தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 april 2012

பிரபாகரனை இந்தியாவே கொன்றிருக்க வேண்டும்!- முன்னாள் அமெரிக்க தூதரக அதிகாரி !


 [ தற்ஸ்தமிழ் ]
ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு மீண்டும் இந்திய படைகள் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லது கொன்றிருக்க வேண்டும் என்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார் முன்னாள் அமெரிக்க தூதரக அதிகாரி வில்லியம் அவெரி.
China's Nightmare, America's Dream: India as the next global power என்ற பெயரில் இந்த அவெரி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில்தான் இப்படிச் சொல்லியுள்ளார். அந்த நூலில் அவெரி சொல்லியுள்ளவற்றிலிருந்து சில பகுதிகள்...
ராஜீவ் காந்தி படுகொலையானது இந்தியாவின் பிராந்திய தலைமைத்துவம் மீதான தாக்குதலாகும். இதை இந்தியா உணர்ந்து கொள்ளாமல் போய் விட்டது. உண்மையில் ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் இந்திய இராணுவத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியிருக்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து வந்திருக்க வேண்டும் அல்லது தாக்குதல் நடத்திக் கொன்றிருக்க வேண்டும். இதைச் செய்ய இந்தியா தவறி விட்டது.
பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தி தண்டித்திருந்தால், அது இப்பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கும் ஒரு வலிமையான செய்தியாக அமைந்திருக்கும். தனது தலைவர்களை பிறரின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதில் இந்தியா சற்றும் தயங்காது என்பதாக அந்த செய்தி அமைந்திருக்கும். தனது அரசியல் அமைப்பையும், கட்டமைப்பையும், பாதுகாப்பையும் சமரசம் செய்து கொள்ள இந்தியா அனுமதிக்காது என்ற செய்தி போயிருக்கும்.
மேலும் தெற்காசியாவில் தனக்கு எந்த சவால் விடுக்கப்பட்டாலும் அதை சமாளித்து வெற்றி பெறும் திறன் தனக்கு உள்ளது என்பதை பிற நாடுகளுக்கு அது புரிய வைத்திருக்கும்.
ஆனால் ராஜீவ் காந்தி கொலையால் பயந்து போன இந்தியா, நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் அமைதியாகி விட்டது. தான் ஒரு பிராந்திய சக்தி என்பதையும் அது உணர்த்த முன்வரவில்லை, தீவிரமாக செயல்பட்டு ஒரு உலக சக்தியாகும் வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிந்னர் இலங்கைக்குள் நுழைய இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை இந்தியா சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு வேளை இந்தியா அதைப் பயன்படுத்தியிருந்தால் இன்று அது மிகப் பெரிய உலக சக்தியாக உருவெடுக்க உபயோகமாக இருந்திருக்கும்.
இருப்பினும் ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 1998ம் ஆண்டு பொக்ரானில் அது நடத்திய அணுகுண்டுச் சோதனை, இந்தியாவை உலக அரங்கில், குறிப்பாக அமெரிக்காவின் கண்களில் ஒரு முக்கிய சக்தியாக காட்ட உதவியது.
இந்தியாவைப் பொறுத்தவரை அது புத்திசாலித்தனமான முடிவுதான். அமெரிக்கர்களுக்கும் அதுவரை சுவாரஸ்யமில்லாத ஒரு நாடாக இருந்த இந்தியா, விஷயம் நிறைந்த ஒரு நாடாகத் தோன்ற ஆரம்பித்தது என்பதும் உண்மை என்று கூறியுள்ளார் அவெரி.
இந்த அவெரி வேறு யாருமில்லை, பில் கிளின்டன் மற்றும் ஜோர்ஜ் புஷ் அதிபர்களாக இருந்தபோது அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணியாற்றியவர். இந்தியாவிலும் தூதரக அதிகாரியாக பணியில் இருந்தவர்.

Geen opmerkingen:

Een reactie posten