தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

ஜேவிபி மாற்றுக்குழுத் தலைவர் குணரட்ணம் கடத்தப்பட்டது எப்படி? – வெளிவரும் புதிய தகவல்கள் !


[ புதினப்பலகை ]
முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவர் பிறேம்குமார் குணரட்ணம், அந்தக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திமுது ஆட்டிக்கல ஆகியோரை தாம் கைது செய்யவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் தரப்புகள் கைவிரித்துள்ள நிலையில், இவர்கள் கடத்தப்பட்ட சூழல் பற்றிய பின்னணித் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.
ஆயுதம் தாங்கிய நபர்கள் சிலர் நேற்று அதிகாலை குணரட்ணத்தின் வீட்டுக்குச் சென்றதை அயல்வீட்டுக்காரப் பெண் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்த தகவல்களின் தொகுப்பு இது:
நாளை நடைபெறவிருந்த முற்போக்கு சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடு தொடர்பாக, வெள்ளிக்கிழமை மாலை மடிவெலவில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய பின்னரே பிறேம்குமார் குணரட்ணமும், திமுது ஆட்டிக்கலவும் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டம் மாலை 6. 30 மணியளவில் முடிவடைந்தது. அதையடுத்து இருவரும் வீடுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
குணரட்னம் கட்சி செயற்பாட்டாளரான அவரது மெய்க்காவலருடன் தனியாக வாகனம் ஒன்றில் புறப்பட்டுச் சென்றார்.
அவர்கள் கிரிபத்கொடவில் உள்ள வீட்டுக்குச் சென்றனர்.
திமுது ஆட்டிக்கல பேருந்தில் தலவத்துகொடவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார்.
குணரட்ணம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவருடன் பேசியிருந்தார். அதன்பின்னர் அவருடன் தொடர்பு இல்லை.
கிரிபத்கொடவில் இலக்கம் 291/1 கெமுனு மாவத்தையில் உள்ள வீட்டில் குணரட்ணம் தனியாகவே வசித்து வந்தார்.
அவரை அங்கு இறக்கி விட்ட பின்னர், அவரது மெய்க்காவலர் வேறு இடத்துக்குச் சென்றார்.
இரவு 11 மணியளவில் தனது மெய்க்காவலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட குணரட்ணம், தன்னை அதிகாலை 5 மணியளவில் வந்து ஏற்றிச் செல்லுமாறு கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் அதிகாலை அங்கு சென்றார்.
அப்போது வீட்டுக்கு வெளியே நான்கு சக்கர வாகனத்தின், சக்கர அடையாளங்கள் காணப்பட்டன. வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும், அங்கு ஒரு போராட்டம் நடந்ததற்குமான தடயங்கள் தென்படுகின்றன.
அதேவேளை, ஆயுதம் தாங்கிய 4, 5 நபர்கள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் குணரட்ணம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்ததாகவும், தன்னை வீட்டின் விளக்குகளை அணைத்து விட்டு உள்ளே போகுமாறு அவர்கள் கூறியதாகவும், இலங்கை காவல்துறையினரிடம் அயலில் உள்ள பெண் ஒருவர் கூறியுள்ளார்.
அதிகாலை 5.15 மணிக்கு வெளியே பார்த்த போது வழக்கத்துக்கு மாறாக எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்றுக்காலை 8 மணி வரை, குணரட்ணத்தின் +94-71-3519722 என்ற இலக்க கைபேசிக்கு அழைத்த போது, மணி ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆனால் பதில் இல்லை. தற்போது அது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது அல்லது அழைப்பு பெறமுடியாத நிலையில் உள்ளது.
நேற்றுக்காலை வரை அந்த கைபேசி கிரிபத்கொட பகுதியிலேயே இருப்பதை ஜிபிஎஸ் கணிப்புகள் காண்பித்தன. எனினும் மேலதிகமான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.
காணாமற்போயுள்ள திமுது ஆட்டிக்கலவை கடைசியாக பார்த்தவர் கட்சியின் மற்றொரு தலைவரான துமிந்த நாகமுவ.
கொஸ்வத்த பேருந்து நிலையத்தில் அவர் மாலை 6 மணியளவில் திமுது ஆட்டிக்கலவை இறக்கி விட்டார்.
அவர் 32/14/7 ஹைலெவல் வீதி, ஹெனவத்த, மீகொடவில் உள்ள வீட்டுக்கே, திமுது புறப்பட்டுச் சென்றதை நாகமுவ உறுதி செய்துள்ளார்.
ஆனால் மறுநாள் காலையில் அவரது +94-77-0325567 இலக்க கைபேசிக்கு அழைத்தபோது பதிலளிக்கவில்லை.
நேற்றுக்காலை காலை 11 மணி வரை அந்தக் கைபேசி மணி ஒலித்துக் கொண்டிருந்தது.
அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்குத் திரும்பவில்லை என்று உறுதியாகியுள்ளது.
குணரட்னம காணாமற்போனதையடுத்து இலங்கை காவல்துறைமா அதிபர், மற்றும் கிரிபத்கொட, பிலியந்தல காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டது.
“இந்தக் கடத்தல் அரசியல் நோக்கம் கொண்டது. எமது மாநாட்டை நிறுத்துவதற்கான முயற்சியே இது“ என்கிறார் முற்போக்கு சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் சேனாதீர குணதிலக.
முன்னதாக விடுமுறைக்காக இலங்கை வந்த குணரட்ணத்தின் மனைவி அவுஸ்திரேலியா திரும்பும்போது விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
அதேவேளை, காவல்துறையிடம் கடத்தல் பற்றிய எந்த முறைப்பாடும் தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை காவல்துறைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினராலோ அல்லது வேறு எந்தக் காவல்துறைப் பிரிவினராலோ எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றவரான குணரட்ணம் காணாமற் போனது குறித்து கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
குணரட்ணத்தை இலங்கை அரசு கடுமையாக கண்காணித்து வந்ததாக நம்பகமான தவல்களை அவரது கட்சியினர் பெற்றிருந்தனர்.
அவர்கள் குணரட்ணத்தையும், திமுதுவையும் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தி வந்தனர்.
இவர்கள் இருவரையும்  இலங்கைப் படையினரே கடத்தியுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, குறிப்பாக வடக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்ளத் தொடங்கியதன் விளைவாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
http://news.lankasri.com/show-RUmqyETcOUlp1.html

Geen opmerkingen:

Een reactie posten