தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 maart 2012

இந்தியப் பிரதமரின் மன்றாட்டம் இலங்கை அரசின் இறுமாப்பு அதிகரிக்க காரணம்: விக்கிரமபாகு கருணாரத்ன !


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி, ஜெனீவா பிரேரணையில் இலங்கைக்கு பாதகம் ஏற்படாத வகையில் திருத்தம் செய்தோம் என மன்றாடுகின்றமையால் இலங்கை அரசின் இறுமாப்பு அதிகரித்துள்ளது என இடதுசாரி முன்னணியில் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் ஜெனீவா பிரேரணைக்கு ஆதரவளித்தோம். ஆனால் இலங்கைக்கு பாதகம் ஏற்படாத வகையில் திருத்தம் செய்தோம் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி மன்றாடுகிறார். தாலாட்டுகிறார்.
ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த மன்றாட்டத்தை தூக்கியெறிந்து விட்டது. உண்மையில் இந்தியா தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைப்பதை விரும்பவில்லை. இதுவே இந்த மன்றாட்டத்திற்கு காரணமாகும்.
இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையின் காணிகளையும் கடல் வளங்களையும் சுவீகரிப்பதிலேயே நாட்டம் கொண்டுள்ளன. எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தப் போவதில்லை.
இதனால் சர்வதேச ரீதியில் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளதாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டார்.
விசேடமாக கியூபாவுக்கு இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோத உண்மையான முகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten