குறிப்பு : விஜிதரனை யார் கடத்தியது என்றான். நான் நீங்கள் தான் என்று சொல்ல ஏன் என்றார். விஜிக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் இல்லை. அமைப்புக் குழுவின் தோற்றமும் அது புலிக்கு எதிராக போராடியதும், அதில் விஜி முன்நின்றதும் விஜிதரன் கடத்தப்பட்டதற்கான காரணம் என்றேன்.
விளக்கம் : 1986 இறுதியில் பல்கலைக்கழகத்தில் விஜிதரன் என்ற மாணவனை, உரிமை கோராது புலிகள் கடத்திச் சென்று படுகொலை செய்தனர். இதன் போது பெரியளவில் போராட்டங்கள் வடக்கு கிழக்கில் பரவலாக நடைபெற்றன. அதற்கு தலைமை தாங்கியவன் என்ற வகையில், என்னிடம் இது பற்றி விசாரணை செய்தனர். விஜிதரன் எந்த இயக்க ஆதரவாளனோ, உறுப்பினனரோ அல்லாத ஒரு ஜனநாயகவாதி. பல்கலைக்கழக பகிடி வதையின் போது, புலிகள் தமது பாசிச வழிகளில் வீதியில் வைத்து சில மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். அம் மாணவர்கள் கடுமையான காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவர் போராட்டம் தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பியது. இதன் போது பல்கலைக்கழக மாணவரவை இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க மறுத்து, புலியின் பினாமியாக செயல்பட்டது. இதில் தற்போது நோர்வேயில் புலிகளின் முக்கிய பொறுப்பில் உள்ள சர்வேந்திரா மற்றும் புலிகளின் முக்கிய உறுப்பினரான பரா போன்றோர் முக்கியமானவர்கள். இந்த நிலையில் மாணவர்கள், தமக்கான புதிய தலைமை ஒன்றை உருவாக்கினர். இதில் விஜிதரன், விமலேஸ்வரன் போன்றோர் முக்கியமான செயல்பாட்டை முன்நின்று வழங்கினர். விஜிதரன் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் விட்டுக் கொடுக்காத ஜனநாயகவாதியாக, புலிகளை எதிர்த்து நின்றான். மிரட்டலுக்கு அஞ்சி நடுங்க மறுத்தான். அவர்களுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தையின் போது, பேச்சுவார்த்தை குழு சார்பாக விஜிதரன் ஜனநாயகக் கோரிக்கையின் உறுதியான நிலைப்பாட்டை கையாண்டதன் மூலம், புலிகளின் பாசிசத்துக்கு அடங்கி இணங்கிப் போக மறுத்தான். இதனால் விஜிதரனையும், என்னைக் கடத்தியது போலவே புலிகள் இரகசியமாக கடத்தி சென்றனர். நான் அவர்களின் பாசிச வதைமுகாமில் இருந்து தப்பியதால் உயிர் தப்பினேன். ஆனால் விஜிதரன் படுகொலை செய்யப்பட்டான். பின்னால் இதற்காகவும் விமலேஸ்வரனை வீதியில் வைத்தே படுகொலை செய்தனர். நான் சிறையில் இருந்து தப்பிய பின், எனது உயிருக்கு பொய்யான உத்தரவாதத்தை புலித் தலைமை பகிரங்கத்தில் வழங்கிய போதும், விமலேஸ்வரனை கொன்ற அன்றும் அடுத்த நாளும் என்னைக் கொல்ல எடுத்த முயற்சிகள் அனைத்தையும் முறியடித்தன் மூலமே, மீண்டும் நான் உயிர் தப்பினேன்.
குறிப்பு : விஜிதரன் போராட்டத்திற்கு எந்தெந்த இயக்கங்கள் உதவியது என்று புலிகள் கேட்டனர்.
விளக்கம் : உண்மையில் இந்தப் போராட்டம் எந்த இயக்கம் சார்பாகவும் இருக்கவில்லை. இது அடிப்படையான ஜனநாயகத்துகான போராட்டம். பாசிசத்தை புலிகள் தேசியமாக்கிய நிலையில், மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட போது, எழுந்த நூற்றுக்கனக்கான போராட்டத்தில் இதுவும் ஒன்று. ஒரு மாணவன் காணாமல் போன நிலையில், மாணவர்கள் தன்னியல்பாக இயக்கங்களுக்கு எதிராக போராடத் தொடங்கினர். பல்வேறு இயக்கத்தில் இருந்து அரசியல் காரணத்தால் வெளியேறியவர்கள், இயக்கங்களில் முரண்பட்டபடி அதற்கு எதிராக செயல்பட்டவர்கள் மற்றும் ஜனநாயகத்தை நேசித்தவர்கள் உள்ளிட்ட மாணவர்களே போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். மாணவர்கள் பொதுவான ஜனநாயக கோரிக்கையின் அடிப்படையில் தன்னெழுச்சியாக அணிதிரண்டதுடன், ஜனநாயகத்தை மீட்டு எடுக்க தமது சொந்த தலைமையை உருவாக்கினர். இங்கு அனைத்து இயக்கமும் மக்களை மிதித்தெழுந்தே, தம்மைத் தாம் தேசியவாதிகளாக பிரகடனம் செய்தனர். ஆனால் மாணவர்கள் அவர்கள் அனைவரையும் எதிர்த்து நின்றனர். ஆனால் எல்லா இயக்கமும் தமது கருத்தை, மக்களின் ஜனநாயக உரிமை மேல் முன்வைக்க பகிரங்கமாக மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக அனைத்து இயக்கத்துக்குமான அழைப்பு, எழுத்து மூலம் விடப்பட்டது. புலிகள், ஈரோஸ் என்பன இதை நிராகரித்தன. ஈரோஸ் புலிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் விலாங்கு மீன் போல் நழுவியபடி நாடகமாடினர். சில இயக்கங்கள் இதை தமக்கு பயன்படுத்த முனைந்த போது, அவர்களை தனிமைப்படுத்தினோம். போராட்டத்தை மக்களின் பொதுவான ஜனநாயகக் கோரிக்கைகள் மேல் நிலைநிறுத்தி பாதுகாத்தோம்.
குறிப்பு : புலிக்கு எதிராக ஏன் போராடினீர்கள் எனக் கேட்டனர். நான் அப்படி போராடவில்லை என்று கூறியதுடன், பொதுவிலேயே போராடினோம் என்றேன். நீங்கள் தான் எம்மை எதிர்த்து வந்தீர்கள் என்றேன்.
விளக்கம் : அன்று போராட்டம் பொதுவான அடிப்படையான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையில், குறிப்பான பிரச்சனையை முன்வைத்தோம். பொதுவான அனைத்து மக்கள் தழுவிய அரசியல் கோரிக்கையாக
1. "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்
2. மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்."
இதை பல்கலைக்கழக மாணவர்களும், தமிழ் மக்களும் பொதுவாக கோரினர். இதைக் கோருவது துரோகிகளின் கோரிக்கை என்றனர். இதற்காகவே பின்னாட்களில் புலிகள் பலரை தேடி ஈவிரக்கமின்றி கொன்றனர்.
இந்தக் கோரிக்கைக்கு புலிகளின் "மேதகு" தேசியத் தலைவர் பிரபாகரனின் பெயரில், புலிகள் 28.11.1986 இல் வெளியிட்ட பகிரங்கத் துண்டுப்பிரசுரம் மூலம் பதிலளித்தனர். அந்தப் பதிலில் இது "..விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று கூறி தமிழ் மக்களின் அடிமைத்தனமே, தமது தமிழீழத் தாகம் என்றனர். இதைக் கோருவது, முன்வைப்பது தீய சக்திகளின் சதி என்றும் வருணித்தனர். அவர்களின் துண்டுப்பிரசுரம் முழுவதும் மக்கள் விரோத கண்ணோட்டத்தை, புலிப் பாசிசத்தை வக்கிரமாகவே முன்வைக்கின்றது. இந்தப் பாசிச நிலைப்பாடே, தனது இறுதி வரையான புலிகளின் தமிழீழத் தாகம் என்றனர். மக்கள் வாய்பொத்தி, கண்மூடி, காதுக்கு பஞ்சடைந்து, அவர்களின் பாதம் தொழுது ஆண்டாள் அடிமையாக வாழக் கற்றுக் கொள்வதே தமிழ் தேசிய பண்பாடாக இருந்தது. புலிகளுக்கு விசுவாசமாக, பாசிச தேசியத்துக்கு விசுவாசமாக, வாழ்வதற்குமான உரிமை எதுவும் கேட்காது வாழ்வது எப்படி என்பதை, கற்றுக் கொள்ளக் கோரியது. இதை மீறுவது "புலிகளை அரசியல் அனாதைகளாக்கிவிடும்" என்றனர்.
மக்கள் தாம் சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல், அதை வெளிப்படுத்தும் ஆற்றல், புலிகளை அரசியல் அனைதையாக்கி விடும் என்று, தாங்களாகவே புலிகளே ஒத்துக் கொண்டு வெளியிட்ட துண்டுப்பிரசுரம் தான் இது. பகிரங்கமான துண்டுப்பிரசுரத்தில், மக்களின் அடிப்படை உரிமைகள் எதுவும் வழங்க முடியாது என்றனர். புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் இத் துண்டுப்பிரசுரத்துக்கு கையெழுத்திட்டு உறுதி செய்திருந்தார். மக்கள் மக்கள் என்று புலிகள் வாய் கிழிய சொன்னது எல்லாம், போலியான நேர்மையற்ற வழமையான புலிகளின் பாசிச வார்த்தைகளே. சிந்திக்க முடியாத மந்தையாக வாய் பொத்தி, கண் மூடி, காதடைத்த அடிமை மக்களைத் தான், இவர்கள் தேசிய மக்கள் என்றனர். மந்தையாக யார் இருக்கின்றார்களோ, அவர்கள் புலிகளுக்கு வாலாட்டினர். யார் அதை நியாப்படுத்துகின்றனரோ, அவர்களை மந்தைகளாக மேய்த்தனர். புலிகளுக்காக பினாமியாக றப்பர் ஸ்ராம்பாக வாய் கிழியப் பேசியும் எழுதியும் வக்கரித்தவர்கள், உண்மையில் எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் இழந்தவர்கள் தான். புலிகளின் அரசியல் உள்ளடக்கப்படி, அரசியல் நடத்தும் சுதந்திரம் இழந்த பொம்மைகளே. இந்தப் பொம்மைப் பினாமிகளின் மக்கள் விரோத வக்கிரங்களை வெளியிடும் செய்தியூடகங்கள், உயிரற்ற புலியின் ஆயுதங்களில் ஒன்றே. இவையே புலிகளை "அரசியல் அனாதையாக்காத" பாசிசத்தின் நெம்புகோலாக மற்றொரு துப்பாக்கியாக செயல்பட்டவர்கள். இந்தப் பினாமிப் பாசிட்டுகள், மண்ணில் நடக்கும் அனைத்து படுகொலைகளுக்கும் மக்கள் விரோத நடத்தைகளுக்கும் சாமரை வீசி துதிபாடும் வக்கிர கூட்டமாக இருந்தவர்கள்.
35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)
25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)
19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)
15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)
13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)
08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)
04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)
01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)
Geen opmerkingen:
Een reactie posten