உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி, ஜெனீவாவில் இருந்து கிடைத்துள்ளது. உலகம் காணாத கொடுமையைச் செய்த இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் வெற்றி பெற்று இருப்பதுதான் இந்த ஆறுதலுக்குக் காரணம்.
இதைத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளக் காரணம் இந்தியா எடுத்த நிலைப்பாடு.
இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணை ஆணையத்தின் முடிவின்படி நடவடிக்கைகள் அமைய வேண்டும்'' என்று சொல்கிறது அமெரிக்காவின் தீர்மானம்.
பல மாதங்களுக்கு முன்னால் ஐ.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும். இருந்தாலும் இதையாவது அமெரிக்கா கொண்டு வருகிறதே என்பதுதான் பலருக்கும் ஆறுதல்.
இந்த அமெரிக்கத் தீர்மானம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களது பிரார்த்தனையாக இருந்தது.
ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரின் முடிவுக்கு ஒருநாள் முன்னதாக, மார்ச் 22 அன்று இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தன. எதிராக 15 நாடுகள் வாக்களித்தன. எட்டு நாடுகள் நடுநிலை வகித்தன.
மாற்றத்தை வேண்டிய இந்தியா!
தமிழக மக்களின் போராட்டத்தாலும், அனைத்து தமிழகக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கொடுத்த அழுத்தத்தாலும், 'எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது’ என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொண்டது.
ஆனால், இந்தத் தீர்மானத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர இந்தியா முயற்சித்தது. 'இலங்கை விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதைக் கண்காணிக்க குழு ஏதாவது அமைக்கப்படும் என்றால், அது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டும்’ என்பதே இந்தியாவின் திருத்தமாக இருந்தது.
இந்தத் திருத்தம் குறித்து ஜெனீவாவில் உள்ள தமிழர் மனித உரிமை மையத்தைச் சேர்ந்த கிருபாகரனிடம் கேட்டபோது, ''ஆவணங்களைப் பார்த்தால்தான் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்துத் தெரியும்.
இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவதைவிட, இந்தியாவின் ஆதரவைத்தான் பெரிதாகப் பார்க்கிறோம். இதன்மூலம் இலங்கை மீது அதிகாரப்பூர்வமாக ஐ.நா. அழுத்தம் செலுத்த முடியும்.
இதற்கு முன்பு வரை இலங்கை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. இப்போது அது வாய்த்திருக்கிறது'' என்று பெருமிதப்பட்டார்.
ஆதரவும் எதிர்ப்பும்.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிக்கா, செக் குடியரசு, கவுதமால, ஹங்கேரி, இத்தாலி, லிபியா, மொரீசியஸ், மெக்சிகோ, நைஜீரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவ குடியரசு, ரோமானியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உருகுவே ஆகிய 24 நாடுகள் வாக்களித்துள்ளன.
இலங்கையின் ரத்தக் கரங்களுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, கியூபா, பங்களாதேஷ், காங்கோ, ஈக்குவெடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவு, மாரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா ஆகிய 15 நாடுகள் வாக்களித்தன.
பின்வாங்கிய மலேசியா!
இந்தத் தீர்மானம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க இயலவில்லை என எட்டு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. வாக்கெடுப்புக்கு முன்தினம் வரையிலும் இலங்கைக்கு ஆதரவு தருவதாகச் சொல்லியது மலேசியா. ஆனால், மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக தங்கள் நாட்டை நடுநிலைமைக்கு மாற்றிக் கொண்டது.
கெஞ்சிய இலங்கை!
இந்தியாவின் மௌனத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசு, 'இந்தத் தீர்மானம் ஆசிய நாடுகளை அமெரிக்க காலனி நாடுகளாக மாற்றும் அமெரிக்காவின் முயற்சி.
இது நிறைவேறினால் இலங்கை, அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விடும்’ என்று தங்கள் படுகொலைகளை மறைக்கப் பார்த்தது.
அடிமை, காலனிநாடு என்ற வார்த்தைகளைச் சொல்லி போர்க் குற்றத்தை மறக்கடிக்க துடித்தது.
ஆனால், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் வாக்களிக்கத் தயார் என்று இந்தியா சொன்னதும், இலங்கை அரசு அமெரிக்காவிடம் மீண்டும் கொஞ்ச நாட்கள் கேட்டு கெஞ்சி உள்ளது.
போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கடந்தும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தத் தவறி விட்டீர்கள். இனியும் அவகாசம் கேட்பதை நம்ப முடியாது'' என்று அமெரிக்கா, நிராகரித்துவிட்டது.
இந்த வாக்கெடுப்பின் போது, தொண்டு நிறுவனங்கள் சார்பில் பங்கேற்ற கனடிய தமிழ்ப் பேரவையின் வழக்கறிஞர் கரே ஆனந்தசங்கரியிடம் பேசிபோது,
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. இது, தமிழர்களின் ஒன்றுகூடலுக்குக் கிடைத்த பலன். இந்தத் தீர்மானம் நிறைவேறியது, இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்குதல்களைத் தராவிட்டாலும், நடந்த போர்க்குற்றங்களுக்கு ஒரு சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள ஒரு முன்னெடுப்பாக இருக்கும்'' என்று சொன்னார்.
இந்தத் தீர்மானத்தின் மீது இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை 2013 மார்ச் மாதம் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை விளக்கம் தரவேண்டும்.
இலங்கைத் தமிழர்களது அரசியல் உரிமையை நிரந்தரமாகப் பெறுவதற்கான முதற்படியாக இதைக் கொள்ள வேண்டும்!
Geen opmerkingen:
Een reactie posten