தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 maart 2012

சர்வதேசத்துடன் முரண்படத் தயாராகிறது சிறீலங்கா விடுதலையை எமதாக்க என்ன செய்யவேண்டும்?



tamileelam news
‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி என்றும் அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்ததன் ஊடாக ஈழத்தமிழர்களுக்கு இந்தியா நம்பிக்கையூட்டும் வகையில் வெளிப்படையாகச் செயல்பட்டிருப்பதாக’வும் ஊடகங்களில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இந்தத் தீர்மானத்தை இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியா, இறுதிநாளன்று இதனை வரவேற்றதுடன் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தது. எப்போதும் சிறீலங்காவைக் காப்பற்ற மட்டுமே முனைகின்ற இந்தியா, இம்முறை கைவிடும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டபோதும், சிறீலங்காவை அடித்துக் காப்பாற்றியது என்பதே உண்மை.

அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையில் இருந்த மிகவும் முக்கிய ஒரே விடயமான சர்வதேசத்தின் (ஐ.நா.) தலையீட்டைத் தவிர்த்து, இந்தப் பிரேரணையில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுகின்றதா என்பதை ஆராயும் பொறுப்பை சிறீலங்காவிடமே வாங்கிக்கொடுத்து சிறீலங்காவைக் காப்பாற்றி இருக்கின்றது இந்தியா. அதாவது, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கின்றது இந்தியா. சிறீலங்காவிற்கு எதிராக வாக்களித்து தமிழகத்தின் கொந்தளிப்பை அடக்கியதுடன், சர்வதேசத்தின் தலையீட்டில் இருந்து சிறீலங்காவையும் அது (தற்போதைக்கு) விடுவித்துள்ளது.

ஆனால், இந்தப் பிரேரணையில் உள்ள வேடிக்கை என்னவென்றால் முதலில் இது ‘சிறீலங்காவிற்கு எதிரானது’ என்பதே பிழையானது. தாங்கள் நடத்திய குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தாங்களே விசாரணைகளை நடத்தியது சிறீலங்கா. அந்த விசாரணைகளில் கிடைத்த பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் அமெரிக்கா கொண்டுவந்த ஐ.நா. தீர்மானத்தின் முக்கிய அம்சம்.

அதாவது, மகிந்த அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் சிலவற்றை அமெரிக்கா தனது பிரேரணையில் உள்வாங்கி, அதனை சிறீலங்கா நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று ஜெனீவா மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்து, 47 நாடுகளில் 24 நாடுகளின் ஆதரவுடன் அதனை நிறைவேற்றியும் உள்ளது.

ஆனால், இந்தப் பிரேரணையை, தங்களுக்கு எதிரானதாகப் பூதாகரமாக்கிய சிறீலங்கா, இது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதற்கு எதிரான போராட்டங்களையும் இலங்கையில் மிகக் கடுமையாக முன்னெடுத்துள்ளது. அமெரிக்கப் பிரேரணை தமிழீழத்தையே பிரித்துக்கொடுத்துவிட்டதுபோன்று, பிரேரணையைக் கொண்டுவந்த அமெரிக்காவிற்கு எதிராக மிகமோசமான பிரச்சாரங்களும், அமெரிக்கப் பொருட்கள் மீதான புறக்கணிப்புப் போராட்டங்களும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், அமெரிக்க கொண்டுவந்த பிரேரணையில் தமிழர்களுக்கு நன்மைபயக்கக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இதனை ஏற்கனவே இந்தப் பகுதியில் சுட்டிக்காட்டியும் இருக்கின்றோம்.

ஆனாலும், சிறீலங்காவின் இன்னொரு கொடூரமான பக்கத்தைச் சர்வதேசம் உணர்ந்துகொள்வதற்கும், தங்கள் மீது தாங்களே சுமத்திய குற்றச்சாட்டிற்கு தீர்வுகாண மறுக்கும் சிறீலங்கா, சர்வதேசம் சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்களை ஏற்று அதற்குத் தீர்வு வழங்காது என்பதனால், தமிழர்கள் தங்களது நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான நியாயத்தை இந்தத் தீர்மானத்தின் மீதான வெற்றி வழிவகுக்கும் என்பதனாலும் இதனைத் தமிழர்கள் வரவேற்க முனைந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

அத்துடன், ‘ஈழத்தமிழர்களின் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு வாசல்கதவினை திறந்துவிட்ட வெற்றியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வெற்றி அமைகின்றது’ என்று உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நொடுமாறன் ஐயா அவர்கள் குறிப்பிட்டுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

எனவே, தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் சாதகமான விடயங்களோ அல்லது சிங்களவர்களைப் பாதிக்கக்கூடிய பாதகமான விடயங்களோ இதில் இல்லாது போனாலும், சிறீலங்கா ஆட்சியாளர்கள் மீதான உத்தியோகபூர்வமான சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கான முதல்படியாக இது அமைந்துவிட்டது.

எனவேதான் சிறீலங்கா இதற்கு எதிராகப் போராட முனைந்துள்ளது. சிறீலங்கா ஆட்சியாளர்களினதும், இனவாதிகளினதும் இந்தப் பிரேரணைக்கு எதிரான கூச்சல்களும், குழப்பங்களும் மேற்குலகுடனான முரண்களுக்கே வழிவகுக்கும் என்பது திண்ணம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்காக களமிறக்கப்பட்டவர்கள் நடத்திய காட்டுத்தர்ப்பாரில் ஐ.நா. மனித உரிமைகள் சபையே அதிர்ச்சியடைந்து கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

இங்கு தொடங்கிய சிறீலங்காவின் எதிர்ப்புப் போராட்டம் இனி மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதற்கான சம்பவங்கள் நிகழத்தொடங்கிவிட்டன. அதாவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்தவன் கதையாக, இத்தீர்மானத்தை செயற்படுத்துவதை விடுத்து, இதற்கு எதிரான போராட்டங்களை சிங்களம் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டது.

இது சர்வதேசத்திற்கும் சிறீலங்காவிற்கும் இடையிலான முரணாகவே விரிவடையும் என்பது உறுதி. ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுடன் சர்வதேசத்தை ஏமாற்றி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசத்தின் உதவியுடன் சிறீலங்கா அழித்தது. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேசம் துணை நின்றது.

சர்வதேசத்தையும் தமிழர்களையும் மோதவிட்டே இந்த வெற்றியைக்கண்டது சிறீலங்கா. இப்போது ‘மனித உரிமை மீறல்கள்’, ‘போர்க் குற்றங்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகங்களுடன் சிறீலங்கா ஆட்சியாளர்களை ஒடுக்குவதற்கு சர்வதேசம் தயாராகிவிட்டது. சர்வதேசம் - சிறீலங்கா இடையிலான இந்த முரணை தமிழ் மக்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றவேண்டும்.

தங்களின் விடுதலையை அறுவடை செய்வதற்கான களமாக்க வேண்டும். அதனை நோக்கியே இராஜதந்திர நகர்வுகளை தமிழ் மக்களின் விடிவிற்காக உண்மையோடு உழைக்கின்ற ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும்.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி : ஈழமுரசு

சர்வதேசத்துடன் முரண்படத் தயாராகிறது சிறீலங்கா விடுதலையை எமதாக்க என்ன செய்யவேண்டும்?

Geen opmerkingen:

Een reactie posten