நெடுந்தீவில் பள்ளி மாணவி ஒருத்தி ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒருவனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் பரிதாபகரமாக கொல்லப்பட்டுள்ளாள். அவளை மாணவி என்றுதான் எல்லா ஊடகங்களும் விழித்தன.
இந்த சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியை தருவது அவள் ஒரு 13 வயதுச் சிறுமி என்பதே. ஒரு குழந்தை என்று கூட பாராமல் இரக்கமற்ற வகையில் அந்தச் சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளாள்.
இதுதான் இன்று ஈழப் பெண்களுக்கு ஈழத்தில் உள்ள சூழலும் சுகந்திரமும். அண்மையில், பருத்தித்துறையில் கூட இப்படி ஒரு பள்ளி மாணவி மர்மமாக கொலை செய்யப்பட்டிருந்தாள்.
இன்று அனைத்துலகப் பெண்கள் தினமாகும். உலகப் பெண்கள் எழுச்சி தினத்திற்கு ஈழத்துப் பெண்கள் மிகவும் உன்னதமான பங்காற்றியிருக்கிறார்கள்.
ஈழப் பெண்கள் இன்று பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், ஈழப் பெண்களின் வரலாறு மற்றும் பங்களிப்பு பற்றிய விடயங்களை மீளப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
வெறும் பண்பாட்டுச் சித்திரங்களாகவும் சமூக அடிமைகளாகவும் பார்க்கப்பட்ட தமிழ் பெண்கள் நவீன உலகத்தில் ஆளுமை மிக்க பெண்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதிலும் நவீன உலகின் பொருளாதார அரசியல் மோதல்களிலும் உரிமைகளுக்கான போர்க்களங்களிலும் ஈழத்துப் பெண்கள் வகிக்கும் இடமானது, ஈழத்துப் பெண்களை பெரும் கவனத்திற்கும் அர்த்தத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறது.
ஈழத்து மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈழப்பெண்கள் சரிநிகரான இடத்தை வகிக்கிறார்கள். பெண் என்ற அடையாளத்தினால் எழும் அடையாளச் சிக்கல்களின் அர்த்தங்கள் மாறிப்போயிருக்கிறது.
ஈழத்துப் பெண்கள் இலக்கத்தியத் துறையிலும் களப் போராட்டப் பணிகளிலும் மனித உரிமைக்காக குரல் எழுப்பிய எழுச்சிகளும் தமிழ் மக்களின் வரலாற்றில் தனித்துவமான இடத்தை கொண்டிருக்கிறார்கள்.
தவிர உலகப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து முற்றாக விலகி பண்பாட்டுச் சித்திரங்களாகவும் சமூக அமைப்புக்களின் மரபுச் சட்டங்களுக்குள் சிக்குண்டவர்களாகவும் இருந்த பொழுது ஈழப் புரட்சி, ஈழப்பெண்களை அத்தகைய நிலையிலிருந்து மீட்டெடுத்திருந்தது.
ஈழத்து மண்ணில் ஈழ மக்களின் போராட்டங்களில் இந்தப் பெண்கள் உழைத்த தருணங்களும் அதற்காக அவர்கள் கொல்லப்பட்ட தருணங்களும் மனித உரிமைகளுக்காக வாழ்ந்த தருணங்களும் அதிகமானது. 'சிங்களச் சகோதரிகளே! இனி உங்கள் பெண் உறுப்புகளுக்கு வேலை இல்லை' என்று எழுதியவர் ஈழப் பெண்கவிஞர் கலா. 'கோணேஸ்வரிகள்' என்ற அவரது கவிதை மட்டடக்களப்பில் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு பெண் உறுப்பில் குண்டு வைத்து சிகதறடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோணேஸ்வரி என்ற குழந்தைகளின் தாயான பெண் பற்றி ஆவேசத்துடன் குறிப்பிடுகிறது.
கோணேஸ்வரி, சாரதாம்பாள், கிருஷாந்தி, தர்சினி, இசைப்பிரியா என்று பல பெண்கள் இராணுவ வலயங்களில் இப்படி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டவர்கள். பேசாலை, அல்லைப்பிட்டி போன்ற பல இடங்களில் மக்கள் கொலை செய்யப்பட்ட பொழுது பெண்கள் இறப்பதற்கு முன்பும் இறந்த பின்னும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
1996களில் செம்மணிப் புதைகுழியில் பல பெண்கள் இப்படி கொன்று புதைக்கப்பட்டார்கள். வன்னி யுத்தத்தில் பல பெண்கள், சிறுமிகள், போராளிப் பெண்கள் இப்படி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டார்கள். உரிமைகள் மீறப்பட்டன. ஈழப் பெண்கள் இலங்கை அரசால் அழித் தொழிக்கப்பட வேண்டும் என்றும் ஒடுக்கப்பட வேண்டும் என்று முக்கிய இலக்குகளாக மாறிப் போயிருக்கின்றனர்.
பெண் பூமி உருவாகும் உடல் என்ற வகையில் புனிதம் பெறுகிறது. பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் பெண் குறித்து மிகவும் பின்தங்கிய கருத்துக்களை விதைத்த ஆண் ஆதிக்க சமூதாயத்தில் ஈழப் பெண்கள் தமிழ் வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் புதிய அடையாளத்தை கொடுத்திருந்தார்கள்.
ஈழப் பெண்கள் களப் போராளிகளாக சாதனை நிகழ்த்தியிருந்தார்கள். காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் பெண் போராளியான ஈ.பீ.ஆர்.எல்.எவ் சோபாவுக்கு அடுத்து மாலதி ஈழப் போராட்டத்தில் முதன் முதல் மாவீரர் என்ற அடையாளத்தை பெறுகிறார்.
அங்கயற்கண்ணி முதன் முதலில் கரும்புலியாக தற்கொலையாக வெடித்து எதிர்த்தரப்பை அழித்தவர்.
சோதியா, விதுசா, துர்க்கா, சுரேந்தினி, பூபாலினி, தமிழகி, திவாகினி போன்ற பல ஈழப் பெண் போராளிகள் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டக் களத்தில் முக்கிய பங்கை வகித்திருக்கிறார்கள்.
இவர்கள் போர்க்கள ஆற்றலும் வலிமையும் கொண்ட பெண்களாக பரிணமித்தவர்கள். பெண் பற்றிய தவறான கருத்து வளர்க்கப்பட்ட தமிழ் சமூகத்தில் இப்படியான போராளிப் பெண்களின் எழுச்சி நிலைகள் புதிய அர்த்தத்தையும் நம்பிக்கையும் வலிமையுடன் சமூகத்திற்கு ஊட்டியிருந்தன.
தமிழ் இலக்கியத்தில் கவிதையில் ஈழப்பெண்கள் பெரும் அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழகம் தமிழ் இலக்கியத்தில் முன்னோடி என்ற பொழுதும் ஈழத்துப் பெண்களின் கவிதைகளின் எழுச்சியே முழுத் தமிழுக்கும் நவீன தமிழ்ப் பெண் கவிதைகள் பற்றிய அர்த்தத்தை மெய்ப்பித்திருந்தன.
சங்கரி, ஒளவை, சிவரமணி, செல்வி, சன்மார்க்கா, மைத்திரி என்று தொடங்கும் ஈழப்பெண் கவிதை வரலாறு தமிழகத்து பெண் கவிதைகளில் கடும் தாக்கத்தை செலுத்தியிருந்தன. ஈழப் பெண்கவிதைகள் போர்க்களத்தின் உள்ளிலிருந்தும் வெளியிலிருந்தும் வலிய குரல்களாக கிளம்பின.
கப்டன் கஸ்தூரி, கப்டன் வானதி, மேஜர் பாரதி போன்ற போராளிப் பெண்கவிஞர்கள் போர்க்கள அனுபவங்களை வீரச்செறிவுடன் மனிதாபிமானக் குரல்களுடன் எழுதினார்கள்.
செல்வி, சிவரமணி போன்ற பெண்கவிஞர்கள் போர்க்களத்திற்கு வெளியில் இருந்து போர்வாழ்வையும் மனிதாபிமானச் சிதைவுகளையும் மிக வலிய குரல்களில் எழுதினார்கள். மனிதாபிமானமற்ற ஈழ நிலத்தை கண்டு சிவரமணி தன்னை தானே எரித்து கொலை செய்து கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியான செல்வி மனிதாபிமானத்திற்காக கேள்வி எழுப்பியவர். ரஜனி திரணகம, தமிழ்கவி, தமிழவள், வெற்றிச்செல்வி, உலகமங்கை, ஆதிலட்சுமி போன்றவர்களும் ஈழத்தின் முக்கியமான பெண் ஆளுமைகளாக திகழ்ந்தவர்கள்.
ஈழத்து பெண்களின் கவிதை போக்குகளும் இலக்கியப் போக்குகளும் பண்டைய இலக்கிய மரபிலிருந்து முழுமையாக பார்வை நிலையிலும் குரல் எழு நிலையிலும் மாறுபட்ட எழுச்சியைக் கொண்டிருந்தன.
இலக்கியம் ஆண்களால் படைக்கப்பட்டு ஆண்களுக்கானதாக ஆண் ஆதிக்கத்தில் இருந்த பொழுது பெண்களுக்கான குரல்களையும் ஆண்களே படைத்துக் கொண்டிருந்தனர். ஈழப் பெண்கள் இந்த மரபையும் பாரம்பரியத்தையும் தகர்த்து பெண் அடையாளத்தை இலக்கியத்தில் நிறுவினார்கள்.
பின்னைய காலத்தில் தமிழ்நதி, அனார், பஹீமாஜஹான், பிரதீபா, மாதுமை, பானுபாரதி, கற்பகம் யசோதரா, ஆழியாள், றஞ்சினி, நிவேதா, வினோதினி, மலரா, தாட்சாயினி போன்ற பல பெண்கள் எழுத்துலகில் முக்கிய பதிவுகளை நிகழ்த்தினார்கள்.
இவர்களின் எழுத்துக்களும் பார்வைகளும் பெண் உடல் மொழி, பெண் மனவெளிகள், பாலியல் உலகம், பாலியல் விடுதலை, பெண் பற்றிய ஆணின் அதீதங்கள், அடக்குமுறை வாழ்வு போன்ற பல விடயங்களைக் குறித்து தெளிவாக உரத்துப் பேசியிருக்கின்றன.
போருக்குப் பிந்திய இன்றைய ஈழத்து சூழலில் பெண்கள் மீண்டும் அடக்கப்படுகின்ற ஒடுக்கப்படுகின்ற பாலியல் பொருட்களாக பாவிக்கப்படுகிற நிலைகள் அதிகரித்துள்ளன.
முழு இராணுவ வலயமாக்கப்பட்டு ஈழ நிலத்தில் சிறுமிகள், பெண்கள், விதவைகள், முன்னாள் பெண்போராளிகள் என்று சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலமைக்கு பெண்கள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
பெண்நிலைச் செயற்பாடுகளும் பெண் எழுத்துக்களும் இன்று ஈழத்தில் தடைப்பட்டுள்ளன. ஈழத்தில் தாயாகவும் யுவதியாகவும் குழந்தையாகவும் பெண்கள் இன்று அனுபவிக்கும் இன்னல்கள் மிகவும் கொடுமையானவை.
எண்பதுகளில் ஏற்பட்டதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெண் நிலை சார்ந்த எழுச்சிகளும் முனைப்புக்களும் உரையாடல்களும் நடவடிக்கைளும் தேச வீழ்ச்சியும் சமூக வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ள இன்றைய ஈழத்து பெண் சூழலில் மீண்டும் அவசியமாகின்றன என்பது இன்றைய உலகப் பெண்களின் தினத்தில் உணரப்பட வேண்டியது அவசியமாகிறது.
ஆதீரா
Geen opmerkingen:
Een reactie posten