தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 april 2012

உடைக்கப்பட்ட காந்தி சிலையைப் பார்த்தார்களா? இந்திய எம்.பி.க்களைக் கேட்கும் இலங்கை தமிழ் எம்.பிக்கள் !


இலங்கைக்குப் போய்விட்டு வந்த இந்திய எம்.பி-க்கள் ஆளுக்கு ஒரு தகவலை சொல்லிக்​கொண்டு இருக்க, அந்தப் பக்கம் இருந்தும் அதிருப்திக் குரல்கள் கேட்கின்றன.
ஆறு நாட்கள் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசினார்​கள் இலங்கை ஜனநாயகத்துக்கான தமிழ் - சிங்களப் பத்திரிகையாளர்கள்.
'கொழும்பு போய் இறங்கிய இந்தியக் குழுவினர் முதலில் சந்தித்தது, மகிந்த ராஜபக்ஷேவின் தம்பி பசில் ராஜபக்ஷேவைத்தான். பிறகு, நீர்ப்பாசனத் துறை அமைச்சரான நிமல் ஸ்ரீபால டி சில்வாவைச் சந்தித்தார்கள்.
அடுத்த நாள் மாலை, யாழ்ப்பாணம் சென்ற தூதுக் குழுவினரை, டக்ளஸ் தேவானந்தா வரவேற்று இருக்கிறார்.
அன்று இரவு, யாழ்ப்பாணம் டில்கோ ஓட்டலில் டக்ளஸ், சிங்கள இராணுவ முன்னாள் தளபதியும் வடக்கு மாகாண கவர்னருமான சந்திரசிறீ ஆகியோருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டனர்.
இதே டக்ளஸ்தான் ஒரு குறுக்கு வேலையையும் செய்தார். அதாவது, மறுநாள் காலை நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு இந்திய எம்.பி-க்கள் போகும்போது, பெருமளவு மீனவர்களைத் திரட்டி, இந்திய மீனவர்களுக்கு எதிராக மனு கொடுக்க டக்ளஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
இதை இந்தியத் தூதரகம் மூலம் அறிந்த இந்தியத் தூதுக் குழு, கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாஞ்சோலை மருத்துவமனையும், முள்ளியவளையில் ஒரு பள்ளிக் கட்டடமும் புதுப்பித்துத் திறக்கப்பட்டது.
இதற்காக முந்தைய நாள் மாலையில்தான், இராணுவத்தினர் அவசர அவசரமாக கட்டடத்துக்கு வண்ணம் தீட்டினார்கள். '
முள்வேலி முகாம்களில் 6,000 பேர்தான் இருக்கிறார்கள். அவர்களும் வரும் ஜூன் மாதத்துக்குள் மீள்குடியேற்றம் செய்யப்​பட்டு விடுவார்கள்’ என்று, இலங்கை அரசு சொன்னதை, இந்தியக் குழுவினர் கொழும்புப் பேட்டியில் சொன்னார்கள்.
ஆனால், இன்னமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.
முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, புதுமாத்தளன், பழையமாத்தளன், வலைஞர்மடம், புதுக்குடியிருப்பு கிழக்கு, மேற்கு ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்களை, புதுக்குடியிருப்பு தெற்கில், திம்பிலி எனும் காட்டுப் பகுதியில் தங்க வைத்துள்ளது அரசாங்கம்.
இதே போன்று முல்லைத்தீவில் 9,000 தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.
ஆனால், கொக்கிளாய் எனும் தமிழர் பிரதேசத்தில், சிங்களக் குடியேற்றம் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் பலாலி - வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு வளையம் என அந்த மண்ணின் மக்கள் 25 ஆயிரம் பேரை வெளியேற்றி, திறந்த வெளியில் அலைய விட்டுள்ளனர்.
இதுபோன்ற தகவல்களை இந்தியக் குழுவுக்குத் தெரியாமல் இலங்கை அரசு மறைத்து​விட்டது.
இந்தியக் குழுவினர் சென்ற எல்லா இடங்களுக்கும் இராணுவத்தினரோ அல்லது இராணுவப் புலனாய்வாளர்களோ கூடவே வந்துகொண்டு இருந்தனர்'' என்கிறார்கள், புலம்பெயர் இலங்கை பத்திரிகையாளர்கள்.
இதே கருத்தை எதிரொலிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. அரிய​நேத்திரன், ''பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சுயமாகப் பார்த்துப் பேச இந்தியக் குழுவுக்கு வாய்ப்பே இல்லை.
குளுகுளு அறைகளில் உட்கார வைத்து, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள் என்று இந்தியக் குழுவினர் சொல்வதை, நாங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.
திருகோணமலை மாவட்டம் சம்பூரில், இந்திய அரசு அனல்மின் நிலையம் அமைப்பதால், அங்கு வசித்த 11,500 பேர் அகதிகளாக ஆக்கப்​பட்டுள்ளனர். அவர்களை இந்தக் குழுவினர் பார்க்கவில்லை. அது ஏன்?
மட்டக்களப்பில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்​பட்டது. அந்த இடத்தைக்கூட இந்தியக் குழுவினர் பார்க்கவில்லை.
பட்டிப்பளை கெவிளியாமடுவில் வலுக்​கட்டா​யமாக சிங்களர்களை அதிக அளவில் குடியேற்றம் செய்துவருகிறார்கள். இங்கிருந்தவர்கள் எல்லாம், இந்தியக் குழுவினர் தங்களை வந்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை'' என்கிறார்.
மன்னார் மாவட்ட கூட்டமைப்பு எம்.பி-யான செல்வம் அடைக்கலநாதனோ, ''இந்திய எம்பிகளின் பயணம், எமது மக்களின் பிரச்னைகளின்பால் சிறிதள​வாவது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
செட்டிக்குளம் முகாமில் உள்ள சிலர் தங்கள் பிரச்சினைகளைச் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இப்படியான வாய்ப்பு மக்களுக்கு இருக்கவில்லை'' என்று சூசகமாகவே, கருத்துக் கூறினார்.
ஏதோ ஒரு கண்துடைப்பு நாடகம் என்றே இதனைச் சொல்கிறார்கள் அங்குள்ள தமிழ் எம்.பி.க்கள்!
ஜூனியர் விகடன்

Geen opmerkingen:

Een reactie posten