நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் வழமைபோல் கிடப்பில் போட்டுள்ள இலங்கை அரசு, புதிய ஆண்டில் உள்நாட்டு, மட்டும் சர்வதேச மோதலுக்கு தன்னை தயார்செய்து வருவதாக விசயம் அறிந்த அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டின் இறுதியில் இவ்விணையத்தளத்தில், “கனடாவைக் குறிவைக்கும் சிறீலங்கா, கனடாத் தமிழர் வெற்றிகரமாக எதிர்கொள்வார்களா?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இது குறித்த இலங்கை அரச உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடந்தன என்றும் அதில் சனாதிபதியின் சக்திவாய்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினர் என்றும் இதில் கனடா குறித்த கலந்துரையாடலே முதன்மை இடத்தை பிடித்தது என்றும் வேறு செய்தி தெரிவித்திருந்தோம்.
குறிப்பாக கனடியப் பிரதமர் காப்பர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பெய்ட் ஆகியோர் தொடர்ச்சியாக இலங்கை குறித்து வெளியிட்டுவரும் கருத்துக்கள் இலங்கை அரச தரப்பை பெரும் சினம் அடைய வைத்திருந்தன.
கனடா பல்வேறு சர்வதேச தளங்களில் இலங்கை அரசிற்கு சவாலாகி வருவதாக பல்வேறு விடயங்களை முன்னிலை நிறுத்தி அங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. குறிப்பாக மார்ச்சில் வரவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அவையத்தின் அமர்வில் கனடாவின் செயற்பாடு குறித்து இலங்கை தரப்பு அச்சம் அடைந்துள்ளது எனவும் அச்செய்தியில் மேலும் தெரிவித்திருந்தோம்.
ஆதலினால் கனடாவை எதிர்கொள்ள பல திட்டங்கள் வரையப்பட்டுள்ளன என்றும், அதில் குறிப்பாக ஆளும் கன்சவேட்டிக் கட்சிக்கு எதிராக இருந்த கனடியத் தமிழ்மக்கள் சமீபகாலமாக அரசின் காத்திரமான செயற்பாடுகள் காரணமாக அதற்கு ஆதரவாக மாறிவரும் சூழல் இலங்கை அரசை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் மேற்கத்திய நாடுகளில் ஆளும் தரப்பிடம் இருந்து அங்கு வாழும் தமிழ் மக்களை அன்னியப்படுத்தி வைப்பது என்பது நீண்டகால இலங்கையின் திட்டமாகும் என்பதையும் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
அதை உடன் தடுத்துநிறுத்தும் செயற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளராக இருந்து பின்னர் அரச வெளிவிவகார துறைக்குள் உள்வாங்கப்பட்டு ரொரன்ரோ துணைத் தூதுவராலயத்தில் தூதரகாக இருந்து தற்போது சனாதிபதி ஆலோசகராக உள்ள பந்துல ஐயசேகர இப்பணியில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவரே தற்போது வெளியாகியுள்ள கொலைக்களம் 2ல் அவுஸ்திரேலியாவில் வைத்து சனல் 4 உடன் மோதுபவர்களில் ஒருவர். இவர் முன்னர் ரொரன்ரொவில் இலங்கை அரச பணியில் இருந்தபோது பல தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார் என்றும் கனடியத் தமிழரில் சிலரை முழுமையாக உள்வாங்கியிருந்தார் என்றும் சொல்லப்படுகின்றது.
அவரது தலைமையில் ஒரு குழு கனடியத் தமிழரையும் கனடிய அரசையும் முழுமையாக பிரிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் இக்குழுவில் கனடிய தமிழ் ஊடகவியாளர்கள், துறைசார் விற்பன்னர்கள், இளையோர், மதத் தலைவர்கள், மற்றும் கே.பி குழு எனத் தமிழர் பலரையும் இணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தோம்.
கனடிய அரசு குறித்து குழப்பமான, தமிழருக்கு கோபம் வரும் செய்திகளை வெளியிடுதல், கனடிய அரச வட்டாரத்தில் கனடிய தமிழர் குறித்து தொடர்ந்தும் மோசமான தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்துதல், கனடிய அரசு தமிழர் ஆதரவு நிலைக்கு வந்துள்ள நிலையில் கனடிய எதிர்கட்சிகளையாவது இலங்கை ஆதரவு நிலைக்கு கொண்டுவருதல் ஊடாக கனடிய அரசிற்கு அழுத்தத்தை அதிகரித்தல், கனடிய கட்சிகளுக்குள் இலங்கை ஆதரவு தரப்பின் தாக்கத்தை அதிகரித்தல், இலைமறைகாயாக இருந்து தமிழர் தளத்தை கனடிய அரசியலில் வலுவாக்கி வருவோரை இனம்கண்டு அழித்தல் எனப் பல செயற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இம்முயற்சிகள் பல வடிவங்களில் முனைப்புப் பெற்று வருவதாக ஆதாரங்களுடன் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
அரசியல் செல்வாக்குக் கொண்ட இந்தியர்கள், சீனர்கள் என அடையாளம் கண்டு உள்வாங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இச்செயற்பாடுகளை இணைக்கும் பணி ரொரன்ரோ புதிய தூதுவர் கருணாரத்தின பரனவிதானவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியிலேயே இந்திய பெண்மணி ஒருவரின் முயற்சியில் இந்திய, சீனப் பின்னணி கொண்ட இரு கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அழைத்து வரப்பட்டனர்.
இதில் குறிப்பாக இந்தியப் பின்னணியைக் கொண்ட பெண்மணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரை மையப்படுத்தி அரசியல் செயற்பாடுகள் கனடாவில் முனைப்புப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
மார்ச் 13ஆம் திகதி கனடா பாராளுமன்றத்தில் கனடாவிற்கான இலங்கை தூதுவர் சித்திராங்கனி கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய காலைப்போசன விருந்தை இவர்களே முன்னின்று ஒழுங்கமைத்தனராம்.
கனடாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மீது குறிப்பாகவும், கனடியத் தமிழர்கள் மீது பொதுவாகவும் களங்கம் கற்பிக்கும் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு விரைவுபடுத்தப்பட்டுள்ளனவாம் தமிழ் அமைப்புக்கள் குறித்து அவதூறு கற்பிக்கும் தகவல்கள் கோர்க்கப்பட்டு கோத்தப்பாயாவின் பாதுகாப்பு அமைச்சினால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாம். அவற்றை தயாரித்துக் கொடுப்பதில் கணிசமாக பங்கை பயங்கரவாத சர்வதேச நிபுணர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும், ரோகன் குணரட்ன செய்து கொடுத்துள்ளதாக கொழும்பில் இராணுவ வட்டாரத்தில் மகிழ்ச்சி வெளியிடப்பட்டது.
இக்கோவை தற்போது கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்திய பெண்மணியை முன்னிறுத்தி கனடிய தேசிய ஊடகம் ஒன்றில் தமிழர்கள் கனடிய தேர்தலிகளில் வாக்களிப்பின் போது சட்டவிரோதமாக நடந்துகொள்கின்றார்கள் என்ற செய்தி சமீபத்தில் பரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் ஏற்கனவே இலங்கை அரசுடன் நெருக்கமானவர்கள் எனக் கருதப்பட்ட சில கனடியத் தமிழர்கள் தமிழர் விரோத கருத்துக்களை வெளியிட்டதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழர் கோவில்களுக்கு அழைத்துச் செல்லல், தமிழர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளல் என இலங்கை அரச தரப்பை வலுப்படுத்தும் செயற்பாடுகளை இத்தமிழர்கள் அவர்களுக்கு செய்து கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அவர்களுக்கான விருந்துபசாரங்களை வழங்கி அவர்களை ரொரன்ரோ இலங்கை தூதுவர் கருணாரத்தின பரனவிதானா கவனித்துக் கொள்வதாகவும் சொல்லப்படுகிறது.
கருணாவிற்கு நெருங்கியவர்கள் சிலரும் கனடாவில் இருந்து இப்பணியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கனடிய தமிழ் ஊடகத்துறை சார்ந்தோர் சிலர் குறிப்பாக உள்வாங்கப்பட்டு நன்கு உபசரிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இவர்கள் தமிழ்தேசிய ஆதரவாளர்கள் என்ற போர்வையில் சிதைவுகளை ஏற்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளனராம்.
இதன் ஒரு அங்கமாக தமிழ் தேசிய ஆதரவு என்ற போர்வையில் பத்திரிகை ஆரம்பித்து பின்னர் மாற்றம் பெறுவது என்ற வகையில் பத்திரிகைகளும் வெளிவர ஆரம்பித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதேவேளை தமிழர் நிகழ்வுகள் அனைத்திலும் அரச ஆதரவு தமிழர்களை பிரசன்னமாகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும், பலரை இவ்வாறாக நிகழ்வுகளில் முன்வரிசையிலேயே காணக்கூடியதாக உள்ளதாவும் சொல்லப்படுகிறது.
2012ஆம் ஆண்டு கனடியத் தமிழருக்கு சவால் நிறைந்த ஆண்டாக, ஒரு அரசியல் போர்க்களமாக விரிந்துள்ளது என்று கொழும்பில் உள்ள சிரேஸ்ட தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்ததை கடந்த ஆண்டே வெளியிட்டிருந்தோம்.
கனடியத் தமிழர் இச்சதிவலை குறித்து முழுமையான புரிதலுடன் தயாராக உள்ளனரா என்பதே எனது கேள்வி என்று அவர் அப்போது கேள்வி எழுப்பியிருந்தார். தங்களைச் சுற்றி சதிவலைகள் தினமும் இறுக்கமடைமந்துவரும் நிலையில் ஒற்றுமைப்பட்டவர்களாக அனைத்தையும் இனம்கண்டு எதிர்கொண்டு கனடியத் தமிழர் நிமிர்வார்களா? என்றார் அவர் இன்று.
Geen opmerkingen:
Een reactie posten