தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 april 2012

"பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்;" பற்றி - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 03)


புலிப்பாசிசம் தங்களை "போராடும் இயக்கமாக" மட்டும் காட்டவில்லை. "கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்ட அமைப்பாக", "தியாகமும் வீரமும் அர்ப்பணிப்பும்" கொண்ட அமைப்பாகவும் காட்டியது. இதற்குள் மட்டும் அது தன்னை குறுக்கி காட்டிவிடவில்லை. தன்னை "பல அணி, பலமுகாம்" கொண்ட, பாசிச முன்னணியாகவும் காட்டிக் கொண்டது. இதன் மூலம் தன்னை ஜனரஞ்சகமுள்ள, முழு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும், அனைத்துச் சமூக முரண்பாடுகளையும் தீர்க்கும் அமைப்பாகவும் காட்ட முற்பட்டது.
இதற்கு இடது – வலது "புலமை" சார்ந்த பிரமுகர்கள் கைகொடுத்தனர். இந்த வகையில் "பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்" கொண்ட பாசிச மயமாக்கல் வன்னி தொடக்கம் புலம் வரை அரங்கேறியது. இந்த வகையில் வன்னியில் இருந்து "வெளிச்சம்" இதழ் மட்டும் வரவில்லை. மாற்றுக் கருத்துத் தளத்தில் புலத்தில் இருந்து "தமிழீழக்கட்சி"யும் அதன் வெளியீடுகளும், புலிக்கு ஆதரவாக புலிப் பாசிசத்தை நியாயப்படுத்தி வெளிவந்தது. வெளிச்சம் இதழ் போல் புலத்தில் "பாரிஸ் ஈழமுரசு" தொடங்கி இறுதியில் சரிநிகர் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் வரை, இந்தப் பாசிசமயமாக்கலுக்குள்ளிழுத்து தன்னை விரிவாக்கியது. புலிக்கு எதிரான பிரபல புத்திஜீவிகளாக தம்மைக் காட்டிக் கொண்ட சிவராம், ஜெயபாலன், சேரன், நித்தியானந்தன்… முதற்கொண்டு மையவாதிகளாக காட்டிக்கொண்ட சிவத்தம்பி வரை புலிப் பாசிசத்தை தொழுது அதை "தமிழனின்" பொது அரசியலாக்கினர்.
இந்த பாசிசமயமாக்கல் பின்னணிக்கான அரசியல் கோட்பாட்டு அடித்தளம் "பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்" கொண்ட அணிதிரட்டல் தான். இந்த வகையில் மக்களுக்கு எதிரான பாசிசத்தை ஒருங்கிணைத்த புள்ளிகள்
1. அறிவுப் புலமை சார்ந்த ஓட்டுண்ணிப் பிரமுகர்தனமும், அதன் சுய இருப்புசார் பிழைப்புத்தனமும்
2. "கறுப்பு–வெள்ளை"யற்ற, மக்களின் நடைமுறை வர்க்க அரசியலை மறுக்கும் பன்மையிலும்
3. "தமிழன்" என்ற குறுகிய அடையாளத்திலும்
இது தன்னை கோட்பாடாக்கி ஒருங்கிணைத்தது.
இதைப் பிரதான அடிப்படையாகக் கொண்டு புத்திஜீவிகளின் அரசியல் பின்புலத்தில், புலி பாசிசமயமாக்கல் எங்கும் அரங்கேறியது. 1990 களில் மெதுவாக தொடங்கிய போக்கு 2000 இல் உச்சத்தை எட்டியது. சமூகத்தை மையப்படுத்திய கருத்துகள், சிந்தனைகள், நடைமுறைகள் படிப்படியாக, அரசியல்ரீதியாக எமக்கு வெளியில் இல்லாமல் போனது. எல்லாம் புலியானது. எஞ்சியது அரசானது. இதுதான் 2000 க்குப் பிந்தைய அரசியல் உண்மையும், அரசியல் எதார்த்தமுமாகும். இது படிப்படியாக அரங்கேறியது.
இந்த வகையில் புலிப்பிரமுகர் கருணாகரன் முன்னின்று உருவாக்கிய வெளிச்சம் "பல அணிகளில் இருந்தவர்க"ளையும், "பல முகாம்களைச் சேர்ந்தவர்களை"யும் உள்வாங்கி பாசிசமயமாக்கியது. புலிப் பாசிசத்தின் அரசியல் தேவைதான் இந்த "பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்" கொண்ட அரசியல் அணிதிரட்டல். கருணாகரன் கூறுகின்றார்"இதை நான் ஆரம்பத்திலேயே வலியுறுத்தியிருந்தேன்." என்கின்றார். இப்படி "கறுப்பு வெள்ளை"யற்ற "வெளிச்சம்" இதழின் வருகையின் பின்னான தனது வழிகாட்டலையும் முன்னெடுப்பையும் சரியான அரசியல் வழியாக இன்றும் கூறுவதுடன், அதையே இன்றைய அரசியல் தெரிவாகவும் மாற்றாக முன்வைக்கின்றார். அன்று புலிக்கு பின் பாசிசமயமாக்கலாக இருந்த இந்த அரசியல் வழிமுறைதான், இன்று "கறுப்பு வெள்ளை"யற்ற ஒன்றாக முன்தள்ளுகின்றார்.
தனது முன்முயற்சியுடன் உருவான இந்தப் பாசிச அரசியல் மயமாக்கற் பின்புலத்தில் "வெளிச் சூழலிலும் பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதைப் புரிந்து கொண்டு, தங்கள் வரையறைகளைக் கடந்து ஒத்துழைத்தனர்." என்கின்றார். இதற்கு ஒத்துழைக்காதவர்களையும் இந்தப் பாசிச மயமாக்கலுக்கு உடன்படாதவர்களையும், எதிர்த்தவர்களையும் "துரோகியாக்கி" கொல்லுகின்ற அரசியலும் நடைமுறையும் அக்கம் பக்கமாக அரங்கேறியது.
ஆக இப்படி இரண்டு தளத்தில் பாசிசம் ஜனரஞ்சகமாகியது. இந்த வகையில் "பல அணிகளில் இருந்தவர்க"ளை "பல முகாம்களைச் சேர்ந்தவர்க"ளை படுகொலை செய்த பின்னணியில் பாசிசத்தை மேலும் பலப்படுத்தும் "வெளிச்சம்" இதழில் பிரமுகர்கள் எழுதத் தொடங்கினர். அப்படி "கறுப்பு வெள்ளையற்ற" புலிப் பாசிசத்தின் பின் தன் வழிகாட்டலில் எழுதியவர்கள் விபரத்தையும் கருணாகரன் தன் பேட்டியில் பெருமையாக பட்டியல் இட்டுக்காட்டுகின்றார். "வெளிச்சத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் எழுதினார். அ. யேசுராசாவும் எழுதினார். அன்ரன் பாலசிங்கமும் எழுதினார். தேசிய கலை, இலக்கியப் பேரவையைச் சேர்ந்த க. தணிகாசலமும் (தாயகம் ஆசிரியர்) எழுதினார். பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, கலாநிதி சபா ஜெயராசா ஆகியோரும் எழுதினர். செங்கை ஆழியானும் எழுதினார். சட்டநாதனும் எழுதினார். டானியல் அன்ரனியும் எழுதினார். முருகையன், குழந்தை ம. சண்முகலிங்கம், சாந்தன், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி, சு.வி.நிலாந்தன், மு.திருநாவுக்கரசு, த.கலாமணி, பா.அகிலன் என சகல தரப்பினரும் எழுதினர். மேலும் பலரை எழுதுவதற்கு நாங்கள் தூண்டியிருக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் ‘வெளிச்சம்’ இதழ் வெளிவந்த களத்துக்கு வெளியே இருந்தவர்களை எழுதக்கோருவதற்குப் பொருத்தமற்ற சூழல் நிலவியது. மற்றும்படி சாத்தியப்பட்ட அளவில் ஈழத்தின் இலக்கிய ஆளுமைகளிற் பெரும்பாலானவர்கள் எழுதுவதற்கான, பங்கேற்பதற்கான களத்தைத் திறந்தோம். மேலும் ஏராளம் புதியவர்கள் வெளிச்சத்தில் தொடர்ந்து அறிமுகமாகியவாறேயிருந்தனர். முஸ்லிம் படைப்பாளிகளை போதிய அளவில் உள்ளடக்க முடியாமற்போனமை பெரும் குறைபாடே. ஒரு சிலர் மட்டும் எழுதியுள்ளனர்."இப்படிப் பாசிசத்தின் பின் எழுதிய பட்டியலை வெளியிடுகின்றார். மக்களை பாசிசத்துக்கு எதிராக வழிகாட்ட வேண்டிய அரசியல் பணியை, இந்த வகையான பிரமுகர் பின்னால் நாம் கடுகளவும் காணமுடியாது. இந்த உண்மையை இது போட்டுடைக்கின்றது."இதழ் வெளிவந்த களத்துக்கு வெளியே இருந்தவர்களை எழுதக்கோருவதற்குப் பொருத்தமற்ற சூழல் நிலவியது." இவர்களுடன் இந்தப் பட்டியல் சுருங்கிப்போனது. அல்லது இன்னும் பலரை இது உள்வாங்கி இருக்கும்.
இதை இன்றும் அரசியல் கேள்விக்குள்ளாக்காத, அதைச் சரியென்று பெருமையாக முன்வைக்கின்ற பிரமுகர் அரசியல் தளத்தில் "கறுப்பு-வெள்ளை" அற்ற அரசியல் இலக்கிய தேர்வை, மிக அழகாக ஓப்பிட்டு இனம் காண முடியும். இவர்கள் காலச்சுவடு முதல் முகப்பு நூல் வரை, பரஸ்பரம் முதுகு சொறிகின்ற கூத்தை நாம் அடிக்கடி பல தளத்தில் காணமுடியும்.
புலிக்குள் பாசிச மயமாக்கல் சார்ந்து இருபோக்கும், ஒன்றாக அக்கம்பக்கமாக பயணித்தது. "பல முகாம்களைச் சேர்ந்தவர்" "பல அமைப்புகளைச் சேர்ந்தவர்" தம்முடன் முரண்பட்ட போது கொல்லும் போக்கும் மறுதளத்தில் தம்முடன் முரண்படாதவர்களை அரவணைக்கும் போக்கும், பாசிச கட்டமைப்புக்குள் அரங்கேறியது. முரண்பட்ட பிரிவு அரசியல் ரீதியாக இல்லாதாக்கப்பட்ட நிலையில், புலிக்குள் இரண்டு அணிக்கு இடையிலான அதிகார மோதலாக அது மாறுகின்றது. பாசிசத்தை எந்த வடிவில் முன்னெடுத்துச் செல்வது என்பது, முரண்பாட்டின் மையக் கூறாகின்றது.
வெளித்தெரியாத புள்ளியில் பாசிசத்தை பலமாக்கும் வண்ணம் நடந்தேறிய சமரசமான இருநிலைப் போராட்டம், சமரசமற்ற எதிர்ப் போராட்டமாக மாறுகின்றது. பலர் இந்தப் போக்கில் பாதிக்கப்பட்டு ஒதுங்குகின்றனர். இந்தவகையில் "தமிழீழக்கட்சி" சிதைகின்றது. "ஈழமுரசு" "கஜன்" மற்றும் நாதன் பாரிசில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். உலகெங்கும் புலிக்குள் அதிகாரங்கள் கைமாறுகின்றது. "ஈழமுரசு" இல் எழுதிய சிறீரங்கன் உட்பட பலர் ஒதுக்கப்படுகின்றனர் அல்லது ஒதுங்குகின்றனர். இப்படி அரங்கேறிய அரசியல் பின்புலத்தில் தான் "வெளிச்சம்" இதழிலும் இவை பிரதிபலிக்கின்றது.
