2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அரசாங்கம் பெற்ற வெற்றிக்கு, எந்தவொரு உலக நாடும் உதவி செய்யவில்லையென ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். அத்துடன், யுத்த வெற்றி உள்நாட்டவர்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் பெறப்பட்டதாகவே வெளிக்காட்ட முயற்சிக்கின்றனர்.
எனினும், யுத்தத்தின் இறுதியில் அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு எவ்வகையிலான தொடர்புகளை இலங்கையுடன் பேணிவந்தது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவினால் ஸ்தாபிக்கப்பட்ட ''மென் ஸ்டீம்'' அணியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தத் தகவல்களை எமது இணையத்தளத்திற்கு வழங்கினார்.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை அமெரிக்காவில் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினரால் விசேட அதிரடிப்படைப் (Task Force) பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர, அந்நாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா ரைஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படையணியின் ஒரு பிரிவு மறைமுக செயற்பாடுகளில் (Under Cover Agents) ஈடுபட்டு வந்தனர். விமானங்களைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வதற்காக கனடாவிலிருந்து தரைவழியாக இரகசியமாக நியூயோர்க் வந்திருந்த, விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை இந்தப் படைப் பிரிவினர் கைதுசெய்திருந்தனர்.
இந்தக் கைது 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பின்னர் அவர்கள் வசமிருந்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
அந்நாள் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்த நெருக்கமான உறவுகளுக்கமையவே அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக, விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதில் ஒருகட்டமாக இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளுக்கமைய ‘‘US-Hawai Pacific Fleet’’ படையணியின் ‘‘7th Fleet-USS Blue Ridge’’ கப்பல் இந்து சமுத்திரத்தில் நங்கூரமிட்டிருந்தது. இந்தக் கப்பலிலிருந்து விடுதலைப் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதுடன், இதிலிருந்து பெறப்பட்ட செய்மதிப் புகைப்படங்கள் அமெரிக்க தூதரகத்தின் ஊடாக இலங்கை அரசாங்கப் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் உதவியுடனேயே விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டன. அத்துடன், புலிகளுக்கான ஆயுத விநியோகமும் பெருமளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட செய்மதிப் புகைப்படங்களை (Satalite Images) ஆராய்ந்து செயல்படுத்தக் கூடிய அதிகாரியொருவர் அப்போது இலங்கை பாதுகாப்புத் தரப்பில் இருக்கவில்லை. இதனால், உடனடியாக செயற்பட்ட அமெரிக்கத் தூதரகம், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் கெளும் மத்துமகே என்ற அதிகாரிக்கு இதுதொடர்பான புலமைப்பரிசில் ஒன்றை ''கொலராடோ மிலிடரி அகடமி'' இல் பெற்றுக்கொடுத்தது.
இதனையடுத்து 700 கடல்மைல் தொலைவிலுள்ள ஆழ்கடலில் நடைபெற்றுவந்த விடுதலைப் புலிகளின் கப்பல் போக்குவரத்தை இலங்கை இராணுவத்தினரால் துல்லியமாக கணிக்க முடிந்துள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கடலில் முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகள் இலகுவாக திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் புலிகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் இராணுவம், இலங்கைக் கடற்படைக்கு வழங்கியுள்ளது.
இதனை செயற்படுத்துவதற்கான திட்டங்களையும், வியூகங்களையும் வகுப்பதற்குத் தேவையான பயிற்சிகளையும் அமெரிக்காவே வழங்கியுள்ளது. இதற்காக அந்நாள் கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட குழுவினருக்கு அமெரிக்கா ஒரு மாத கால விசேட பயிற்சியொன்றை வழங்கியுள்ளது.
இந்த விசேட பயிற்சிகளின் பின்னர் 700 கடல்மைல் தொலைவில் புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கவும், அதனை முறியடிப்பதற்கும் தேவையான உதவிகளை இந்து சமுத்திரத்தில் நங்கூரமிட்டிருந்த அமெரிக்காவின் ‘‘7th Fleet-USS Blue Ridge’’ கப்பல் முழுமையாக இலங்கைக் கடற்படைக்கு வழங்கியிருந்தது.
இலங்கை கடற்படையினர் 2008 ஆம் ஆண்டு நம்வபர், டிசம்பர் மாத இடைவெளியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல ஆயுதக் கப்பல்களை கடலில் தாக்கியழித்திருந்தனர்.
இவ்வாறு தாக்கியழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 07, 08 கப்பல்களின் ஆயுதங்கள் அந்த இயக்கத்திற்குக் கிடைத்திருந்தால் இறுதிக் கட்ட யுத்தத்தின் விளைவுகள் பெரும்பாலும் வேறுவிதமாக இருந்திருக்கும் என எமது இணையத்தளத்திற்கு தகவல் தந்த குறித்த சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
இதனைத்தவிர, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேல், பிரித்தானியா ஆகிய நாடுகள் வழங்கிய உதவிகள் குறித்த விரிவான தகவல்களை இனிவரும் காலத்தில் வெளியிட ''மேன் ஸ்ரிம்'' அணியில் இருந்த சிலர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தமது அணியின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்ச்சியாக நன்றி தெரிவித்து வந்தார். இந்த நாடுகள் உதவி வழங்கவில்லையெனில் யுத்தத்தை வெற்றிக் கொண்டது சாத்தியமாகியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவற்றை மறந்துபோன தற்போதைய மகிந்த ராஜபக்ஷ நிர்வாகம், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயிற்சிகளை இலங்கை இராணுவத்திடம், வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது நகைப்பிற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நாடுகளுடன் முரண்பட்டு, நெருக்கடியான நிலையை மகிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திக்கொண்டுள்ளமை எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். lankanewsweb.com |
Geen opmerkingen:
Een reactie posten