தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 april 2012

நியாயமான பொறிமுறை மூலம் பொறுப்புக் கூறுமா இலங்கை அரசாங்கம்?


 [ வீரகேசரி ]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது, சனல்4  தொலைக்காட்சி புதிய வீடியோவை வெளியிடப் போகிறது என்று அறிந்ததும் வெளியக அழுத்தங்கள் குறித்து மட்டும் அரசாங்கம் கவலைப்படவில்லை.
உள்ளக ரீதியாக, குறிப்பாக படையினர் மத்தியில் குழப்பங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கவலையே அரசுக்கு அதிகமாக இருந்தது.
இலங்கை இராணுவத்தின் பெரும்பகுதி களமிறக்கி விடப்பட்ட இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் மிகத் தராளமாகவே இடம்பெற்றதாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டியது.
அதுபோலவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்த நிலையில், ஜெனீவாவில் தீர்மானம் வரப்போகிறது என்று தெரிந்ததும், கிளிநொச்சிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் ஐந்து பேர் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
இந்த இராணுவ நீதிமன்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
இதன் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக இராணுவத்தரப்பு கூறுகின்ற போதும், இது எப்போது முடிவடையும் என்று தெரியாது என்கிறது.
விசாரணைகளை முடிப்பதற்கு காலக்கெடு ஏதும் விதிக்கப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதுமட்டுமன்றி ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கநாளில் இலங்கையின் சார்பில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, கடற்படை பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனியான நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்த உறுதிமொழி கொடுக்கப்பட்டு ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனால், கடற்படை விசாரணைக் குழுவை நியமிக்கும் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் இல்லை.
இதுபற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்ட கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, கடற்படையின் சார்பில் தனியான நீதிமன்றம் அமைக்கப்படாது என்றும் இராணுவ நீதிமன்ற விசாரணையின் போதே கடற்படை பற்றியும் விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆக, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வருவதைத் தவிர்க்கவே, கடற்படை விசாரணை நீதிமன்றம் அமைக்கப் போவதாக அரசாங்கம் கூறியது என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், தீர்மானத்தை தடுக்க முடியவில்லை என்றதும், அந்த வாக்குறுதி அரசுக்கு மறந்து போய் விட்டது.
இதற்கிடையே, அண்மையில் முல்லைத்தீவில் படையினர் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவம் அமைத்த விசாரணைக் குழு முன்பாக பொதுமக்கள் எவரும் முறைப்பாடு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
இதுதான் சர்வதேச சமூகம், நம்பகமான நடுநிலையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதற்கான காரணம்.
இராணுவம் மீதான குற்றச்சாட்டுகளை இராணுவ அதிகாரிகளே விசாரிக்கும் போது பாதிக்கப்பட்ட எவரும் சாட்சியமளிக்கச் செல்லமாட்டார்கள்.
இலங்கையில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் இது பிரச்சினைக்குரிய விடயம் தான்.
பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பில் இருந்து விடுபடாத நிலையில், பழிவாங்கலுக்கு உட்பட்டு விடலாம் என்ற அச்சம் இருப்பது உறுதி.
இப்படியான சூழலில் இராணுவ நீதிமன்ற விசாரணையின் மூலம் போரின்போது இடம்பெற்ற மீறல்களைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது எந்தவகையிலும் பயனைத் தராது.
இதனை அரசாங்கத்தினால் உணராமல் இருக்கமுடியாது.
ஆனாலும், இராணுவத்தரப்பு வெளியக விசாரணைகள் பற்றி அச்சம் கொண்டு விடாமல் இருப்பதற்கும், படையினரைக் காப்பாற்றுவதற்கும் இதுவே அரசுக்கு உள்ள ஒரேவழியாகும்.
போரில் வெற்றி பெற்ற பின்னர், நடத்தப்பட்ட வெற்றிவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எந்தவொரு படையினரையும் போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த இடமளிக்கமாட்டேன் என்றும், போருக்குத் தலைமை தாங்கிய தானே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்றும் கூறியிருந்தார்.
இதே கருத்தை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் கூட முன்னர் வெளியிட்டிருந்தனர்.
போரின் போது எந்தவொரு மீறலும் இடம் பெறவில்லை என்று அரசாங்கம் அப்போது கூறி வந்தது. ஆனால் இப்போது அப்படி யாரும் கூறுவதில்லை.
போருக்குத் தலைமை தாங்கியதால் எல்லாவற்றுக்கும் தாமே பொறுப்பு என்று அவர்களால் கூறமுடியாது.
ஏனென்றால் போரின் போது மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டிய நிலை அரசுக்கு உருவாகியுள்ளது.
சரியோ, தவறோ போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிய ஒரு புள்ளிவிபரத்தையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
போரின்போது பொதுமக்கள் ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை என்ற அரசின் முன்னைய வாதம் வலுவிழந்து போய்விட்டது.
பொதுமக்கள் கொல்லப்பட்டது எத்தகைய சூழலாக இருந்தாலும் அது மீறல் தான், அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்றன சர்வதேச சட்டங்கள்.
இந்தநிலையில் ஜனாதிபதியோ, பாதுகாப்புச் செயலரோ அல்லது சரத் பொன்சேகாவோ துணிந்து தாமே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று கூற முன்வரப் போவதில்லை.
இத்தகைய கட்டத்தில் ஜெனீவாவில் தீர்மானம் வருகிறது என்றவுடன், படையினரைக் காட்டிக் கொடுக்கப் போவதாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்லப் போவதாகவும், பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
ஒரு வகையில் இத்தகைய பிரசாரங்களை அரசாங்கமே ஊக்குவித்தது.
அதுவே ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம் என்று உணர்ந்து கொண்டதும் படையினரைச் சமாதானப்படுத்த இராணுவத் தளபதியை அனுப்பியது.
சனல் 4 தொலைக்காட்சி புதிய ஆவணப்படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய உண்மைகளை வெளியிடப் போவதாக தகவல் வெளியானதும் இராணுவத் தளபதி முல்லைத்தீவுக்கு விரைந்தார்.
அங்கு மட்டுமன்றி வடக்கு, கிழக்கிலுள்ள எல்லா படைத் தலைமையகங்கள் மற்றும் டிவிஷன் தலைமையகங்களிலும் படையினரைச் சந்தித்துப் பேசினார்.
படையினரை ஒருபோதும் அரசாங்கம் கைவிட்டு விடாது, காட்டிக் கொடுக்காது என்று அவர் உறுதி வழங்கினார்.
இதன் மூலம் படையினர் மத்தியில் ஜெனீவா தீர்மானம் தோற்றுவித்த அச்சநிலையை அரசாங்கம் குறைத்து விட்டது என்றே கருதலாம். ஆனால் இது நிரந்தரமானதாகத் தோன்றவில்லை.
ஏனென்றால், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரம், தட்டிக் கழிக்கப்பட முடியாத ஒன்று.
சர்வதேச சமூகம், குறிப்பாக மேற்குலகம் இதில் விடாப்பிடியாக உள்ளது.
வரும் மே மாத நடுப்பகுதியில் அமெரிக்கா செல்லும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திக்கப் போகிறார்.
இந்தச் சந்திப்பு நடக்கப் போவது, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் தான் அதாவது மே 18ஆம் திகதி.
இந்த நாளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வேண்டுமென்றே தெரிவு செய்ததா? அல்லது தற்செயலாகத் தெரிவு செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கடைசி நாளான போரின் இறுதி நாளான மே 18 ஆம் திகதியை நினைவூட்டுவதற்காகக் கூட அமெரிக்கா இந்தத் திகதியைத் தெரிவு செய்திருக்கலாம்.
ஹிலாரி கிளின்ரனை இந்த (ஏப்ரல்) மாதத்தில் சந்திப்பதற்கே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விரும்பினார்.
ஆனால் மே 18ஆம் திகதியையே அமெரிக்கா கொடுத்துள்ளது.
இது பீரிஸுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனென்றால் போர் முடிவுக்கு வந்த 3 ஆண்டுகள் நிறைவடையும் நாளில், அடுத்து அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று அமெரிக்காவுக்கு விளக்கமளிக்க வேண்டிய சிக்கலான பெரும் பொறுப்பு அவருக்கு உள்ளது.
அதில் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதும் ஒன்று.
மீறல்களில் தொடர்புடைய படையினரை நீதியின் முன் நிறுத்துவதற்கான நியாயமான வழிமுறைகளை அவர் முன்வைக்காது போனால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்த முடியாது..
அதேவேளை அத்தகைய நியாயமான வழிமுறை ஒன்றை முன்வைத்தால், படையினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
இதனால் அவர் இப்போது “இருதலைக் கொள்ளி எறும்பின்'' நிலையில் உள்ளார்.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten