தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 april 2012

வர்க்க விடுதலைக்காக போராடிய ஐயரை திரிக்கும் பின்னணியில் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 07


வரலாற்று ரீதியான திரிபு எப்போதும் அரசியல் ரீதியானது. இந்த அரசியல் பின்னணியில் வரலாற்றை பொதுமைப்படு;த்துகின்றது. வரலாற்றை திரிக்கின்றது. வரலாற்றை இருட டடிப்பு செய்கின்றது. புரட்சிகரமான வர்க்கக் கூறுகளை அரசியல் நீக்கம் செய்கின்றனர். தேசியத்தை புனிதமான ஒன்றாகவும், வர்க்கமற்ற ஒன்றாகவும், காட்டவும் கட்டமைக்கவும் முனைகின்றனர்.
வலதுசாரிய சுரண்டும் வர்க்கம் முன்வைத்த தேசியம், மக்களுக்கு எதிரான கொள்கைகள் கோட்பாடுகளுடன் தான் செயல்படத் தொடங்கியது. இந்த வர்க்கப் பின்னணியில் மக்களை ஒடுக்கியபோது, அதற்கு எதிரான போராட்டமும் தொடங்கியது. இடதுசாரிய அமைப்புக்களாகவும், வலதுசாரிய அமைப்புக்குள்ளும் போராட்டம் தொடங்கியது. இப்படித்தான் வலதுசாரியத்துக்கும், வலதுசாரிய பாசிசத்துக்கும் எதிராக நடந்த போராட்டத்தின் வரலாறு. மக்களுக்கான இந்தப் போராட்டத்தில் பலர் மரணித்தனர். இந்தப் போராட்டமோ எந்த அரசியல் இடைவெளியும் இன்றி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. இதை அங்கீகரிக்காத, ஏற்றுக் கொள்ளாத வரலாற்றுப் பார்வைக்கு பின்னுள்ள அரசியல் வலதுசாரியம் தான். எந்த வலதுசாரியம் மக்களுக்காக போராடியவர்களை கொன்று குவித்ததோ, அதை மூடிமறைப்பதன் மூலம் அதையே இன்று செய்ய முனைகின்றனர்.
இந்த வரலாற்றை மூடிமறைத்தபடி தான் திடீர் அரசியல் பேசுவோர் மீள வந்தனர். அதே போல் புதுப் பிரமுகர்கள், வரலாற்றை திரிப்பது, பொதுமைப்படுத்துவது, இருட்டடிப்பு செய்வதன் மூலம் தங்களை முன்நிறுத்த முனைகின்றனர்.
இந்த வகையில் சசீவன் "இதில் கணேச ஐயர் உட்கட்சி ஜனநாயகம் - போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது என்ற புள்ளியில் நின்று நீண்ட காலம் இயங்கியவர். நான்கு வெவ்வேறு முக்கியமான இயக்கங்களின் (எல்.டி.டி.ஈ, புளொட், என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி) மத்தியகுழு உறுப்பினராகச் செயற்பட்டவர்..... ஒரு கட்டத்தில் கணேசன் ஐயர் தாம் செல்லும் பாதை தவறென்பதை உணர்ந்து கொள்கின்றார்." என்று வரலாற்றை பொதுமைப்படுத்தியும், திரித்தும், இருட்டப்பும் செய்கின்றார். இதைத்தான் காதரும் செய்கின்றார்.
கணேசஐயர் "எல்.டி.டி.ஈ, புளொட்" சந்தித்த அரசியல் நெருக்கடியும், "என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி" சந்தித்த நெருக்கடியும் வெவ்வேறானவை. இரண்டு அரசியல் போக்கும் ஒன்றுக்கு ஒன்று நேர் எதிரானது.
