போருக்கு பிந்தைய இலங்கை - ஆறாத வெட்டுக் காயத்திற்கு மருந்திற்குப் பதில் உப்பை தடவுதல்..? தி சோசியல் ஆர்கிடெக்டஸ்..!
22 3 12
The Social Architects, TSA என்ற கட்டுரை சொல்வது என்ன..?சர்வதேச சமூகங்களுக்கு தெரியவராத பல உண்மைகளை உள்ளடக்கிய TSA - வின் கட்டுரை இணையத்தில் வெளிவந்துள்ளது. மிக விரிவான மற்றும் அநேக ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள ஆவணம் தான் இந்த அறிக்கை. அதன் சாரம் இதுதான்.
திட்டமிட்ட ஸ்திரத்தன்மையுடன் சிங்கள மயமாக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக பகுதிகளும் என்ற ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார்கள் இந்த சோசியல் அமைப்பு. சீல் வடியும் புண்ணின் மேல் உப்பை தேய்த்து கட்டு போடுகிறார்கள். நன்கு திட்டமிட்ட சிங்கள மயமாக்கும் கொள்கையை விரிந்த பரந்த அளவில் தமிழர்களின் வரலாற்று பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில், மலையக பகுதிகளில், போருக்கு பிந்தைய காலங்களில் கட்டமைத்து வருகிறார்கள் இலங்கை ஆட்சியாளர்கள். சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கி வரும் சிங்கள மயமாக்கல் பல பத்தாண்டுகளாக பல்வேறு சிங்கள அரசுகளால் நடந்தேறி வருபவைதான். போருக்கு பிந்திய காலங்களில் வெகு வேகமாக சிங்கள கட்டமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்தி விட்டார்கள்.
இந்த அறிக்கை அல்லது ஆவணம் விவாதிக்கும் பொருளே, சிங்களமயம் என்பது ஒன்றும் புதிய சிந்தனை வடிவம் அல்ல, புதிய செயல் வடிவமும் அல்ல, ஏற்கனவே வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் தமிழர்களை சிறுபான்மையானவர்களாக நீடித்து வரும் வேளையில், மூன்று தசாப்தங்களாக உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணமும், மதிப்புமிக்க குடிமகன் உரிமையும் ஏற்படுத்துவதற்குப் பதில் அதாவது இரண்டு இனங்களுக்கு மத்தியில் ஒரு உறவு பாலத்தை உருவாக்குவதற்க்குப் பதில், யதார்த்தத்தில் இலங்கை நாட்டு குடிமக்கள் என்ற அந்தஸ்தை ஒடுக்கியும் அவமதித்தும் வருகிறது இலங்கை அரசு, குறிப்பாக தமிழர்கள் விடயத்தில் இவை அதிகம்.
மேலும் இந்த அறிக்கையில் காணப்படுவது என்னவெனில், சிங்கள மயமாதல் என்ற அதன் எல்லைகளைக் கடந்தும் அரசின் செயல் தந்திரங்களைக் கடந்தும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள், நிலம், ராணுவ ஊடுருவல், தமிழ் நிலங்களின் எல்லைகள், பெயர் மாற்றப்படும் தமிழர் கிராமங்கள் என்று மட்டுமல்லாமல் சிங்களமயமாக்கல் தமிழ் கலாச்சாரங்களின் வழியேயும் உருவாக்கப்படுகின்றன. தமிழர்களின் மதம், மதங்களின் வழியே வாழும் முறைகள், பொருளாதார வாழ்வுரிமைகள், அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வித் துறை என்று அனைத்திலும் இன்று சிங்களமயம் நிறுவப்பட்டு விட்டன. இன்றைய தமிழ் மக்களின் நிலை, போரில் இருந்து மீளவும், தங்களின் சமுக உறவுகளை மீட்டுருவாக்கம் செய்யவும், சமுக பொருளாதார வாழ்நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், இடித்து நொறுக்கப்பட்ட தங்களின் கோயில் வழிபாடு தளங்களை புனர் நிர்மாணம் செய்து கொள்ளவும் தன்னால் இயன்ற அளவில் மிக மிக குறைந்த அளவிலேயே முயற்சித்து வருகின்றனர்.
