தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 maart 2012

ஐ.நா வின் உறுப்பினர்கள் இலங்கைக்கு வர அரசு தடை! நவநீதம்பிள்ளைக்கு மட்டும் அனுமதி !


[ valampurii.com ]
ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தடை விதித்துள்ள இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மட்டும் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும் என அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் தொடர்பிலோ அல்லது இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு விஜயம் செய்யும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
இலங்கையின் மனிதவுரிமைகள் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருடன், ஐ.நா.சபை உயர் அதிகாரிகள் சிலரும் இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையிலேயே, அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களை அடுத்து அரசாங்கம் இவ்வாறு அறிவித்துள்ளது.
ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை உள்நாட்டுப் பொறிமுறை மூலமாகவே தீர்க்கப்பட வேண்டுமே தவிர, இவ்விடயத்தில் வெளியாரின் உதவிகள் அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடு என அரசாங்கம் கூறியிருந்த நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்துக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருக்கின்ற போதிலும், அவரது விஜயத்துக்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதா என்பதையிட்டு அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அரசாங்கத்தின் பதில் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்திருந்தார்.
ஐ.நா. தூதுக்குழு நாட்டுக்கு வரும்போது தான் இது தொடர்பில் ஒரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten