப் பார்த்த புவனேசுவரி, கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
    'அவன் அம்மன் கோயில் குருக்கள் பாருங்கோ... அவனைச் சுடாதேயுங்கோ'  என்று கெஞ்சியும் பலனில்லாமல் போயிற்று. கணவனை இழந்தவளாய், 'அம்மா' என்று கதறிக்கொண்டே தனது தோளில் சாய்ந்த மகள் ஜெயந்தியைக் கையால் பற்றிப் பிடித்தபடி வானம் இடியக் கத்தினாள்.
    மாரிகாலக் கொடுங்காற்றில் கடலின் அலைகள் வெறிபிடித்துக் கூத்தாடின. அமைதியாக கீரிமலைக் கடற்கரையில் 1987ம் ஆண்டு நவெம்பர் மாதம் 6ம் திகதி காலை 8 மணிக்கெல்லாம் அந்த வெறிக்கும்பலின் மனித வேட்டை தொடங்கிற்று.
    ஜெயந்தியின் தங்கச்சி வசந்தி நடுங்கி ஒடுங்கிப் போனாள். சில்லென்ற குளிர் காற்றில் கூட உடல் வியர்த்துக் கொட்டியது. அவர்களை வளைத்து ஐம்பது இந்தியப் படை முரடர்கள்.
    தாயையும் அந்த இரண்டு பெண் பிள்ளைகளையும் வீட்டுக்குச் செல்லுமாறு ஒரு வெறியன் கொச்சை ஆங்கிலத்தில் கத்தினான். அவர்கள் வீடு நோக்கி நடந்தார்கள். கூடவே அந்த முரட்டுக் கும்பலும்....
    அழகான கீரிமலைக் கடற்கரை ஓரத்தில் இருந்த புவனேசுவரியின் வீடு ஓரளவு வசதியானது. அப்பிரதேசத்தில் மிகவும் செல்வாக்கான குடும்பம். புவனேசுவரி படித்தவள். விதவை. நாற்பத்தெட்டு வயது ஆகின்றது. இரண்டு பெண் பிள்ளைகள்- மூத்தவள் ஜெயந்திக்கு 22 வயது, வசந்தி இரண்டு வயது இளையவள். ஒரு மகன் இருக்கின்றான் - உடல் ஊனம்... மூளை வளர்ச்சி இல்லை.
    ஜெயந்திக்கு அண்மையில்தான் பஞ்சாட்சரத்துடன் திருமணமாகி இருந்தது. பஞ்சாட்சரம் அம்மன் கோயில் பூசாரி. அமைதி காக்கவென வந்த இந்தியப் படையினர் அந்த அப்பாவியை அன்று அநியாயமாகச் சுட்டுக்கொன்றிருந்தார்கள்.
    ஜெயந்தி அழுதுகொண்டே அந்த இந்தியப் படைக்கும்பலுக்கு நடுவில் நடந்தாள். புவனேசுவரிக்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
    முப்பது ஆண்டுகளுக்கு முந்திய நினைவு.
    1958 ஆம் ஆண்டு, சிங்கள இன வெறியர்கள் தமிழ்க் குழந்தைகளை கொதிக்கும் தார்ப் பீப்பாக்களில் போட்டுக் கொன்றதும், வீடு வீடாகத் தமிழ்ப் பெண்களைக் கற்பழித்ததும் கொடிய சேதிகளாகிக் கொண்டிருந்தபோது புவனேசுவரிக்குப் பதினெட்டு வயதுதான்.
    வரலாற்றில் தமிழீழத்தின் தன்மான உணர்வைத் தூண்டிவிட்ட முதல் நிகழ்வுகள் அவை.
    கொடுமைக்கு வேர் முளைக்கத் தொடங்கிய காலம்.
    இலங்கையின் தலைநகரான கொழும்பிற்குத் தெற்கே பாணந்துறை என்ற சிங்கள ஊரில், ஒரு பழைய சைவக்கோயிலின் குருக்களைச் சிங்கள வெறியர்கள் மூலஸ்தானத்தில் வைத்தே எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துச் சாம்பலாக்கியபோது, 'கடவுளே இல்லையா' என்று அவளது வீட்டில் இருந்தவர்களெல்லாம் பேசிக்கொண்டது அவளுக்கு இன்றும் நினைவை விட்டு அகலவில்லை.
    அப்பொழுது தீ வைத்தவர்கள் - பௌத்த சிங்கள வெறியர்கள்.
    ஆனால் முப்பது ஆண்டுகளின் பின்பு இன்று... இந்து சமயத்தின் பாதுகாவலர்கள் அல்லவா அம்மன் கோயில் குருக்களைப் பிணமாக்கிப் போட்டிருக்கின்றார்கள்.
    பாணந்துறைக் குருக்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கொன்ற சிங்களப் பௌத்த வெறியர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்ற வந்தவர்களாம் - பஞ்சாட்சரக் குருக்களைக் கொன்ற பாரதத்தின் இந்துமதப் புண்ணியவான்கள்...
    புவனேசுவரி பற்களைக் கடித்துக்கொண்டாள்...
    இந்தியப் படைவீரர்கள் புடை சூழ புவனேசுவரியும், இரண்டு பெண்பிள்ளைகளும் வீட்டை வந்தடைந்தார்கள்.
    புவனேசுவரியின் கூந்தலைப் பிடித்து இழுத்து, வீட்டினுள்ளே முரட்டுத்தனமாகத் தள்ளினான் ஓர் இரக்கமற்ற தடியன்.
    இரண்டு பெண் பிள்ளைகளும் நடுங்கிக்கொண்டே பின்னால் போனார்கள். வாசலில் மனவளர்ச்சி குன்றிய அந்த ஊனப்பிள்ளை கைகளைத்தட்டி தன்பாட்டில் சிரித்துக்கொண்டிருந்தது.
    அந்த அப்பாவியை ஒரு 'இந்திய மிருகம்' சப்பாத்தால் உதைத்து கீழே தள்ளியது.
    'நகைகள் எங்கே வைத்திருக்கின்றாய்? எடு' அரைகுறை ஆங்கிலத்தில் புவனேசுவரியை நோக்கி ஓர் அதட்டல். நல்ல ஆங்கிலத்திலேயே அவள் பதில் சொன்னாள்: 'நாங்கள் பெரிய பணக்காரர்கள் அல்ல, எங்களிடம் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை'
    அவர்கள் 'ஓ' என்று சிரித்தார்கள்.
    வீடு அமளிதுமளி ஆயிற்று. அலுமாரி - பெட்டி - மூட்டை முடிச்சுக்களெல்லம் உடைந்து, கிழிந்து சிதறின. புனித இந்தியப் படைகளின் பைகளில் பாதி நிரம்பிற்று...
    வெளியே தெருவில் ஜீப் வண்டியில் பறந்த வெள்ளைக்கொடியைக் கழட்டி - உள்ளே எதையோ மூடி மறைத்து முடிச்சுப் போட்டான் ஒருவன்.
    ஒரு விதவையின் வீட்டை மொட்டை அடித்து முடித்த திருப்தி.
    இனி, கடற்கரைக்குப் போகலாம்.. என்று கொச்சை ஆங்கிலத்தில் கத்திக்கொண்டே புவனேசுவரியின் தோளில் ஓங்கித் துப்பாக்கியால் அடித்தான் ஒரு முரட்டு ஆசாமி.
    நடுங்கிக்கொண்டே அவர்கள் கடற்கரையை நோக்கி நடந்தார்கள்.
    கடற்கரை நெருங்க நெருங்க - பஞ்சாட்சரம் சுருண்டு கிடப்பது தூரத்தில் தெரிய - ஜெயந்தி தாயின் தோள்களை இறுகப் பற்றிக்கொண்டு தேம்பினாள். சற்றுத் தள்ளி வேறு சிலரும் விழுந்து கிடப்பது தெரிந்தது.
    பெரும் எண்ணிக்கையில் இந்தியப் படையினர் கடற்கரையில் குவிந்து இருப்பது தெரிந்தது.
    அருகில் சென்ற போது புவனேசுவரியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் தம்பித்துரை அங்கு இறந்து கிடப்பதையும், அருகில் அவனது மனைவி ஸ்ரீதேவி கைக்குழந்தையோடு வெறி பிடித்தவளாய் கதறிக்கொண்டிருந்ததையும் கண்டாள். அவர்களது பிள்ளைகளான சிவாஜினியும், சுபாஜினியும், ~~அப்பா||, ~~அப்பா|| என்று புழுவாய்த் துடித்துக்கொண்டிருந்தார்கள்.
    எத்தனை கொடிய உலகம்..
    தன் கண்களுக்கு முன்னாலேயே ஜெயந்தியையும், வசந்தியையும் முரட்டுத்தனமாக் சேலை களைந்து வெறியர்கள் நிர்வாணமாக்கிய போதும் - தாயாக அல்ல, ஒரு குழந்தையாக முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் புவனேசுவரி.
    ஒரு முரடனின் இரும்புக் கைகள் ஜெயந்தியை ஆவேசமாகப் பற்றி இழுத்து எறிந்தன. 'போடி உன் புருஷனைப் போய் தழுவு'  என்று கூறி பிணமாகக் கிடந்த பஞ்சாட்சரத்தை நோக்கி அவளைத் தள்ளினான்.
    அதற்குள்... ஜெயந்தியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் துப்பாக்கியை வைத்து இன்னொரு பாவி, தமிழனின் மானத்தையே சுடுவது போல...
    பிணமாய்ச் சுருண்ட ஜெயந்தியின் மேல், 'அக்கா' என்று கத்திக்கொண்டு ஓடிப் போய் விழுந்தாள் வசந்தி.
    அவளுக்கும் அதே இடத்தில் துப்பாக்கிக் குண்டுகள்...
    புவனேசுவரி மயங்கி விழுந்தாள்.
    கீரிமலைக் கடல் ஆவேசமாக இரைந்து கத்தியது. கரையின் நீள அலைகள் பிணங்களை நனைத்து மீள்கின்றன. தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள்...
    கண்களைத் திறந்தபோது அந்த மனித விலங்குகள் ஸ்ரீதேவியைச் சுட்டுப் பிணமாக வீழ்த்துவதையும் - அவள் கையிலிருந்து விழுந்த பிஞ்சுக் குழந்தை அலைகளுக்கு நடுவில் 'அம்மா'  என்று கத்துவதையும் புவனேசுவரி கண்டாள்.

    அடுத்த நொடியில் - ஜெயந்தியும், வசந்தியும் கொல்லப்பட்டது போலவே தம்பித்துரையின் இரண்டு பெண் பிள்ளைகளும் அதேவிதமாக நிர்வாணமாக்கப்பட்டு - அதேவிதமாக... எத்தனை கொடிய நிகழ்வுகள்.

    இரண்டு துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்ந்து கேட்டன. புவனேஸ்வரி நிலத்தில் கிடந்தபடியே ஓரக்கண்ணால் பார்த்தாள்... ஒன்று கோணேஸ் - அடுத்தது தவநேசன் தம்பித்துரையின் இரண்டு ஆண் பிள்ளைகள். அப்பொழுதுதான் சுடப்பட்டு நிலத்தில் வீழ்ந்திருந்தார்கள்.
    புவனேசுவரி செத்தவள் போலவே மணலில் படுத்துக்கிடந்ததால் அந்தக் கொலை பாதகர்கள் கண்களில் இருந்து தப்பிக்க முடிந்தது.
    ஈழ மண்ணில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோர தாண்டவங்களுள் மேற்கூறப்பட்ட உண்மைச் சம்பவம் - ஒரு உதாரணம் மட்டும்தான்.
    இதுபோன்று ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உண்மைச் சம்பவங்கள், எழுத்து வடிவில் புத்தகங்களிலும், நினைவுகளாக ஈழத்தமிழர் நெஞ்சங்களிலும் அழியாத ரணங்களாகவே பொறிக்கப்பட்டிருக்கின்றன.
    அவலங்கள் தொடரும்... 
    ..
    nirajdavid@bluewin.ch நிராஜ் டேவிட்
    முன்னைய பதிவுகள்

    Geen opmerkingen:

    Een reactie posten