தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 maart 2012

ஜெனிவா தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பு! நவநீதம்பிள்ளை கூட அனுமதியின்றி தலையிட முடியாது என்றும் இலங்கை அறிவிப்பு!


[ உதயன் ]
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் எமது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இது மனித உரிமை ஆணையாளருக்கும் பொருந்தும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முற்றாக எதிர்க்கிறது. இந்தத் தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு எத்தகைய புதிய வழி முறைகளையும் அரசு ஏற்படுத்தாது.
தொடர்ந்தும் தனது வழியிலேயே அரசு பயணிக்கும். சர்வதேச அழுத்தங்கள் அரசை ஒருபோதும் எந்த விதத்திலும் எந்தவேளையிலும் கட்டுப்படுத்த மாட்டா. எமது நாட்டு விடயங்களுக்குள் யாரும் எமது அனுமதி இன்றித் தலையிட முடியாது.
அது ஐ.நா. ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் பொருந்தும். அனைத்தையும் கையாளும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. எனவே ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் யாரும் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு ஜெனிவாத் தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்தது இலங்கை அரசு.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத்தொடரின்போது அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
 இதில் கலந்துகொண்ட அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ஜி.எல்.பீரிஸ், நிமால் சிறிபாலடி சில்வா, ரவூப் ஹக்கீம் இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கூட்டாகத் தெளிவுபடுத்தினர்.
ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்குத் தாம் கையாண்ட மூன்று வழிமுறைகள் என்னவென்பது குறித்தும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெளிவுபடுத்திய இலங்கை அரசு, எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தது.
இலங்கைக்கு ஆதரவளிக்க இருந்தபோதிலும் அதிஉச்ச அழுத்தம் காரணமாகவே எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட அரசு, இந்தியாவைத் தவிர, ஒட்டுமொத்த ஆசியாவும் தமது பக்கமே இருந்தது என்றும் பெருமிதமடைந்தது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜெனிவா மாநாட்டில் எத்தகைய முடிவு வந்தாலும் அதனை ஏற்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாம் பிரசாரப் பணிகளை முன்னெடுத்தோம்.
எமது நிலைப்பாட்டைப் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டன. இருப்பினும், அதி உச்ச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாகவே பிரேரணை நிறைவேற்றப்பட்டது. என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாம் பிரசார வழிமுறைகளை அதாவது ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை மூன்று வழிமுறைகளைப் பின்பற்றிக் கையாண்டோம். கொழும்பிலிருந்தவாறு பிரசாரத்தை முன்னெடுத்தது முதல் வழிமுறையாகும். ஜெனிவா சென்று நடவடிக்கைகளைக் கையாண்டது இரண்டாவது வழிமுறையாகும். அத்துடன், தலைநகரங்களுக்குச் சென்று நிலைமைகளைத் தெளிவுபடுத்தி ஆதரவைத் திரட்டியது மூன்றாம் கட்டமாகும்.
எமது இராஜதந்திர வழிமுறை சிறந்தமுறையில் அமைந்தது என்றே குறிப்பிடவேண்டும். ஏனெனில், மேற்குலகைச் சார்ந்த சவூதி, கட்டார், குவைத் ஆகிய நாடுகள்கூட பிரேரணையை எதிர்த்து வாக்களித்தன. அதுமட்டுமன்றி, ஆபிரிக்க நாடுகளும் எமக்குப் பக்கபலமாக இருந்தன. நாம் இவ்வாறான நடவடிக்கைகளை கையாண்டிருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கும்.
நாம் ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் அரச தலைவர்களுடன் பேசியபோது அவர்கள் எமது நிலைப்பாட்டை ஏற்றனர். உகண்டா, கொங்கோ உள்ளிட்ட மூன்று ஆபிரிக்க நாடுகள் எமக்கு ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டை எடுத்து இறுதிவரை உறுதியாக இருந்தன. மேலும் 5 ஆபிரிக்க நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 11 ஆபிரிக்க நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்தபடியாக முஸ்லிம் நாடுகளும் எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்கின. அழுத்தம் காரணமாக ஜோர்தான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே அந்நாடு இருந்தது. ஆசியாவைப் பொறுத்தமட்டில் இந்தியாவைத் தவிர, ஏனைய நாடுகள் பிரேரணையை எதிர்த்தன.
இந்தியாவின் முடிவு சரியோ, தவறோ இரு நாடுகளுக்குமிடையிலான உறவைப் பாதிக்காது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்தியாவின் அரசியல் நிலைமைகள், அந்நாடு முன்னெடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து நாம் நன்கு அறிந்துவைத்துள்ளோம். என்றார்.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, "ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் எமது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில்தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இது மனித உரிமை ஆணையாளருக்கும் பொருந்தும் '' எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:

போரின் பின்னரான காலத்தில் நாங்கள் பல்வேறு விதமான முன்னேற்றத்தை வெளிக்காட்டியுள்ளோம். அது போன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னேற்றங்களை வெளிக்காட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
முக்கியமாக நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வேலைத்திட்டங்களை எமது அரசு முன்னெடுக்கும். குறிப்பாக இலங்கைக்கு எதிரான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட முன்னர் நான் அங்கு உரையாற்றியிருந்தேன்.
நான் அன்று நிகழ்த்திய உரையுடன் இந்தப் பிரேரணையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. காரணம் எனது அந்த உரையில் நாங்கள் எவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்போகின்றோம் என்பது குறித்து விரிவாக விளக்கியிருந்தேன்.
முக்கியமாக இராணுவம் மற்றும் கடற்படைத் தரப்பு மேற்கொண்டுவரும் விசாரணைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான எமது வேலைத் திட்டம் குறித்து நான் எனது உரையில் விடயங்களை உள்ளடக்கியிருந்தேன். என்றார்.
அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இதே கருத்தையே வலியுறுத்தினர். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten