யாழ்.திருவடி நிலைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பாரியளவு கடற்படை முகாமினால் எதிர்வரும் காலத்தில் அப்பகுதி சிங்கள மயப்படும் அபயமிருப்பதாகவும், எக்காலத்திலும் தமிழர்கள் அந்த பிரதேசங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் வடக்கு உட்பட யாழ்ப்பாணத்தின் பெருங்கடல் கரையோரங்கள் முழுவதும் கடந்த 21 வருடங்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது.
எனினும் அவற்றில் ஒரு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் ஏனைய பகுதிகள் இன்னமும் விடுகிக்கப்படவில்லை. இதன் ஒருபகுதியாக மாதகல் பகுதியிலுள்ள திருவடிநிலைப் பகுதியும் இருந்து வருகின்றது.
குறித்த பகுதியில் தற்போது பிரமாண்டமான அளவில் கடற்படை முகாமும், விகாரைகள், சங்கமித்தை வந்திறங்கியதற்கான கப்பல்கள், புத்தர் சிலைகள் போன்றனவும் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதனால் இந்தப் பகுதிக்குத் தமிழர்கள் செல்லமுடியாது என்பதுடன், விகாரைக்குச் செல்ல விரும்பினால் கூட அந்தப் பகுதிக்குள் பாதணிகளை கழற்றிவிட்டே செல்லவேண்டும் என பணித்துள்ள கடற்படையினர், அந்தப்பகுதி பௌத்த புனிதப்பிரதேசம் எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இதேபோன்று பொன்னாலை கடற்படை முகாமுடன் இந்தப்பகுதியும் இணைக்கப்பட்டு புதிய கடற்படை முகாம்களும், பெருமளவு விடுதிகளும் இப்பிரதேசங்களில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை, இந்தப் பகுதியை தமக்கு உரிமையாகத் தருமாறு கடற்படையினர் தொடர்ந்தும் வற்புறுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten