தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 maart 2012

ஐ.நா தீர்மானம் சர்வதேச விசாரணைய ஏன் வலியுறுத்தவில்லை: TNPF !


இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அல்லது பரபரப்பாகக் காட்டப்பட்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மேற்படி தீர்மானம் உத்தேச பிரேரணையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தாமை தொடர்பில் எமது அதிருப்தியினை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் ஏற்கனவே பிரேரிக்கப்பட்டதனை விடவும் மிகவும் நலிதாக்கப்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளது.


நாம் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியாக இருக்க முடியாதென்ற இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கு முரணாக இருப்பதனால் அடிப்படையிலேயே தவறானதென்று சுட்டிக்காட்டி நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்திருந்தோம். அடிப்படையிலேயே தவறான இந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்ப்படுத்த வேண்டுமென்றும் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறும் விடயத்தில் உள்ளகப் பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்மெனவும் கோருவதோடு நின்றுவிடுவதாகவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசு போரின்போது தமிழ் மக்களுக்கெதிரான போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கெதிரான குற்றங்களையும் புரிந்திருக்கிறது என்பதை நிறுவுவது இனப்படுகொலை என்பதை நிறுவுவதற்குத் துணைபுரிவதாய் இருக்கவேண்டும் என்ற தமிழ் மக்களின் விருப்பை, வெறுமனே ஒரு அரசாங்க மாற்றத்திற்கான ஆயுதமாக மாத்திரமே சில சக்திகள் எடுத்தாள முற்படுகின்றன.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், இஸரேல் உள்ளிட்ட பல நாடுகளின் உதவியை மறைமுகமாகவும் நேரிடையாகவும் பெற்று தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்புப் போரை இலங்கை அரசு முன்னெடுத்தது என்பதை யாவரும் அறிவர்.

போரின் பின்னான அடுத்த கட்ட பூகோள அரசியல் நகர்வுக்கு முழு இலங்கைத் தீவையும் ஒரு கூறாகக் கருதி அதை முழுமையாகத் தமது ஆளுகைக்கு உட்படுத்தவிழையும் வல்லாதிக்க சக்திகள் தமக்கிடையேயான போட்டியின் தளமாக இலங்கைத் தீவில் பொருளாதார உள்நுழைவையும் போர்க்குற்றம் என்று மட்டுப்படுத்திய ஒரு அச்சுறுத்தலையும் பயன்படுத்துகின்றன.
எனவே, இந்த அணுகுமுறை எம்மீதான ஒரு பொறியாகவும் மாறிவிடாது பாதுகாத்தவாறே எமது செல்நெறியை நாம் வரித்துக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படையிலேயே இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நாடிநிற்கும் மேற்குலகின் தற்போதைய நிலைப்பாட்டை நாம் நோக்கவேண்டும்.

வெற்று நம்பிக்கைகளுக்கு அப்பால் பாதகமான விழைவுகள் எவ்வாறாக அமையலாம் என்ற கரிசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது அணுகுமுறையை வகுக்கப்பட்டிருக்கவேண்டும்.
எனவே, இது வெற்றியின் பாதையில் முதல் படி என்ற போலியான நம்பிக்கையை எம் மக்கள் மனதில் விதைப்பது தவறு என்பதே எமது கருத்தாகும். எமது தேசத்தின் அங்கீகாரம் நோக்கிய பயணத்தில், இலங்கையில் எத்தனையோ அரசாங்க மாற்றங்களையும், கமிசன்களையும் பயனற்ற பேச்சுவார்த்தை நாடகங்களையும் எம் மக்கள் பார்த்துவந்துள்ளனர். இலங்கைத் தீவில் தமக்கு சார்பான ஓர் ஆட்சி மாற்றத்தினைக் கொண்டுவர விரும்பும் மேற்குலகின் தற்போதைய அணுகுமுறையை நாம் எமது பட்டறிவினூடாக அவதானிக்கவேண்டும்.

குறிப்பாக பொருளாதார நெருக்கடிகள் ஊடாக தமக்குச் சார்பான ஆட்சியை இலங்கையில் எதிர்காலத்தில் உருவாக்கும் பட்சத்தில் இன்று சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி ஓர் தீர்மானத்தை நிறைவேற்றினால் அது பிற்காலத்தில் இலஙகையில் உருவாகக்கூடிய தமக்குச் சார்பான அரசுக்கும் தலைவலியாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே ந்ஐனிவாவில் சர்வதேச விசாரணையை மையப்படுத்தாமல் அதுவும் தொடக்க வரைபில் இருந்து மேலும் நீர்த்துப்போனதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏனெனில் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்று நடாத்தப்பட்டால் அதன் இறுதி விளைவாக தமிழ் தேசத்தின் இருப்பினை அங்கீகரிக்கும் வகையிலான தீர்வொன்றினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

தமிழ் மக்களின் ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவா சென்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படைகளை நிராகரித்து, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எவ்வாறானது என்பதை தெளிவாகப் பதிவு செய்திருந்தால் அது தமிழ் மக்களின் ஆணையின் பாற்பட்ட வரலாற்றுப்பதிவாக நிலைத்துநின்றிருக்கும். எம் மக்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கும் வலுச்சேர்த்திருக்கும். இத்தீர்மானம் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டிருந்தால் இலங்கை தீவில் மேற்குலகிற்கு சார்பான ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தமிழ் மக்களுக்கு நியாமானதும், தமிழ்த் தேசத்தின் இருப்பை அங்கீகரிக்கக் கூடியதுமான தீர்;வு ஒன்றை வழங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் நடைபெற்ற இன அழிப்புத் தொடர்பாக ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தாத வகையில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்; எதிர்காலத்தில் மேற்குலகிற்குச் சார்பான ஓர் ஆட்சிமாற்றம் இலங்கையில் ஏற்பட்டு, அவர்களது பூகோள அரசியல் நலன்கள் அடையப்படும்போது, தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கான விசாரணை என்பது ஜேனீவா தீர்மானத்தினுடன் முடக்கப்பட, தமிழ் மக்களது அரசியல் அபிலைசைகளும் 13ம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே ஜேனீவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானமானது, தமிழ் மக்களது எதிர்ப்பார்ப்புக்களையும், இனப்படுகொலைக்கான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையையும் உள்ளடக்காமல் அமைந்துள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கடுமையான அதிருப்தியினையும், ஏமாற்றத்தினையும் வெளிப்படுத்துகின்றது.

இந்நிலையில், எதிர்காலத்தில் நாம் முன்னெடுக்கவேண்டிய அணுகுமுறை எமது கோரிக்கைகள் ஜெனிவா தீர்மானத்தின் வரையறைகளுக்குள் முடக்கப்பட்டுவிடாத வகையிலும் எமது அரசியல் கோரிக்கை தொடர்பான ஐயந்திரிபற்ற வெளிப்படுத்தலை வெளிப்படுத்துவதாகவும் தாயகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர் செயற்படுவது அவசியமாகின்றது.


ஜி.ஜி.பொன்னம்பலம் செ.கஜேந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Geen opmerkingen:

Een reactie posten