ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் நோக்குடன் இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருக்க வேண்டும் என அவர் கூறினார்.
அமெரிக்க அனுசரணையுடனான தீர்மானத்தின் இறுதியான பிரதியை நாம் இன்னும் பார்வையிடவில்லை. ஆனால் நாம் ஆதரவான மனப்பாங்குடன் உள்ளோம்' என இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் உரையாற்றுகையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்திய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும்போதே அவர் இவ்வறிவிப்பை விடுத்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணையின் வாக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாமல் தவிர்த்தால் அல்லது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தால் இந்திய மத்திய அமைச்சரவையிலிருந்து தனது அமைச்சர்களை வாபஸ் பெறப் போவதாக திமுக எச்சரித்த பின்னணியில் மன்மோகன் சிங்கின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோக்சபாவிலுள்ள 18 திமுக எம்.பிகளின் ஆதரவானது பிரதமர் மன்மோகன் சிங்கின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் நிலைத்திருப்பதற்கு அவசியமாகவுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten