தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 april 2012

இந்திய-இலங்கை ஒப்பந்தம் பெற்றெடுத்த 13ம் அரசியலமைப்பு திருத்தம் என்ற குழந்தை: மனோ கணேசன்


இந்திய-இலங்கை ஒப்பந்தம் பெற்றெடுத்த குழந்தை தான் 13ம் அரசியலமைப்பு திருத்தம், இது இந்திய அரசாங்கத்தின் சொந்த தயாரிப்பு. இதன்மூலம் மாகாணசபைகள் இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசியலமைப்பு திருத்தத்தின்படி அதிகாரம் பரவலாக்கப்படவில்லை.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை பலமுறை மீறியுள்ளது. நாட்டின் ஏனைய மாகாணங்களில் உள்ள இந்த அரைகுறை மாகாணசபைகூட இன்று வடக்கில் இல்லை.
கற்றுக்கொண்ட ஆணைக்குழு என்பது இலங்கை பெற்று எடுத்த குழந்தை. இந்நாட்டு அரசாங்கத்தின் சொந்த தயாரிப்பு. இதன் சிபாரிசுகளை அமுல் செய்வதாகத்தான் இலங்கை அரசு, உலகத்திற்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளது. இன்று இது தொடர்பிலும் அரசாங்கம் உலகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி கருத்து தெரிவிக்கிறது.
இந்திய-இலங்கை கூட்டு தயாரிப்பான 13ம் திருத்தத்தையும், இலங்கையின் சொந்த தயாரிப்பான கற்றுக்கொண்ட பாடங்கள் சிபாரிசுகளையும் குப்பையில் போட்டது ஏன் என இலங்கை அரசாங்க தலைவரிடம் இலங்கை வந்துள்ள இந்திய எம்பீக்கள் குழு கேள்வி எழுப்ப வேண்டும்.
இலங்கை விவகாரம் தொடர்பில் டெல்லியில் மாநாடு நடத்தியவரும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான சுதர்ஷன நாச்சியப்பன் இது தொடர்பில் கூடிய அக்கறை காட்டவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய எம்பீக்களின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாட்டு அரசாங்கங்களின் நல் உறவுகளுக்காக இலங்கை வாழ் வட-கிழக்கு, மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நல்வாழ்வு எப்போதும் பலிகடாவாக்கப்பட்டுள்ளன. இதுதான் கடந்த 60 வருட கால வரலாறு.
சம்பந்தப்பட்ட மலையக தமிழ் மக்களின் ஒப்புதல் இல்லாமல் சிறிமா-சாஸ்த்ரி நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது நடந்திராவிட்டால் இன்று, மலையகத்தில் இருந்து மாத்திரம், சுமார் 30 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் இருந்திருப்பார்கள். மலையக மக்களின் அரசியல் பலத்தை இந்தியா இந்த ஒப்பந்தத்தின் மூலம் காவு கொடுத்தது.
அதேபோல் வட-கிழக்கு மக்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. அதைக்கூட முழுமையாக அமுல் செய்விக்க பிராந்திய வல்லரசு என தன்னை பிரகடனப்படுத்தும், இந்திய அரசாங்கத்தால் முடியவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கி இந்திய மாநிலங்களுக்கு சமானமான ஒரு ஆட்சி அமைப்பை இலங்கையில் ஏற்படுத்த இன்னமும் இந்தியாவால் முடியவில்லை.
வட-கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள் ஆகியோருக்கு நியாயம் வழங்கப்படாமல் இலங்கையில் அமைதி திரும்ப முடியாது. தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்கப்படாமல் தடுத்து நிறுத்தி இருப்பது, இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் கடுமையான இனவாத கொள்கை என்பதை இந்திய பாராளுமன்ற குழு அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக கருதப்பட முடியாத மாகாணசபைகளைகூட தமிழ் பகுதிகளில் முழுமையான சட்டபடியான அதிகாரம் மிக்க சபைகளாக அமுல் செய்ய இந்த அரசாங்கம் தயார் இல்லை.
அதேபோல் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அனைத்து கொடுமைகளுக்கும் தீர்வு தராத, கற்றுக்கொண்ட ஆணைகுழு சிபாரிசுகளைகூட அமுல் செய்ய அரசாங்கம் தயங்குகிறது. அரைகுறை தீர்வுகளைக்கூட தருவதற்கு இலங்கை அரசு தயார் இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலைமைக்கு இந்திய அரசாங்கம் தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டும்.
இது தொடர்பில் இந்திய தூதுக்குழுவில் இடம்பெறும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் கட்சியை சார்ந்த சுதர்ஷன நாச்சியப்பன் ஆகிய முன்னணி எம்பீக்கள் தமது பயணத்தின் இறுதி தினத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் நடத்தும் சந்திப்பின் போது கேள்வி எழுப்ப வேண்டும். இதற்கு இலங்கை ஜனாதிபதி தரப்போகும் புதிய வாக்குறுதிகள் என்ன என்பதை அறிந்துகொள்ள உலகம் ஆவலாக காத்திருக்கின்றது.

Geen opmerkingen:

Een reactie posten