வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது இலங்கைப் படையினர் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான மற்றும் சில முக்கிய தடயங்களும் தற்போது சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பொன்றின் பணியாளர்களிடையே இத் தடயம் சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
கிளிநொச்சி நகரையண்டிய திருவையாறு பகுதியினில் வீசப்பட்டு வெடித்த நிலையினில் காணப்படும் கொத்து குண்டெனப்படும் கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்களே மீ;ட்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ள கொத்து குண்டின் தடயங்களை தமது அலுவலகத்தில் காட்சிக்கென உள்ளே வைத்துள்ளதாகவம் கூறப்படுகின்றது.
இக்குண்டினது உற்பத்தி நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டே அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் இக்குண்டு ரஸ்ய நாட்டு தயாரிப்பாக இருக்கலாமென நம்பப்படுகின்றது.
வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது கிளஸ்ரர் ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக பல்வேறு தரப்புகளும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்திருந்த போதும் இது வரையிலும் இலங்கை அரசு அதனை மறுத்தே வந்துள்ளது.
குறிப்பாக வன்னி இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது சட்டவிரோத இரசாயன ஆயுதங்களும் பெருமளவினில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Geen opmerkingen:
Een reactie posten