தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 april 2012

இந்திய அதிகாரியின் கருணையில் தங்கியிருந்த தமிழ் உயிர்கள் - (அவலங்களின் அத்தியாயங்கள்- 17) –நிராஜ் டேவிட்


இந்தியப் படையினர் ஈழமண்ணில் மேற்கொண்ட படுகொலைகளுள், உலகத்தின் பார்வையில் இருந்து கனிசமான அளவிற்கு மறைக்கப்பட்டதும், அதேவேளை ஈழத்தமிழர் நெஞ்சங்களில் இருந்து என்றைக்குமே மறக்க முடியாததுமான ஒரு சம்பவம் உள்ளது.
யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள், இலங்கை வந்திருந்த இந்தியப் படையினரின் ஒட்டுமொத்த நோக்கத்தையும், அவர்களது நடவடிக்கைகளையும் சந்தேகத்துக்குள்ளாக்கியிருந்தது.
ஒரு யுத்தகாலத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட நடுநிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படவேண்டும் என்ற சர்வதேச சட்டங்களையும்,, தர்மங்களையும், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று தம்மைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் அப்பட்டமாக மீறிய ஒரு சம்பவமாக யாழ் வைத்தியசாலைச் சம்பவம் அமைந்திருந்தது.
1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோரதாண்டவத்தில், வைத்தியர்கள், தாதிகள், வைத்தியமனைப் பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் என்று நூற்றிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
யாழ் வைத்தியசாலையின் வரலாற்றிலும், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றிலும் இலகுவில் மறக்கப்பட முடியாத இந்த நிகழ்வு பற்றிப் பல ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், முறிந்தபனை, அக்கினிக் கரங்கள் என்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்புக்கள், யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களின் பரிமானத்தை வெகு அழகாக எடுத்துரைக்கின்றன.
குறிப்பாக நாவண்ணன் எழுதிய அக்கினிக் கரங்கள் என்ற ஆவணத்தொகுப்பு, யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களை மிகவும் உணர்ச்சியுடன் வெளிப்படுத்தி நிற்கின்றது.
 
வைத்தியசாவையில் நடந்த கோரம்யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றிவிடும் என்பது சில நாட்களாகவே மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்திருந்தது. ஷெல் தாக்குதல்களால் காயங்களுக்கு உள்ளானவர்கள் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருந்தார்கள். மருந்துகளுக்கு அங்கு மிகுந்த பற்றாக்குறை நிலவியதால், அறுவை சிகிச்சைகள் கூடுமானவரை தவிர்க்கப்பட்டே வந்தன. மருத்துவமனை சவக்கிடங்களில் 70 சடலங்கள் குவிந்து கிடந்தன.
அக்டோபர் 21ம் திகதி- தீபாவளி தினம்.
யாழ் கோட்டையில் இருந்து சகட்டுமேனிக்கு ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. வைத்தியசாலைச் சுற்றுவட்டாரத்தினுள்ளும் ஷெல்கள் விழ ஆரம்பித்திருந்தன
காலை 11.30 மணியளவில் யாழ் மருத்துவமனையின் வெளி நோயாளர் சிகிட்சைப் பிரிவுக் கட்டிடத்தின் மீது ஒரு ஷெல் விழுந்து வெடித்தது.
நண்பகல் 1.30 மணியளவில் மற்றொரு ஷெல் யாழ் வைத்தியசாலையில் 8ம் நம்பர் வார்டில் விழுந்து வெடித்தது. அதில் அங்கு தங்கியிருந்து சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த 7 நோயாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
மாலை நான்கு மணியளவில் இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனைக்குள் நுழைந்தது. இந்திய இராணுவ வீரர்களின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.
ஒரு வைத்தியர் கூறுகின்றார்: அன்று யாழ் மருத்துவமனையினுள் நடைபெற்ற சம்பவம் பற்றி அப்பொழுது அங்கு கடமையாற்றிக்கொண்டிருந்த வைத்தியரொருவர் இவ்வாறு கூறுகின்றார்:
நாங்கள் அப்பொழுது வைத்தியசாலையின் கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றார்கள். 7ம் நம்பர் வார்ட்டை காலி செய்துவிட்டு வந்த நோயாளர்களும் அங்கு இருந்தர்கள்.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் படிப்படியாக எங்களுக்கு அருகில் வந்துகொண்டிருப்பதை எங்களால் கேட்க முடிந்தது. இந்திய இராணுவம் உள்ளே நுழைந்தாலும், அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விசயங்களை விளங்கப்படுத்தலாம் என்று நம்பிக்கொண்டிருந்தோம். எங்களுடன் இருந்த டாக்டர் கணேசரெத்தினம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சக ஊழியர்கள் சிலர் இன்னமும் வார்டுகளில்தான் தங்கி இருந்தார்கள்.
சூட்டுச் சத்தம் இப்பொழுது மிகவும் அருகில் வந்துவிட்டிருந்தது. எங்களைச் சுற்றியிருந்த அபாயத்தை உணர்ந்து எல்லோரும் அப்படியே தரையில் விழுந்து படுத்துவிட்டோம்.
சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்தது இந்திய இராணுவம். அங்கு நெருக்கியடித்துக்கொண்டிருந்த மக்கள்தான் அவர்கள் கண்களில் முதலில் பட்டார்கள். மக்களைக் கண்டதும் உடனடியாக அவர்கள் மீது சரமாரியாகச் சுட்டுத்தள்ளத் தொடங்கினார்கள்.
நோயாளிகள் சூடுபட்டு செத்து விழுவதை கண்களால் கண்டோம்.
விரலைக் கூட அசைக்காமல் இறந்துபோனவர்களைப் போல தரையில் விழுந்து கிடந்தோம். இறந்து போனவர்களின் சடலங்களை அகற்ற வரும்போது, எங்களையும் அவற்றோடு போட்டு எரித்துவிடுவார்களோ, சுட்டுவிடுவார்களோ என்று முழு நேரமும் நடுங்கிக்கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்கள் கேட்டன.
எங்களது தங்குமிடம் அமைந்திருக்கும் மேல்மாடியில் இந்தியப் படையினர் நடமாடும் சத்தம் கேட்டது. மறுநாட் காலை 11 மணிவரை கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் நாங்கள் அப்படியே கிடந்தோம்.
சடலங்களின் நடுவில்:அன்றைய தினத்தில் யாழ் மருத்துவமனையில் இருந்த மற்றொருவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்:
இந்திய இராணுவம் வெளி கேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளர் அலுவலகத்திற்குள்ளும், வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் கண்டபடி சுட ஆரம்பித்தார்கள்.
என்னோடு பணிபுரிந்த பல ஊழியர்கள் இந்தியப் படையினரின் கண்மூடித்தனமாக தாக்குதல்களில் அகப்பட்டு இறப்பதைக் கண்டேன். எனது சக ஊழியர் ஒருவர் என்னிடம் இரகசியமா கூறினார்:
அப்படியே அசையாமல் படுத்துக் கிடவுங்கள்.
அன்று இரவு முழுவதும் இம்மி கூட அசையாமல் அங்கு கிடந்த சடலங்களின் அடியில் படுத்துக் கிடந்தோம்.
ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்த ஒருவருக்கு இருமல் இருந்தது. உரத்து இருமினால் இந்தியப் படையினரின் காதுகளில் விழுந்தவிடும். அதனால் இரவு முழுவதும் முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார். அவரது மெல்லிய முனகல்கூட ஒரு இந்தியப்படையினனது காதில் விழுந்துவிட்டது. ஒரு கைக்குண்டை அவர் மீது வீசி எறிந்தான்.
அந்த மேற்பார்வையாளரும், அவரது அருகில் கிடந்தவர்களும் பலியானார்கள். அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் தெரியும்.
இன்னொரு இடத்தில் கைகளை உயர்த்தியபடி ஒருவர் எழுந்து உரக்கக் கத்தினார்: நாங்கள் அப்பாவிகள், இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு... அவர் உரத்துச் செல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் மீது ஒரு கைக்குண்டை எறிந்தார்கள். அவரும் அவருக்கு அருகில் கிடந்த சகோதரரும் உடல் சிதறிப் பலியானார்கள்.
நாங்கள் சரணடைகிறோம்..இரவு கடந்து போய் காலையாகிவிட்டது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் சிவபாதசுந்தரம் மூன்று தாதிமாருடன் தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார்.
தாங்கள் யார் என்று அடையாளம் காண்பித்துக் கொண்டு இந்திய இராணுவத்தினரிடம் சரணடைந்துவிடுவது உசிதமானது|| என்று கூடவந்த தாதிமாரிடம் அவர் எடுத்துக் கூறியிருந்தார்.
கைகளை மேலே தூக்கிக்கொண்டு ``நாங்கள் சரணடைகின்றோம்.... நாங்கள் ஒன்றுமே அறியாத டாக்டர்களும், நார்சுகளும்தான்.. என்று உரத்துக்கூறிபடி அவர்கள் நடந்து வந்தார்கள்.
டாக்டர் சிவபாதசுந்தரம் தமக்கு அருகில் வரும் வரை இந்தியப் படையினர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கைகளை உயர்த்திக்கொண்டு இந்தியப் படையினரை நோக்கி நம்பிக்கையோடு சென்றார்.
இந்தியப் படையினரை டாக்டர் நெருங்கியதும், அவர் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே டாக்டர் சிவபாதசுந்தரம் துடிதுடித்து இறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த நார்சுகள் படுகாயமடைந்தார்கள்.
மருத்துவமனையில் சிக்கிவிட்ட குழந்தைகளையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த உன்னதரான மனிதர் டாக்டர் சிவபாதசுந்தரம் இரத்தத்தில் மிதந்தார்.
உயிர் பிழைத்தவர்கள் பிணங்களைப் போன்று நடித்து மறுநாள் 11மணிவரை பிணங்களின் நடுவில் கிடந்தார்கள்.
இதேபோன்று மற்றொரு மருத்தவரான டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு புறம் பிணமாகக் கிடந்தார். இவ்வாறு அந்த வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தர்.
இந்திய அதிகாரியின் வருகை:அங்கிருந்த வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்திய படையினருக்கு யார்-எவர் என்ற அக்கறை இல்லை. கண்களில் பட்டவர்களெல்லாம் எதிரிகளாகவே தெரிந்தார்கள். சுட்டுத் தள்ளத் தயாராக இருந்தார்கள். இந்த நிலையில் என்ன செய்வது என்று எவருக்குமே புரியவில்லை.
அந்தச் சந்தர்ப்பத்தில் மறுநாள் காலை, அதாவது 22ம் திகதி நன்பகலளவில் ஒரு இந்திய உயரதிகாரி யாழ் வைத்தியசாலையினுள் விஜயத்தை மேற்கொண்டார்.
அவர் வந்த தோரணை, மற்றய சிப்பாய்கள் அந்த அதிகாரிக்கு வழங்கிய மரியாதை, ஹிந்தி மொழியில் அவர் மேற்கொண்ட மிரட்டல்கள், இவை அனைத்தையுமே பிணங்கள் போன்று தரையில் கிடந்த வைத்தியர் ஒருவர் அவதாணித்தார்.
நடைபெற்ற சம்பங்கள் பற்றி அங்கு நின்ற சிப்பாய்களிடம் அந்த அதிகாரி கேள்வி கேட்பது புரிந்தது. நடைபெற்ற சம்பவங்களில் அந்த அதிகாரி திருப்தி அடையவில்லை என்பதும் அந்த அதிகாரியின் பேச்சு தொணியில் இருந்து புரிந்தது. அந்த அதிகாரி விரைவில் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுவார் போன்றே நிலமை காணப்பட்டது.
அந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பாத ஒரு வைத்திய அதிகாரி திடீரென்று எழுந்து அந்த இராணுவ அதிகாரியிடம் தங்களின் நிலை பற்றி அழுதபடி தெரிவித்தார்.  என்ன நினைத்தாரோ அந்த அதிகாரி, அந்த வைத்தியரின் பேச்சை நிதானத்துடன் செவிமடுத்தார்.
எதற்கும் பயப்படவேண்டாம் என்று வைத்தியரை அசுவாசப்படுத்திய அந்த இராணுவ அதிகாரி, வைத்தியசாலையில் இருந்த மற்றவர்களை அழைக்கும்படி கூறினார்.
அந்த வைத்திய அதிகாரியும், வைத்தியசாலையின் பல இடங்களிலும் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு மறைந்திருந்த மற்றவர்களை வெளியில் வரும்படி கூவி அழைத்தார்.
பிணங்களின் மத்தியில் இருந்தும், பூட்டிய அலுமாரிகளின் உள்ளிருந்தும், கூரைகளின் மறைவில் இருந்தும், பழைய பொருட்கள் வைக்கும் இடங்களில் இருந்தும் பலர் அங்குவந்து சேர்ந்தார்கள்.
அதன்பின்னரே அவர்களுக்கு உயிர் வந்தது.  உயிர் வந்தது என்று கூறுவதைவிட உயிர் பிச்சை கிடைத்தது என்று கூறுவது பொறுத்தமாக இருக்கும். அந்த உயிர்ப்பிச்சை இந்தியப் படையினரிடம் இருந்து கிடைக்கவில்லை. முதல் நாள் இரவு முவதும் அவர்கள் வழிபட்ட கடவுளிடம் இருந்துதான் கிடைத்தது.
அங்கு திரண்டுவந்த வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்களைப் பார்த்து அந்த இந்திய அதிகாரி ஒரு கேள்வியைக் கேட்டார்: ~~எதற்காக புலிகளை வைத்தியசாலையினுள் மறைத்து வைத்தீர்கள்?
அங்கிருந்தவர்கள் அதிர்ந்து விட்டார்கள்.
அந்த இராணுவ அதிகாரி அடுத்துக் கூறிய வசனம் அவர்களை மேலும் ஆச்சரியமடைய வைத்தது: ~~இங்கே பாருங்கள் எத்தனை புலிகளை எங்களது படைவீரர்கள் இங்கே சுட்டு வீழ்த்தியிருக்கின்றார்கள்? ``மருத்துமனை போன்ற ஒரு இடத்தை யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா? அங்கிருந்த வைத்திய சாலை ஊழியர்களுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. ஆடிப்போய்விட்டார்கள்.
புலிகளை தாங்கள் மருத்துமனைக்குள் ஒளித்து வைத்திருந்தது போலவும், அதனால்தான் இந்தியப் படையினர் வைத்தியசாலையினுள் நுழைந்து அந்தப் புலிகளை எல்லாம் அழித்துவிட்டது போலவும் அந்த அதிகாரி கூறுவதையும், அதற்கு காரணமாக அங்கிருந்த வைத்தியசாலை அதிகாரிகளையும், ஊழியர்களையும் குற்றம் சுமத்துவதையும் - அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியாத சூழ்நிலை.
அங்கு வெள்ளை ஆடைகளுடனும், ஸ்தெதஸ் கோப்புக்களுடனும், வீழ்ந்து கிடக்கும் வைத்தியசேவை ஊழியர்கள் எல்லாம் புலிகளா? அந்த இடம் பூராவும் உடல் சிதறிப் பலியாகியிருந்த தலை நரைத்த வயோதிபர்கள், சேலை அணிந்த பெண்மணிகள், குழந்தைகள் அனைவருமே புலிகளா? கதறி அழவேண்டும் போலிருந்தது.
அந்த இந்தியப் படை அதிகாரியின் சட்டையை பிடித்து இழுத்து, இந்தக் கேள்விகளையெல்லாம் அவரது மண்டையில் உறைப்பது போன்று கேட்கவேண்டும் போல் இருந்தது.  ஆனால் அவர்களது உயிர்கள் அந்தக் கணத்தில் அந்த இந்திய அதிகாரியின் கருனையிலேயே தங்கியிருந்தது.  அவர்கள் எதுவும் பேசவில்லை. தலைகுனிந்து தரையைப் பார்த்தபடி மௌனமாக நின்றார்கள்.
தன்னை ஒருவாறு அசுவாசப்படுத்திக் கொண்ட ஒரு வைத்திய அதிகாரி, துணிவை வரவழைத்துக் கொண்டு மிகவும் பணிவான குரலில் கூறினார்: ~~என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. இந்தியப் படையினர் வைத்தியசாலையினுள் நுழைந்த போது உண்மையிலேயே இங்கு புலிகள் எவரும் இருக்கவில்லை. வைத்தியசாலை வளாகத்தினுள் இருந்து எங்கள் அறிவுக்கெட்டியவரை புலிகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்த்ததாகத் தெரியவில்லை.||
அந்த வைத்திய அதிகாரியைத் தொடர்ந்து வேறு சிலரும் ~புலிகள் வைத்திய சாலைக்குள் இருக்கவில்லை என்பதை இந்திய அதிகாரியிடம் தெரிவித்தார்கள்.
அமைதியாக அவற்றைச் செவிமடுத்த அந்த இந்தியப் படை அதிகாரி, அங்கிருந்தவர்களைப் பார்த்து கேட்டார் : அப்படியென்றால் நான் பொய் கூறுகின்றேனா? நான் என்ன பொய்யனா?||
அந்த இந்தியப்படை அதிகாரியின் கண்கள் சிவந்து காணப்பட்டன.
அவலங்கள் தொடரும்....
  • Geen opmerkingen:

    Een reactie posten