[ புதினப்பலகை ]
இலங்கையில் போருக்குப் பிந்திய சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப இந்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது.
இதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வரும் 16ம் நாள் இலங்கை செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த குழு அமைக்கப்பட்டதிலேயே பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குழுவில் யார், யார் இடம்பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதிகாரபூர்வமாக பெயர்கள் வெளியிடப்படா விட்டாலும், கடந்தவாரமே சில பெயர்கள் கசிந்தன.
பொதுவாக இலங்கை குறித்த பிரச்சினைகளை, தீவிரமாக கையிலெடுத்து, ஆணித்தரமாக குரல் எழுப்பும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் நாடாளுமன்ற கீழவையில் கணேசமூர்த்தி மற்றும் மேலவையில் டி. ராஜா போன்றவர்கள் தான். ஆனால், இவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை.
நாடாளுமன்ற அமைச்சகத்தில், இதுபற்றி அவர்கள் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதாக பதில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பார்த்தால், கடந்தமுறை இலங்கை சென்ற குழுவில் திருமாவளவனுக்கு, எந்த அடிப்படையில் இடம் கிடைத்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில் நான்கு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள்.
பா.ஜ.க சார்பில் இலங்கை விவகாரங்கள் குறித்து ஓரளவு தெளிவாக புரிந்து வைத்திருப்பவரும், இந்த விடயத்தை அந்தக் கட்சி சார்பில் கையாண்டு வருபவரும் வெங்கையா நாயுடு தான்.
இலங்கை விவகாரங்களுக்கு பா.ஜ.கவில் பொறுப்பு வகிப்பவர் யஸ்வந்த் சின்கா. இவர்களுக்கு இடம் அளிக்காமல் பல்பீர்புஞ்ச் என்பவர் செல்லவுள்ளார்.
இலங்கை பிரச்சினையில் வடமாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ அதிகளவில் ஆர்வம் காட்டியதில்லை.
ஆனால், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரல்களும் கூட, இலங்கை அரசாங்கத்தின் விருப்பதிற்கு ஏற்ற வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
மீள் குடியேற்றத்திற்காக, இந்தியா வழங்கிய, 500 கோடி ரூபா பற்றியும், அதன் செலவு குறித்தும் ஆராய்வதே, இந்தக் குழுவின் மையமாக வைக்கப்பட்டுள்ளது.
முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திப்பதோ, சிங்கள குடியேற்றங்கள் பற்றியோ, தமிழர்கள் பகுதிகளில் நடக்கும் திடீர் தாக்குதல்கள் பற்றியோ, அரசியல் தீர்வு பற்றியோ, அங்குள்ள தமிழ்க்கட்சிகளை சந்தித்து ஆலோசிப்பதோ பற்றியெல்லாம் இந்த குழுவின் பயணத் திட்டத்தில் எதுவும் இல்லை.
இலங்கை அரசாங்கத்திற்கு சங்கடம் அளிக்கும், எந்த விடயத்தையும் உள்ளடக்காத வகையிலேயே இந்தப் பயணத் திட்டம் தயாராகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தான், தனது கட்சி இந்தக் குழுவில் இடம்பெற நாடாளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னார்ட் பெயரை அளித்திருந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, திடீரென விலக்கிக் கொண்டு விட்டார்.
இது இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, நேற்று புதுடெல்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறும்போது, "இலங்கைக்கு குழு செல்லும் விடயத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன.
எனவே, கடைசி நேரத்தில் குழு பயணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை” என்றன.
Geen opmerkingen:
Een reactie posten