"எல்.டி.டி.ஈ, புளொட்" சந்தித்தது உட்கட்சி ஜனநாயகம் மட்டுமல்ல, அதன் வலதுசாரிய மக்கள் விரோத அரசியலுக்கு எதிரான போராட்டத்தை அங்கு நடத்த முனைந்தனர். அவர் வலதுசாரிய (புலிப்) "போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது என்ற புள்ளியில் நின்று நீண்டகாலம் இயங்கியவர்" இயங்க முனைந்தவர் என்பது திரிபானது, தவறானது. வலதுசாரியத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர். "போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவ"தை புலிகள் உட்பட அனைவரும் செய்தனர். "போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது" தான் பிரச்சனையா? இல்லை. வலதுசாரிய அரசியல்தான் பிரச்சனை. அந்த அரசியல் மக்கள் விரோதமானது.
மறுதளத்தில் "என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி"யில் உட்கட்சி ஜனநாயகம் ஐயருக்கு இருந்தது. வலதுசாரிய மக்கள்விரோத அரசியலுக்கு எதிரான, மக்கள் அரசியல் அங்கு இருந்தது. இந்த வகையில் அவருக்கு இருந்த நெருக்கடி வெவ்வேறானவை. வலதுசாரிய அரசியலை எதிர்த்து நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறை ரீதியான நெருக்கடிகள், தோல்விகள், இதனால் உருவான உள் முரண்பாடுகள், அதைத் தொடர்ந்து அமைப்பு சிதைவும் தான், ஐயரையும் இவ்வமைப்புக்களில் செயலற்றதாக்கியது. இப்படித்தான் "என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி"யில் இருந்து, ஒன்றன் பின் ஒன்றாக விலகி, ஒதுங்கினார். இங்கு "என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி"யில் இருந்து "தாம் செல்லும் பாதை தவறென்பதை உணர்ந்து கொள்கின்றார்" என்று திரிப்பது அபத்தமானது. அவர் என்றும் சொல்லாத ஒன்றைச் சொல்லி திரிக்கின்ற, திட்டமிட்ட அரசியல் புரட்டைத்தான் இங்கு நாம் காண்கின்றோம்.
ஐயரின் வரலாற்றை தொகுத்து எழுதியவர் தமிழக புலி ஆதரவாளர். புலி பாதுகாக்கும் அரசியல் நோக்குடன் தான் அதை தொகுத்தார். அந்த நோக்கில் இனியொருவின் ஆசிரியராகவும் இருந்த அவரும், புலி மூலம் திடீர் பிரமுகராகும் இனியொருவின் அரசியல் நடைமுறை நோக்கும் ஒன்றிணைந்து, புலிக்கு சார்பாக ஐயரைத் தொகுத்தளித்தனர். இந்த அரசியல் புள்ளியில் அனைத்தையும் பொதுமைப்படுத்தியும், திரித்தும், இருட்டடிப்பையும் இலகுவாக, ஐயர் மூலம் இன்று செய்யமுடிகின்றது.
இந்த அரசியல் பின்புலத்தில் "அவர் வலியுறுத்திய விடயங்களை அவர் ஈடுபட்ட எந்த இயக்கங்களிலும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இங்கே தான் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் - ஒரு சமூகத்தின் வகிபாகம் குறித்தும்" கூறுகின்ற, அரசியல் புரட்டைக் காண்கின்றோம். ஐயர் "என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி"யில் இணைந்து போராடியது, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் வர்க்க விடுதலைக்காகத்தான். "ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில்" இருந்ததல்ல, அவரின் போராட்டம். அவரின் போராட்டம்"ஜனநாயகத்தை நிலைநிறுத்துவத"ல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் வர்க்க விடுதலைக்காக போராடுவதுதான். உங்கள் நோக்கம் அதுவல்ல என்பதால் தான், ஐயரையே புரட்டிப் போட்டுக் காட்ட முனைகின்றீர்கள். வரலாற்றை இருட்டடிப்பு செய்ய முனைகின்றீர்கள்.
தொடரும்
பி.இரயாகரன்
02.04.2012

Geen opmerkingen:

Een reactie posten