தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 maart 2012

இலங்கை விவகாரத்தைக் கையாளும் கொள்கையை மாற்றுகிறது இந்தியா! இலங்கை அதிர்ச்சியில்..


[ உதயன் ]
இலங்கை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் இதுவரை காலமும் பின்பற்றிவந்த கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களைச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
காங்கிரஸின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் இலங்கை அரசின் உயர் மட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்த பின்னர் இலங்கை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து மிக நீண்டநேரம் பேச்சு நடத்தி இலங்கையின் கவலையை வெளியிட்டிருந்தார்.
அதேசமயம், தற்போதைய நிலைமைகள் குறித்து இந்திய மத்திய அரசின் உயர்மட்டப் பிரமுகர்களுடன் அவசர சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறும் இந்தச் சந்திப்பின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கோரிக்கை உடனடியாக இந்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டது. என்றாலும், அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லையென நம்பகரமாக அறியமுடிந்தது.
இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்த இந்தியா அந்தத் தலைவர்கள் வழங்கிவந்த ஆக்கபூர்வமான உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் அவர்களை உடனடியாக சந்திப்பதைத் தவிர்த்துவிட்டதாக இந்தியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
"இலங்கை அரசின் குறிப்பிட்ட சில தலைவர்கள் இந்தியாவுக்கு வழங்கிவந்த உறுதிமொழிகள் எதுவுமே இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்களிடம் பேசுவதில் இனியும் பலன் இல்லை என்று புதுடில்லி கருதுகிறது.
ஆனாலும், அரசியற் தீர்வு தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டிருக்கிறது'' என்றும் அந்த இந்திய இராஜதந்திரி குறிப்பிட்டார்.
இதற்கிடையில் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் இந்தத் திடீர் மாற்றம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ஜெனிவா மாநாட்டிற்குப் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பும் இதன் பின்னணியில் மேலும் மோசமடையக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten