தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 april 2012

எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயார்!- ராஜபக்சவின் முன்னாள் நண்பர் நிமல்கா பேட்டி !


 [ விகடன் ]
என்னுடைய நண்பர்  மகிந்த ராஜபக்ச இப்படித் தலைகீழாக மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் ஒரு நபராக மாறுவார் என்று நான் நினைக்கவே இல்லை. என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்..
இலங்கையை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கைக்குள் நுழைந்தால், காலை உடைப்பேன்’  என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்டவர் மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்னாண்டோ.
ஐ.நா. பேரவையில் உரையற்றி, அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிய பின்னர் சென்னை வந்த இவரால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியவில்லை. அவரைச் சந்தித்தோம்.
கேள்வி: ஒரு காலத்தில் நீங்கள் ராஜபக்சவின் நண்பராக இருந்தவர்தானே... உங்களுக்கே இப்​போது நெருக்கடியா?
பதில்:  ஆமாம். ஆனால் நண்பரா... இல்லையா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் இப்படித் தலைகீழாக மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் ஒரு நபராக மாறுவார் என்று நான் நினைக்கவே இல்லை. 80-களில் நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களில் எங்களோடு இணைந்து நின்று குரல் கொடுத்தவர் மகிந்த ராஜபக்ஷே என்பது பலருக்குத் தெரியாத செய்தி.
இடதுசாரிகள் வலுவாக இருந்தபோது, அவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்​கொண்டார். பின்னர் 1988-ல் சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்க கொல்லப்பட்டார். அப்போது இலங்கை சுதந்திராக் கட்சியில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது அந்த வெற்றிடத்தை மிகச் சாதுரியமாகப் பயன்​படுத்திக்கொண்டார் ராஜபக்ச. அதில் இருந்துதான் மாறிவிட்டார்.
ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலக்கட்டத்தில் காணாமல்​போன சிங்கள இளைஞர்களுக்காக, ராஜபக்ச குரல் கொடுத்தார். ஆனால், அவருக்குள் ஒளிந்திருந்த சிங்களத் தேசியவாதியை அப்போது எங்களால் அடையாளம் காண முடியவில்லை.
அரசியல் தலைவராக உருவான பின்னர் அவர், பௌத்தத் துறவிகள், பௌத்த மதச் சடங்குகள் என்று தன்னை மாற்றிக்கொண்டார்.
மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு போலியாக தன்னை ஒரு மனித உரிமை ஆர்வலராகக் காட்டிக்கொண்ட ராஜபக்சவின் கடந்தகால மனித உரிமைச் செயல்பாடுகள் போலி​யானவை. அது மக்களையும் அவரோடு பணியாற்றிய என்னைப் போன்ற மனித உரிமையாளர்களையும் ஏமாற்றிய செயல்!
கேள்வி:  ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நீங்கள் என்ன பேசினீர்கள்?
பதில்:   இலங்கைக்குள் பேச முடியாததை ஜெனீவாவில் பேசி​னேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மனித உரிமைகளுக்காக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் குரல் கொடுத்து வருகிறேன்.
இப்போது மனித உரிமைகளைக் கொன்ற ஜனநாயகமற்ற நாடாக இலங்கை இருக்கிறது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை வைத்திருக்கும் ராஜபக்சவுக்கு எதிராக இலங்கையில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை.
இலங்கைக்குள் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், எல்லோருமே அமைதியாகிவிட்டனர். அங்கு நடத்தப்பட்ட போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக எதையும் பேசமுடியாத நிலையில், ராஜபக்ச அரசு எதிர்க்கட்சிகளைக் கட்டுப்படுத்தி, ஊடகங்களைத் தாக்கி, வட பகுதித் தமிழ் மக்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்று பேசினேன்.
காணாமல்போனவர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நாட்டுக்கு உள்ளும் எவரும் பேசக் கூடாது, நாட்டுக்கு வெளியேயும் எவரும் பேசக் கூடாது என எதிர்பார்க்கிறார்கள். இது எப்படிச் சரியாகும்?
கேள்வி:  உங்களுடைய காலை உடைப்பேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியிருக்கிறாரே?
பதில்:  கை, கால்களை உடைப்பது, ஆட்களைக் கடத்துவது, அரசு ஊழியர்களை மரத்தில் கட்டி​வைப்பது இதெல்லாம் அவருடைய தொழில். காரணம் அவர் அரசியல்வாதி அல்ல, தலைமறைவு ஆயுதக் குழுக்களோடு தொடர்பு உடையவர். இதுபோன்ற சட்ட விரோத மனிதர்களைக் கொண்டுதான் ராஜபக்ச ஆட்சி செய்து வருகிறார்.
போருக்கு எதிராகவும், இனப்படுகொலைக்கு எதிராகவும் பேசியவர்கள் கொல்லப்பட்டார்கள், காணாமல்போனார்கள். பலர் பயந்து நாட்டைவிட்டு வெளியேறினார்கள். கடைசியில் எல்லா நியாயமான குரல்களும் ஒடுக்கப்பட்டுவிட்டன.
இப்போது அங்கு இருப்பவர்கள் எல்லாம் மேர்வின் சில்வாவும், விமல் வீரவன்சவும், இவர்களை வழி நடத்தும் ராஜபக்ச போன்றவர்களும்தான். ஆனால் என்னைப் பொறுத்த வரை, மக்களின் மனித உரிமைகளுக்காக எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.
கேள்வி:  போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வட பகுதித் தமிழ் மக்களின் நிலை எப்படி உள்ளது?
பதில்:  யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்துவிட்டாலும், அது மக்களுக்குப் புதிய புதிய பிரச்னைகளை உருவாக்கிவிட்டது.
போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. உறவு, நிலம், வீடு என ஒட்டுமொத்த வாழ்வையும் அவர்கள் இழந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு நிவாரணங்களும் இல்லை. அரசோ, தன்னார்வக் குழுவோ அடுத்த வேளைக்கு ஏதாவது தர மாட்டார்களா என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
வட பகுதியில் 80 சதவிகித தமிழ்க் குடும்பங்களைப் பெண்கள்தான் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். காரணம், ஒவ்வோர் இல்லத்திலும் உள்ள ஆண் கொல்லப்பட்டுவிட்டார், அல்லது காணாமல் போய்விட்டார், அல்லது தடுப்பு முகாமில் உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புதிய முகாம்களை உருவாக்கி இருக்கிறார்களே தவிர, 23 ஆண்டுகளாக வைத்திருக்கும் பழைய முகாம்களைக்கூட கலைத்துவிடவில்லை. அப்புறம் எப்படி நிலைமை மாறிவிட்டதாக சொல்லமுடியும்.''
எந்தப் பயமும் இல்லாமல் பேசுகிறார் நிமல்கா! 

Geen opmerkingen:

Een reactie posten