கருணாகரன் இதை எப்படி இன்றைய தன் பிரமுகர்தன இருப்புக்கு ஏற்ப பிரதிபலிக்கின்றார் என்று பார்ப்போம். "இதேவேளை, வெளிச்சத்தின் அரசியற் பங்களிப்புப் போதாது என்ற குற்றச்சாட்டுகள் வெளியீட்டாளர்களின் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டன. அந்த நெருக்கடியை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தீவிர நிலைப்பாடுடைய அமைப்பில் வெளிச்சத்தை இவ்வளவுக்கு நெகிழ்ச்சியுடையதாகக் கொண்டு வந்தது பெரியவிசயம். குறிப்பாக எந்தத் தரப்பின் மீதான வசைகளுக்கும் தீவிர எதிர்ப்புக்கும் குறிசுடுதல்களுக்கும் வெளிச்சம் இடமளிப்பதைத் தவிர்த்தது. தவிர, எல்லோருக்குமான இடத்தை அளிப்பதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், யதார்த்த நிலைமையை உணர்ந்து கொள்ளக்கூடியவர்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வர். பின்னர் காட்சி ஊடகத்திற் பணி.. இந்தப் பணியில் அதிக சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டேன். ஒரு காட்சி ஊடகத்தின் பரிமாணங்கள் எப்படி அமையவேண்டும் என்பதில் பலருக்கும் புரிதற் குறைபாடுகள் இருந்தன. ‘பரப்புரை ஊடகமாக அதை இயக்க வேண்டும்’ எனப் பலரும்... இல்லை, அதற்கும் அப்பால், ‘அது ஒரு பொதுத்தளத்தில் இயங்குவதாக இருந்தாலே அதற்கான மதிப்பு அதிகமாகும்’ எனச் சிலருமாக ஒரு உள்மோதல் அப்போது நடந்தது. இதில் நான் வெற்றியடைய முடியவில்லை. நான் நிகழ்ச்சிக்காக அழைத்தவர்களிற் பலர் பங்கேற்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக நான் பின்னகரவேண்டியிருந்தது." என்கின்றார்.
இப்படி புலிப் பாசிசத்தின் வளர்ச்சிப் போக்குக்கு வெளியில், அது சார்ந்த அதிகார முரண்பாடுகளுக்கு வெளியில், இன்றைய தன் அரசியல் பிரமுகர் தேவைக்குள் இதை குறுக்கிக் காட்டுகின்றார். ஆம் உண்மையில் புலம் வரை இது பிரதிபலித்தது.
புலிப்பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கின் வளர்ச்சியில், குறைந்தது மூன்று கட்டங்களைக் கொண்டது.
1.1985 -1995 வரையான காலம் - இது தாம் அல்லாதவர்களை வகைதொகையின்றி கொல்வதன் மூலம் பாசிசத்தை நிறுவிய காலம். "பல அணிகளில் இருந்தவர்க"ளை "பல முகாம்களைச் சேர்ந்தவர்க"ளை கண்ட இடத்தில் கொன்று குவித்த காலம்.
2.1995 – 2000 வரை அதாவது சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கிய காலம் வரை – தாம் அல்லாதவர்களை உள்வாங்கி ஜனரஞ்சகப்படுத்தி பாசிசத்தை பலப்படுத்திய காலம்;. "பல அணிகளில் இருந்தவர்க"ளை "பல முகாம்களைச் சேர்ந்தவர்க"ளை உள்வாங்கிய காலம்.
3.2000 பிந்தைய காலம் - தாம் அல்லாதவர்களை துரோகியாக்கிய காலம். இந்த பாசிசமயமாக்கலின்" பல அணிகளில் இருந்தவர்க"ளை "பல முகாம்களைச் சேர்ந்தவர்க"ளை பினாமியாக்கிய காலம். பிரமுகர்களின் இருப்பு சார்ந்த "சுய" அடையாளத்தை பாசிசம் இல்லாதாக்கி மறுதலித்த காலம்.
இப்படி மூன்று கட்டங்களில் அரங்கேறிய புலிப் பாசிசத்தின் அரசியல் பின்புலத்தில், புலிக்குள் அதிகாரம் கைமாறியது. அதன் வெளிப்பாடு தன்மை பண்பு ரீதியாக வேறுபட்டது. இந்த பின்புலத்தில் பாசிசத்தின் ஒரு அணி சார்ந்து கருணாகரனும், பல புலிப் பிரமுகர்களும் அங்குமிங்குமாக சிலர் முன்நிலையைப் பெற மற்றவர்கள் அதை இழக்கின்றனர். இப்படி பாசிசத்தை முன்னெடுத்த வழிமுறைகளில் ஏற்பட்ட முரண்பாட்டை காட்டி, அதில் தன்னை நியாயப்படுத்தி, அதை புலிக்கு பின் தங்களை ஒத்த பிரமுகர்களுக்கான அரசியல் - இலக்கியப் பாதையாக இன்று முன்வைக்கின்றார்.
தொடரும்
பி.இரயாகரன்
06.04.2012

Geen opmerkingen:

Een reactie posten