இலங்கையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக, தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் அமைப்பான, “மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்துக்கான மக்கள் அமைப்பு” ஒழுங்கு செய்த கருத்தரங்கு அண்மையில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குனரான பசில் பெர்னாண்டோ மற்றும் சுதந்திரமான செயற்பாடுகள் மற்றும் வாழ்வதற்கான உரிமை தொடர்பாக பரப்புரைகள் மேற்கொண்டு வரும் Platform For Freedom என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரிற்றோ பெர்னாண்டோ ஆகியோர் உரையாற்றினர்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட முறைமையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக பசில் பெர்னாண்டோ உரையாற்றினார்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு இலங்கை ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவதாகவும், நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளை இலங்கை நீதிமன்றங்களால் மாற்றமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, இலங்கை இராணுவமும் காவற்துறையும் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவதுடன் அவற்றுக்கான தண்டனைகளிலிருந்தும் விடுபடுகின்றனர் எனவும் பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றஞ்சாட்டப்படும் சந்தேகநபர்கள் எந்தவொரு சட்ட ரதியான நடவடிக்கைகளும் இன்றி தண்டிக்கப்படுகின்றனர். இவ்வாறு குற்றங்கள் எதுவும் செய்யாது காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்படும் சிலர் 'தப்பிச் செல்ல முற்படும் போது சுடப்படுகின்றனர்'.
இவ்வாறு கைதுசெய்யப்படும் குறிப்பிட்ட சில எண்ணிக்கையானவர்கள் காவற்துறையின் தடுப்பிலிருக்கும் போதே காணாமற்போகின்றனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் எந்தவொரு விசாரணைகளுமின்றி அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
1971 இல் ஜேவிபி யால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சி தொடர்பாக பீதியடைந்த இலங்கை அரசாங்கம், அதன் பின்னரே இவ்வாறான சட்ட மாற்றங்களை மேற்கொண்டதாக பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜேவிபியானது இலங்கையின் தென்பகுதிக் கிராமங்களைச் சேர்ந்த சிங்கள இளையோர்கள் மத்தியில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு அமைப்பாக உள்ளது. எவ்வாறிருப்பினும், இவ்வாறான சட்ட ரீதியான பிரச்சினைகள் ஜே.வி.பி கிளர்ச்சிக்கு முன்னரே ஆரம்பமாகின.
1971 இற்கு முன்னர் இலங்கை அரசின் அடக்குமுறை பெரிதளவில் தமிழ் சிறுபான்மை மக்களையே பாதித்தது. இதன் பாதிப்பை சிங்கள பெரும்பான்மை மக்கள் சந்திக்கவில்லை.
1948 இல் உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பானது 'ஜனநாயகக்' கோட்பாடுகளைக் கொண்டது என பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அரசியலமைப்பின் கீழ் மலையகத் தமிழர்கள் தமக்கான குடியுரிமையை இழந்ததுடன், தமிழ்மொழி பேசும் மக்களுக்கான சமஉரிமைகள் மறுக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் பசில் பெர்னாண்டோ தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இலங்கையைத் தற்போது ஆட்சி செய்து வரும் மகிந்த ராஜபக்சவின் கபட நாடகம் தொடர்பாக பிரிற்றோ பெர்னாண்டோ தனது உரையில் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஜேவிபி யினரால் 1987-89 காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக கிளர்ச்சி மேற்கொள்ளப்பட்ட போது, சட்டவாளராக இருந்த ராஜபக்ச குற்றம் சாட்டப்பட்ட ஜே.வி.பி ஆதரவாளர்களுக்கு சார்பாக வாதாடியதுடன், இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று ராஜபக்சவின் அரசாங்கம், சட்டவாளராக ராஜபக்ச செயற்பட்ட போது அவரால் கண்டனம் செய்யப்பட்ட அதே மீறல்கள் இடம்பெறுவதற்கு பொறுப்பாளியாக உள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஜே.வி.பி ஆதரவாளர்கள் பரவலாக காணாமற்போனதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாறு கோரி 1989 இல் ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபை சென்றிருந்தார்.
இன்று, அவரது அரசாங்கம் அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குபற்றவதற்காக ஜெனீவா சென்ற மனிதஉரிமை செயற்பாட்டாளர்களை 'தேசத்துரோகிகள்' என பழிசுமத்தியுள்ளது எனவும் பிரிற்றோ பெர்னாண்டோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten