'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்’ என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது.
'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
''ஆற்ற முடியாத காயங்களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவருடைய திடீர் 'தமிழீழ’ ஆர்வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?
இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்தபோது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை’ என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு’ என்றீர்கள்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை.
இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பௌத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பௌத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது.
அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்’ என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்’ என்றுதான் சொல்லி இருக்க வேண்டும்!
அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழ ஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்’ என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்பதற்காக, இலங்கைத் தமிழர்... இலங்கைத் தமிழர் என்று பேசிவந்தவர். தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?
இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை’ என்கிறீர்கள். இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்தபோது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்பிடித்தீர்களே ஏன்?
நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்?
பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடினார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள்?
'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்’ என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்று அப்போது சொன்னது ஏன்?
'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்’ என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம் வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?
'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது’ என்று அப்போது சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபாய ராஜபக்ச கோபப்படுகிறாரே?
ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்?
இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?
ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.
இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?
ஜூனியர் விகடன்
Geen opmerkingen:
Een reactie posten