தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 april 2012

புலிகள் ஒரு மனிதனை அயன்(ஸ்திரிப்பெட்டியால் சுட்டு சூடு வைத்து) பண்ணிக் கொன்ற நிகழ்வு பற்றி - (வதைமுகாமில் நான் : பாகம் - 47)


குறிப்பு : பாசையூரில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி கேட்டேன். அதற்கு தண்டனை வழங்கியதாகச் சொன்னார்.

விளக்கம் : பாசையூர் சம்பவம் என்ன? புலிகளின் மக்கள்விரோத பாசிச நடத்தைகளை கேள்வி கேட்டு பாசையூர் பொதுமகன் ஒருவனை, புலிகள் வழமை போல் பழி-பலிவாங்க விரும்பினர். அவனை வேட்டையாட புலிகள் முயன்ற போது, அந்த அப்பாவி மனிதன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் புகுந்து ஒரு குருவிடம் சரண் அடைந்தான். அங்கு புகுந்த புலிகள் குருவைத் தாக்கிவிட்டு விசாரணையின் பெயரில், அந்த நேர்மையான அப்பாவி மனினை கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். அதில் ஒரு பக்கமாக அந்த மனிதனை உயிருடன் வைத்து முதுகை ஸ்திரிப்பெட்டியால் (அயன்பொக்ஸ்சால்) அயன் பண்ணினர். பாசிசம் கொழுப்பேற அயன் பண்ணியே, அந்த மனிதனைக் கொன்றனர். பாசையூர் மக்கள் கொதித்தெழுந்தனர். ஆனால் அடக்குமுறை அவர்களுக்கு பரிசாக கிடைத்தது. அடி உதை சித்திரவதை கைது மூலம் தேசியத்தின் பெயரில் புலிகள் அவர்களை ஒடுக்கினர். இந்த மக்கள் நெஞ்சில் பாசிசத்துக்கு எதிரான போர்க் குணாம்சம், தணலாக புகைந்து கொண்டிருந்தது.
பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் அந்த மக்கள் கூட்டம் கூட்டமாக, தன்னியல்பாகவே நாள் தோறும் வந்து கலந்து கொண்டனர். நான் புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பிய பின், புலிகளின் மேடையில் பகிரங்கமாக பேசிய போதும், அந்த மக்கள் அங்கும் சமூகம் தந்தனர். அந்த மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தை அடுத்து, பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் போது புலிகள் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில், இது தமது தவறு என்று புலிகள் ஒத்துக்கொண்டு, அந்த மக்களை திசைதிருப்ப முயன்றனர். நல்ல வேடம் போட்டு ஆட முயன்றனர். ஆனால் ஜனநாயகக் கோரிக்கையை அதே துண்டுப் பிரசுரத்தில் மறுத்தனர். அதேநேரம் இதை தலைமை தாங்கி அயன் பண்ணிய மலரவனுக்கு (வட்டுக்கோட்டை பகுதிகளுக்கு பொறுப்பாக இருந்தவன்), புலிகள் பதவி உயர்வு கொடுத்தனர். இத் துண்டுப்பிரசுரம் மூலம், அந்த மக்கள் ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் கலந்து கொள்வதை தடுத்து நிறுத்த புலிகளால் முடியவில்லை. இவை அனைத்தும், புகைந்து கொண்டே மக்களின் மனங்களில் உயிர் வாழ்ந்தது. இப்படி பல புகைந்து கொண்டிருக்கும் மனிதவிரோத புலி வரலாறே, எமது தேசிய வரலாறாக மற்றொரு பக்கம் நீண்டு கிடக்கின்றது.
குறிப்பு : நீங்கள் "சே" (சேகுவரா) யின் பாதையையா பின்பற்றுகிறீர்கள் என நான் கேட்க அவர்கள் இல்லை என்றனர். சேகுவேராவின் புத்தகங்கள் ஏன் விற்கிறீர்கள் எனக் கேட்க, மற்றைய புத்தகங்கள் இங்கே உள்ளன, அதனால் தான் இதை விற்கிறோம் என்றனர்.
விளக்கம் : புலிகளின் தனிநபர் பயங்கரவாத தாக்குதலுக்கு, கோட்பாட்டு ரீதியாக சேகுவேரா தத்துவம் பொருந்தி வந்தது. சேகுவேராவின் தத்துவம் இடதுசாரி கண்ணோட்டம் சார்ந்த நிலையில், தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்பதே, அதன் அரசியல் அடிப்படையாகும். வலதுசாரி அரசியல் நிலையில் நின்ற புலிகளின் தனிநபர் பயங்கரவாத தாக்குதலுக்கு, சேகுவேரா கோட்பாட்டு ரீதியாக ஆதரவு தந்தார். இதனால் சேகுவேரா புத்தகங்களை தமிழ் மண்ணில் விரிவாக புலிகள் பரப்ப முயன்றனர். இதை அடிப்படையாகக் கொண்டே அவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டேன்.
சேகுவோராவின் இடது தன்மையை புலிகள் வெறுத்தனர். ஆனால் தனிநபர்களைக் கொல்வதன் மூலம் அல்லது தனிநபர்கள், மக்களுக்கு வெளியில் எதிரியை தாக்குவதன் மூலம், விடுதலை பெறமுடியும் என்ற தத்துவம் புலிகளுக்கு இனிப்பாக இருந்தது. இது வலதுசாரித்தனத்தின் கடைக்கோடியில் சங்கமித்த போது, மாபியாக் கண்ணோட்டமே பாசிசமாக தகவமைத்துக் கொண்டது. தனிநபர் பாசிச சித்தாந்தம் மக்கள்விரோத கண்ணோட்டத்தை தேசியமாக்கியது. இப்படி மக்களை ஒடுக்கி ஆள்வதே தமிழ் தேசியமானது.
குறிப்பு : மறுமலர்ச்சிக் கழகமும் அந்தக் கட்டிடமும் மாணவருடையது, ஏன் அதைக் கைப்பற்றி வைத்துள்ளீர்கள் என கேட்க அதை தாமே உருவாக்கியது விடமுடியாது என்றனர்.
விளக்கம் : பல்கலைக்கழகத்தினுள் மறுமலர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு ஒன்றை, அனைத்து தரப்பு மாணவர்களும் உருவாக்கியிருந்தனர். அது தனியான செயல்பாட்டைக் கொண்டதுடன், அதற்கான இடத்தை பல்கலைக்கழகத்தினுள் கொண்டு இருந்தது. இந்த அமைப்பு சில தொடர்ச்சியான வெளியீடுகளைக் கொண்டு வந்தது. இந்த அமைப்பில் புலி சார்பு மாணவர்களும் இருந்தனர். இந்த அமைப்பை தமது வழமை போல் அடாத்தாக புலிகள் துப்பாக்கி முனையில் தமதாக்கியதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் அல்லாதவர்கள் கூடி சதிகளை கட்டமைக்கும் இடமாக பின்னால் மாற்றினர். மாணவர்கள் என்ற போர்வையில் பல்கலைக்கழகத்தில் புகுவதுடன், சதிகளுக்காக இங்கு கூடி திட்டமிட்டவர்கள் மாணவர்களுக்கு எதிராக செயல்படும் ஒரு மையமாக்கினர். வெளி நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும், ஒரு போர்வையாகவும் இதைப் புலிகள் பயன்படுத்தினர். மாணவர்களுக்கு எதிராக இந்த அமைப்பை புலிகளின் சதியிடமாக மாற்றியதில், தற்போது நோர்வேயில் வசிக்கும் சர்வேந்திரா, சிவரஞ்சித் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் இன்று வரை புலியாகவும், புலிப் பினாமியாகவும் செயல்படுபவர்கள். இவர்களின் துணையுடன் தான் பல மக்கள்விரோத சதித் திட்டங்களை, புலிகள் பல்கலைக்கழக கட்டிடத்தில் உள்ளிருந்தபடி செய்ய முடிந்தது.
குறிப்பு : சோதிலிங்கம், விமலேஸ்வரன் எங்கே என்று புலிகள் கேட்டனர்?
விளக்கம் : விஜிதரன் போராட்டத்தில் சோதிலிங்கம் தலைவராகவும், விமலேஸ்வரன் செயலாளராகவும் செயல்பட்டனர். விஜிதரன் போராட்டத்தை வன்முறை மூலம் புலிகள் தாக்கி ஒடுக்கியதன் பின், விமலேஸ், சோதியை தம்மிடம் ஒப்படைக்கக் கோரினர். அவர்கள் மேல் விசாரணை செய்ய வேண்டும் என்றனர். இது அமெரிக்கா பாணியில் அடாத்து அரசியல். பல்கலைக்கழகம் ஒப்படைக்க இணக்கம் தெரிவித்த அதேநேரம், உயிருக்கு உத்தரவாதத்தைக் கோரியது. புலிகள் உயிருக்கு உத்தரவாதம் தர மறுத்தனர். இதனால் பல்கலைக்கழகம் ஒப்படைக்க மறுத்தது. இதனால் இருவரும் தலைமறைவாகினர்.
இதன் பின் விமலேஸ்வரனை 1988 இல் புலிகள் வீதியில் வைத்து படுகொலை செய்தனர். சோதிலிங்கம் அங்கிருந்து தப்பி கொழும்பு சென்றார். நான் இந்த நூலை தொகுத்து எழுதிய காலத்தில் (2001-2003 இல்), சோதிலிங்கம் விமர்சனத்துக்குரிய நூல்களை எழுதியிருந்தார். அத்துடன் புலிகளின் பினாமியாக செயல்படத் தொடங்கியதுடன், புலிகளின் செய்தி அமைப்புகளில் சிறப்பு ஆய்வாளராகவும் பவனி வந்தார். பலர் எப்படி புலிப் பினாமியாகி நக்கிப் பிழைத்தனரோ, அதுவே இவரின் கதியாகியது. அன்று அவர்களின் கையில் சிக்கியிருந்தால், எலும்பு கூட கிடைத்திருக்காது. இது புலிப் பினாமிகள் பலரின் நிலையும் கூட. ஒரு கட்டத்தில் துரோகியாக முத்திரை குத்தி படுகொலை செய்ய முயன்ற போது, அதில் இருந்து தப்பிச் சென்றவர்கள் பலர் பின்னால் பாசிசப் புலிகளின் பினாமிகளாக வெளிவந்த வண்ணம் இருந்தனர். இது எமது பாசிச வரலாற்றில், மாபெரும் துரோகமாகவே அரங்கேறுகின்றது.
குறிப்பு : அமைப்புக் குழு உறுப்பினர் யார் யார்? என்று கேட்டனர்.
குறிப்பு : ஸ்ரேலா எங்கே? என்றனர்
விளக்கம் : பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய குழுவே அமைப்புக் குழுவாகும். அதில் ஸ்ரேலாவும் ஒருவர். மிகச் சிறந்த பேச்சு வல்லமை உள்ளவர். இந்தப் போராட்டம் தொடங்கிய போது, பல்கலைக்கழகத்தின் போராட்டம் தொடர்பான வரலாற்று உரை ஒன்றை நடத்தினார். அந்த பேச்சை உள்ளடக்கிய ஒளிநாடா தற்போதும் என்னிடம் உள்ளது. நாவலனால் எழுதப்பெற்ற உரைக்குரிய கட்டுரையை, அன்று அவர் வாசித்தார். இந்த உரையின் உள்ளடக்கமும், அதை வெளிப்படுத்திய கணீரென்ற குரலும், கேட்போரை உணர்ச்சி வசப்படுத்தும் வகையில் பாசிச கூறுகளை தெளிவாக அம்பலப்படுத்துவதாகவும் இருந்தது. இதை அவரே தான் எழுதி வாசித்ததாக புலிகள் கருதினர். இதனால் புலிகள் அப் பெண் மீது விசேடமான அக்கறை கொண்டு, பழிவாங்க காத்துக் கிடந்தனர். ஆனால் அவர் புலிகளின் கையில் சிக்கி விடவில்லை.
பல்கலைக்கழக விடுமுறையைப் பயன்படுத்தி பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை அடாத்தாக மக்கள் என பினாமிப் பெயரில், புலிகள் வன்முறை மூலம் பல இடங்களில் ஒடுக்கினர். பலர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பெற்றனர். இதனால் இப் போராட்டம் சிதைந்தது. உணர்ச்சி வசப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் (இதில் நாவலன், ஸ்ரேலா..) அன்று இரவு, புலிக்கு எதிராக தனிநபர் பயங்கரவாத முயற்சியில் இறங்க வேண்டும் என்று கோரினர். இதில் இப் பெண்ணும் ஒருவர். குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த மறுமலர்ச்சிக் கழகக் கட்டிடத்தை தகர்க்கவேண்டும் என்றனர். என்னிடம் அதற்கான வெடிமருந்தைக் கோரினர். நான் இதற்கு எதிராக போராடியதுடன், உணர்ச்சி வசப்பட்ட எந்த அரசியலுமற்ற தனிநபர் பயங்கரவாத நடவடிக்கை, இந்த போராட்டத்தின் அரசியல்ரீதியான வெகுசன உள்ளடக்கத்தையே சிதைக்கும் என்று கூறி அன்று அதை தடுத்து நிறுத்தினேன்.


































Geen opmerkingen:

Een reactie posten