தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 maart 2012

ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக இலங்கை தமிழர்களை கடத்தியவர் கைது!!



இலங்கையின் ஜப்னா பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (43). இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிச்சென்று இத்தாலியில் குடி புகுந்தார். இதனால் அவரை இத்தாலி ராஜன் என்று அழைப்பார்கள். இவர் இலங்கை தமிழர்களை கடல் வழியாக நவீன படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்லும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக இலங்கையில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தலைமறைவான இவரை பிடிக்க இன்டர்போல் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இத்தாலி ராஜன், நாகப்பட்டினம் பகுதியில் சுற்றித்திரிவதாக கியூ பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை பிடிப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நாகப்பட்டினம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்ல திட்டம் போட்டு செயல்பட்ட இத்தாலி ராஜன் போலீசில் சிக்கினார்.
அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இத்தாலி ராஜனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
அதன் விவரம் வருமாறு:-
இத்தாலி ராஜன் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். 10 வயதில் இருந்தே இத்தாலியில் வீட்டு வேலைகளை செய்து வந்த அவர் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் இலங்கைக்கு திரும்பினார். அங்கு தனது பழைய நண்பர் தயாளனை சந்தித்து பேசினார். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச்செல்லும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தயாளனிடம் இருந்தே இத்தாலி ராஜன் இத்தொழிலை கற்றுக்கொண்டார்.
பின்னர் படிப்படியாக தனியாக ஆட்களை கடத்திச் செல்ல தொடங்கினார். சில நேரங்களில் 2 பேரும் சேர்ந்தே கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தயாளனை போலீசார் தேடிவருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. சொந்த நாடுகளில் வாழ முடியாமல் தவிப்பவர்களையே இத்தாலி ராஜன் வலைவீசி பிடித்துள்ளார். இலங்கை தமிழர்களே ராஜனிடம் அதிகம் சிக்கியுள்ளனர். ''இங்கிருந்து கஷ்டப்படுவதை விட, ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடுங்கள். நல்ல படியாக வாழலாம்'' என்று கூறி மனதை மாற்றிய இத்தாலி ராஜன், ரூ. 3 லட்சம் கொடுத்தால் நானே உங்களை பத்திரமாக அங்கு கொண்டு போய் சேர்த்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி பலர் பணம் கொடுத்து கடல் வழியாக படகில் ஆஸ்திரேலியா சென் றடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களை அறிமுகப்படுத்தி விடுவதற்கு அங்கு புரோக்கர்களும் உள்ளனர். இந்த புரோக்கர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை ராஜன் கமிஷன் கொடுத்துள்ளார். இலங்கை மீனவர்கள் பலர் கடல் பயணத்துக்கு ஏற்ற வகையில் நவீன படகுகளை இத்தாலி ராஜனுக்கு செய்து கொடுத்துள்ளனர். இந்த படகில் வீடு போன்ற வசதியை ஏற்படுத்தி அதில் ஒவ்வொரு முறையும் 40 பேரை ராஜன் அழைத்துச் சென்றுள்ளார்.
15 நாட்கள் கடல் பயணத்துக்கு பின்னர் 800 கி.மீ. தூரத்தை கடந்த ராஜனின் படகு ஆஸ்திரேலியாவில் ''கிறிஸ்துமஸ் தீவு'' என்ற இடத்தை அடையும். ராஜனால் கடத்திச் செல்லப்படுபவர்கள் முதலில் அகதிகளாக ஆஸ்திரேலியாவில் நுழைவார்கள். பின்னர் அந்நாட்டின் குடிமகன்களாக அவர்கள் மாறி விடுகிறார்கள். இதற்கு ஆசைப்பட்டே பலர் விருப்பப்பட்டு ராஜனுடன் செல்கின்றனர்.
இத்தாலி ராஜனிடமிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான சேட்டிலைட் போனையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் வழி பயணத்தின்போது இந்த போனைத்தான் ராஜன் பயன்படுத்தியுள்ளார். சென்னை வந்து கடத்தல் தொழிலில் ஈடுபடவும் அவர் திட்டமிட்டிருந்தார். அதற்குள் போலீசில் சிக்கிக் கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten