தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா கையாள்வது இராஜதந்திரம் என்கிறார் அமைச்சர் சிதம்பரம்!


இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த பிரச்சினையில் இந்தியா இராஜதந்திர நடவடிக்கையைக் கையாண்டு வருகிறது என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரித்தமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை இரவு திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ப. சிதம்பரம் மேலும் பேசியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் பொறுப்புகள் உள்ளன. அதைக் காங்கிரஸ் மதித்து நடக்கிறது.
இலங்கையும் இறையாண்மை பெற்ற நாடு. எனவே, அயல்நாடு தொடர்பான பிரச்சினையில் ஒவ்வொரு கட்டமாகத்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
அதன்படி, முதல்கட்டமாக கவனமாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்டார்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியா முடிவெடுக்கும் எனப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
பின்னர் மார்ச் 19-ல் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது, அதைப் பிரதமர் வெளிட்டார். மிகுந்த கவனத்தோடு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அந்த அறிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல. 46 நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட செய்தி. சில நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையே அது.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 24 நாடுகள் ஆதரித்தன; 15 நாடுகள் எதிர்த்தன, 8 நாடுகள் நடுநிலை வகித்தன.
இந்தியா தனது அறிக்கையை கவனமாகத் தயாரித்திருக்காவிடில் ஆதரவு, எதிர்ப்பு நிலை மாறியிருக்கும். எனவேதான் மிகுந்த இராஜதந்திரத்தோடு இந்த விஷயம் கையாளப்பட்டது.
மொரிசியஸ், ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
இந்த தீர்மானத்தின் மீதான அடுத்த நிலையில், இந்த நாடுகளையும் தனது பக்கம் இழுக்கும் இராஜதந்திரத்தையும் இந்தியா கையாளும். என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten