மலையக அரசியலுக்கு இனி பொற்காலம்தான். மக்களை சுரண்டி அவர்கள் முதுகில் சவாரி செய்தவர்களை பற்றி இந்த நாடே தெரிந்துக் கொண்டது. இனி என் மக்களுக்கு விடிவு காலம்தான். எத்தனைக் காலம் தான் இப்படி மக்களை ஏமாற்றுவார்கள். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது சரியான வாக்குதான் என பா.உறுப்பினர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நான் அரசாங்கத்திலிருந்து விலகுறேன், என கடந்த ஒரு வாரமாகவே விடாத செய்தியாக இ.தொ.கா தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் நாடகம் இந்த நாட்டில் அருமையாக அரங்கேறியது. ஏன் இந்த பொய்…? இந்த நாடகம்? மக்களுக்காகவோ, மக்கள் நலனுக்காகவோ என்று நினைத்தால் அது இல்லை மக்களுக்காக அவர் அரசாங்கத்திலிருந்து விலகிபோகவில்லை.
அத்தனையும் சுயநலம். இப்படிப்பட்டவர்களை மலையக மக்களுக்கு இப்போது நன்றாக தெரியும். நானும் எனது தொழிலாளர் தேசிய சங்கமும் மக்கள் நலனில் அக்கறை காட்டுவது கூட இவர்களை போன்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது.
நானும் ஸ்ரீரங்காவும் இணைந்து மலையக மக்களுக்கு குரல் கொடுப்பதை இவர்களால் தாங்கிகொள்ள முடியவில்லை. நேற்று முளைத்த காளான்களால் என் அரசியல் பயணம் நிற்கப்போவதும் இல்லை. அவர்கள் என்னை எதிர்க்கும் போதுதான் இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அதிகமான எண்ணம் வளர்கிறது.
சமீபத்தில் ஜனாதிபதி கூப்பிட்டு என்னை பேசினார். அவரை போல் ஒரு தலைவருடன் இருந்து மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்யலாம். அவர் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எதிர்காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதில் நான் உறுதிப்படுத்துவேன்.
இனி மேலும் மக்களை ஏமாற்றாமல், மது அருந்திவிட்டு தீர்மானங்களை எடுக்காமல், அரசியலில் தனது வாரிசாக நினைக்கும் சின்ன பொடியன்களை ஏவிவிட்டு முட்டை அடித்து வேடிக்கை பார்க்காமல், ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் பொறுப்பாக நடந்துக் கொள்ள வேண்டும்.
தன்னை நம்பி வாக்களித்த மக்களின் நிலை என்ன என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதிகாரமும் ஆணவமும் தலைக்கேறி இப்படி திரியக் கூடாது. தனது சுயநலத்துக்காக மலையக மக்களை அடகு வைக்க கூடாது.
நாங்கள் எப்போதும் மக்கள் பக்கமே. இனியும் இவர்களை யாரேனும் ஏமாற்ற முற்பட்டால் நாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். தகுந்த பதிலடி கொடுப்போம். அந்த அடி இனிமேல் அவர்கள் மலையகத்தில் அரசியல் என்ற பெயரில் யாரையும் ஏமாற்ற முடியாதளவில் இருக்கும்.
அரசியல் செய்வதற்கென்று ஒரு தகுதி வேண்டும் கண்டவனெல்லாம் அரசியல் செய்ய முடியாது. மலையக மக்களுக்கு சேவை செய்ய நானும் எனது தொழிலாளர் தேசிய சங்கமும் என்றுமே நான் கடமைப்பட்டுள்ளோம். பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருட்டு என்று அர்த்தமில்லை. தேர்தல் ஒன்று வந்தால் இப்படியானவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போய் விடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten