அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று மாலை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளதாக அறியவந்தது. எனினும் இந்த ராஜினாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜினாமாக் கடிதத்தைச் சமர்ப்பித்த பின்னர் நேற்று இரவு அவர் இந்தியா பயணமானதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், தனது அமைச்சு பதவியிலிருந்தும் அரசில் இருந்தும் வெளியேறுவதாகத் தெரிவித்தே ஜனாதிபதிக்குக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளரை நியமிப்பது தொடர்பில் எழுந்த முரண்பாடே இதற்குக் காரணம் எனக்கூறப்பட்டாலும் இதற்குப் பின்னணியில் வேறு பல விடயங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இ.தொ.கா. இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில், இந்திய அரசின் விருப்பு வெறுப்பின் பிரகாரமே ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது அல்லது எதிர்க்கட்சியில் அமர்வது போன்ற தீர்மானங்களை எடுப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மீதான ஜெனிவா தீர்மானத்தின் பின் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஆளுங்கட்சியிலிருந்து இ.தொ.கா. விலகியுள்ளமைக்கும் இந்திய நிலைப்பாடுகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten