தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 april 2012

சிறிலங்கா அதிபருடன் விருந்துண்பதற்கு அதிமுக உறுப்பினரை அனுப்ப முடியாது - ஜெயலலிதா அறிவிப்பு!


[ அ.எழிலரசன் ]
சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுடன் விருந்துண்பதற்காக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை சிறிலங்காவுக்கு அனுப்ப முடியாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

போருக்கு பிந்திய ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வரும் ஏப்ரல் 16 நாள் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் கொழும்பு செல்லவுள்ளது.

21ம் நாள் வரை அங்கு தங்கியிருந்து, இவர்கள் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிடவுள்ளனர்.

இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை இந்திய வெளிவிவகார மற்றும் நாடாளுமன்ற அமைச்சுக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்தக் குழுவில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னார்ட் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்கா செல்லும் குழுவில் அதிமுக உறுப்பினர் இடம்பெறமாட்டார் என்று அறிவித்துள்ளார்.

“சிறிலங்கா பயணம் குறித்த நிகழ்ச்சி நிரல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தப் பயணம் வெறும் கண் துடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது.

பாரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

இந்தப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கும் ஒழுங்குகள் கூட இல்லை.

அவருடன் விருந்து உண்ணவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த பயணம் ஏதோ ஒரு சுற்றுலா பயணமாகவே அமையும்.

எனவே இந்தப் பயணத்தில் அதிமுக இடம்பெறாது.“ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20120411105978

Geen opmerkingen:

Een reactie posten