சிங்கள மயமாக்கல் என்பதின் முக்கியமே ராணுவ முகாம்களை நிறுவுவதின் மூலமே நடைபெற்று வருகின்றன. ராணுவ மயமாக்கல் மூலம் சிவில் சமூகத்தினை கட்டுக்குள் வைத்துக் கொள்வது, தற்பொழுது கூட வடக்கு கிழக்கில் ராணுவ நுழையீடு மூலம் அந்தப் பகுதிகளை நிரந்தர ராணுவ நிலையங்களாக மாற்றுவது, இந்த அறிக்கை கூட என்ன கூறுகிறது என்றால், சிங்கள மயமும் ராணுவ மயமும் இலங்கை அரசுக்கும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் பேருதவியாக இருக்கின்றன. தினசரி தமிழ் மக்கள் பொது வாழ்விலும், பொருளாதார நிலையிலும், சமுக நிர்வாகத்திலும் இந்த ராணுவ நுழையீடு மிகச் சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழர்கள் மத்தியில் நிரந்தரமாக அச்ச உணர்வையும் பீதியையும் உருவாக்கி அதன் மூலம் தமிழ் மக்களை அப்புறப்படுத்துவது என்பதே சிங்கள மயமாக்கல் என்பதின் அரசின் செயல்திட்டம் என்று கூட சொல்லலாம் என்கிறது இந்த விரிவான ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கை.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முடிந்து விட்டன யுத்தம் முடிந்து, தமிழ் மக்களிடையே இலங்கை அரசின் காவல் துறையும், அரசின் கொள்கை வகுப்பாளர்களும் இணைந்து தமிழ் மக்களிடையே நிரந்தர பய உணர்வையும், நம்பிக்கையற்ற தன்மையையும் உருவாக்கி விட்டனர். மாறாக இரண்டு இனங்களுக்கிடையே பரஸ்பர நல்லெண்ணம் புரிதல் என்று இருப்பதற்குப் பதில், நிரந்தர இனவெறியும், இணையவே முடியாத வாழ்நிலையையும் உருவாக்கி விட்டன தற்போதைய மகிந்தர் ராஜபக்சே அரசு. யுத்த வெற்றிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது ராஜபச்கே அரசு. மூன்றில் இரண்டு மடங்கு பெருவாரியான நாடாளுமன்ற வெற்றி, பலமற்ற உறுதியற்ற எதிர்க்கட்சிகள் போன்றவைகள் காரணமாக தமிழ் மக்களின் குரல்களை பிரதிபலிக்க அங்கு ஒரு சிறு முணுமுணுப்புக் கூட கிடையாது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை, வேலை வாய்ப்பு, காணி மற்றும் சுயமரியாதை போன்றவைகளை அவர்கள் பெற முடியாத நிலையிலேயே வைக்கப் பட்டுள்ளனர். மகிந்தா அரசு, சிங்கள பேரினவாத அரச பயங்கரம் மூலம் தமிழ் மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன என்று விரிவாக பல ஆதரங்களுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக,
இந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக பெயர் மாறியவை மட்டும் 89.
யுத்தத்தின் போது இடிக்கப்பட்ட தமிழர்களின் கோயில்கள் மட்டும் 367. ஆக, முழுதும் இடித்து தள்ளிவிட்டார்கள்.
இந்த விரிவான அறிக்கையை தமிழ் ஆர்வலர்கள் விரைவில் தமிழில் கொண்டு வரவேண்டும்.
நன்றி தமிழ் இணையங்கள்
சங்கிலிக்கருப்பு
Geen opmerkingen:
Een reactie posten