தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 maart 2012

அமெரிக்காவின் இலங்கை மீதான பிரேரணை ஓர் ஆரம்பமே முடிவு அல்ல!- ச. வி. கிருபாகரன்!



முள்ளிவாய்க்காலின் பேரவலங்கள் முடிவுற்று மூன்று ஆண்டுகள் தற்போது நிறைவடைகிறது. முள்ளிவாய்க்காலின் கொடூரங்களை அனுபவித்த மக்களுக்கு மேலும் ஆத்திரம் ஊட்டும் செயலாக இலங்கைத் தீவின் தலைநகரான கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தெருப்பொங்கலும் பால் பொங்கலும் நடைபெற்றன.
இப்பொங்கல் வெற்றி விழாக்களில் இலங்கை ஜனாதிபதி உட்பட பல அரசியல் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் அனைவரும் சாதி, மத பேதமில்லாது ஒரு தாய்ப் பிள்ளைபோல் வாழ வேண்டுமென கூறிவரும் ஜனாதிபதி, தனது நாட்டில் தனது மக்களென கூறும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கவலைகள் சோகங்கள், இழப்புகளைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாது தென்பகுதி மக்களுடன் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார் என்பது பழைய கதை.
2009 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் உரையாற்ற சமுகமளித்திருந்த கிழக்குத் தீமோர் ஜனாதிபதி ஹட்டஸ் ராமோஸ் அங்கு கருத்துத் தெவித்ததாவது: “நான் இலங்கையில் கடந்த மே மாதம் நடைபெற்ற தெருப்பொங்கல், பால் பொங்கல்களை தொலைக்காட்சியில் பார்த்து வெட்கப்பட்டேன்'' எனக் கூறினார்.
ஓர் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம், ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றும் செயலே!
19 ஆவது கூட்டத் தொடர்
இந்நிலையில் இப்போது ஜெனீவாவில் 19 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்காவினால் இலங்கை மீது ஓர் பிரேரணை மனித உரிமைச் சபையில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதாவது தன்னிச்சையாக செயல்பட்டு வரும் இலங்கையை சர்வதேச மன்னிப்புடன் மேலும் தனது எதேச்சையான செயற்பாடுகளை தொடர அனுமதிக்க மாட்டோம் என்ற செய்தி தெளிவாகியிருந்தாலும் இப் பிரேரணையின் பின்னணியில் பல விடயங்கள் மறைந்துள்ளன.
முதலாவதாக ஓர் சர்வதேச வலைக்குள் இலங்கையை உள்ளடக்கப்படுவதற்கான ஐ.நா. அங்கத்துவ நாடுகளினால் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய நடவடிக்கை எடுப்பதற்கான அத்திவாரம் இடப்படுகிறது.
இரண்டாவதாக இலங்கை முன்பு அதாவது 2008க்கு முன்பு கூறியவற்றை நம்பி நாம் இனியும் உங்கள் பொய்கள், எம்மீது சவாரி செய்யும் விடயங்களை நிறுத்த வேண்டுமென்ற செய்தி கூறப்படுகிறது.
முன்பு தமிழர்களின் சுய நிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என சித்தரித்து இதற்கு பலதரப்பட்ட இன்னல்களை அன்று செய்தவர்கள் இன்று இலங்கை மீது இந்தப் பிரேரணையை நிறைவேற்ற வேண்டுவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக போர்க் காலத்தில் இது ஓர் பயங்கரவாதப் பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினை, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவை தாக்குவார்கள், ஐரோப்பாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவார்களென கூறிய இதே அரசாங்கம் முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் மக்களின் சுய நிர்ணய போராட்டம் ஓர் உள்நாட்டு விடயமென கூறுவதை இனியும் நாம் ஏற்க மாட்டோம் என்ற செய்தியும் அங்கு கூறப்படுகிறது.
நான்காவதாக முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள், வளர்ந்து வரும் நாடான இலங்கையை நசுக்கப் பார்க்கிறார்களென்பது, அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்கும் சில வளர்ந்துவரும் நாடுகளின் ஆதரவின் முலம் நிர்மூலமாக்கப்படுகிறது.
ஐந்தாவதாக எல்லாரையும் எல்லா நேரமும் மடையர்களாக்க முடியாது என்ற செய்தியும் இங்கு கூறப்படுகிறது.
இவற்றுடன் மறைந்திருக்கும் வேறு சில விடயங்களை இங்கு கூறுவதை தவிர்த்துக் கொள்கிறேன்.
மனித உரிமைச் சபையில் வாக்குரிமை
எதிர்பார்க்கப்பட்டபடி அதிகமாக அடுத்த வாரம் புதன், வியாழன் அல்லது வெள்ளி காலை இப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் ஆதாரமற்ற வதந்திகள் பல புலம்பெயர் வாழ் தமிழ் இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படுகின்றன.
ஒன்று நிச்சயம், எந்தவொரு ஐ.நா. அங்கத்துவ நாடு மீதும் இரண்டு பிரேரணைகள் மனித உரிமைச் சபையில் விவாதத்திற்கு கொண்டு வர முடியாது.
அப்படி மிலேச்சத்தனமாக இலங்கை சார்பான ஒரு நாடு முன்மொழிந்தாலும் முதலாவதாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கே முன்னுரிமையுண்டு. ஆகையால் அமெரிக்காவின் இலங்கை மீதான இப்பிரேரணையை எந்தவொரு நாடும் எந்த கபடமான வழிகள் மூலம் இல்லாது செய்ய முடியாது.
மனித உரிமைச் சபையின் வாக்கெடுப்பு என்பது இதன் அங்கத்துவ நாடுகளான 47 நாடுகளுக்கே மட்டும் உரியது. இதன் அடிப்படையில் ஆசிய, ஆபிரிக்க கண்ட நாடுகளுக்கு 13: 13 ஆக 26 நாடுகளும் அத்துடன் தென் அமெரிக்க/ லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எட்டும் மேற்கு ஐரோப்பிய அமெரிக்கா, கனடாவுக்கு ஏழு நாடுகளும் கிழக்கு ஐரோப்பிய ஆறு (6) நாடுகளுமாக எல்லாமாக 47 நாடுகளுக்கு வாக்களிப்பதற்கு உரிமையுண்டு.
இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது மேற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா தவிர்ந்த மற்றைய நாடுகளுடன் தென் அமெரிக்க நாடுகளில் கியூபா, ஈக்குவடோர் நாடுகள் தவிர்ந்த மற்றைய நாடுகள் வெளிப்படையாக அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்கின்றன. இதன் அடிப்படையில் 18 நாடுகள் ஏற்கனவே வெளிப்படையான ஆதரவு என்பது தெளிவு.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மனித உரிமை அங்கத்துவ நாடுகளில் ஆசிய, ஆபிரிக்காவில் சில நாடுகள் அமெரிக்காவின் தயவில் இயங்குபவை. ஆகையால் இவை பிராந்திய நட்புறவை கடைப்பிடியாது தாம் விரும்பியவாறு வாக்களிப்பார்களா என்பதும் முக்கிய விடயம்.
இலங்கை மீதான இப் பிரேரணையை நாம் 17 ஆவது கூட்டத் தொடரில் பேலரூஸ் மீதான வாக்கெடுப்புடன் ஒத்துப்பார்க்க முடியும்.
காரணம், இன்று இலங்கை எப்படியாக எந்த நாடுகளின் நட்புறவுடன் அமெரிக்காவின் பிரேரணையை எதிர்கொள்கிறதோ இதே விதமாக பேலரூஸும் 17 ஆவது கூட்டத்தொடரில் எதிர்கொண்டு படுதோல்வியை தழுவிக் கொண்டது.
காரணம் 47 நாடுகளில் 19 நாடுகள் பேலரூஸ் விடயத்தில் எந்தவித வாக்களிப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவிதமாகவே நிச்சயம் இலங்கை மீதான பிரேரணையின் வாக்கெடுப்பும் முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
சீனா, ரஷ்யா, கியூபா, இலங்கையை திருப்திப்படுத்துவதற்காக சில ஒழுங்குறை விடயங்களை சபையில் கிளப்பலாம்!
இலங்கையின் பிரசாரம்
இலங்கை பாரியளவில் பெரும் நிதிகளை செலவிட்டு பிரசார வேலைகளை மேற்கொள்கின்றது. இதனால் இலங்கை ஏற்கனவே அடைந்த நன்மைகளை விட தீமைகளே ஏற்பட்டுள்ளன.
இலங்கை பிரசார குழுவினால் சீனா, ரஷ்யா, கியூபாவின் துணையுடன் மனித உரிமை சபையிலும் வெளியிலும் அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் கீழ்த்தரமான பண்பற்ற உரைகள், கலந்துரையாடல்கள் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் மேலும் ஆத்திரமடையச் செய்து வருகின்றன.
இதேவேளை, இலங்கையினால் ஜெனீவாவிற்கு வரவழைக்கப்பட்ட சிலரின் இனவாதக் கருத்துகள் இலங்கையின் உண்மை முகத்தை மனித உரிமை சபையில் பங்கு கொள்ளும் சகலரும் இலகுவாக அறிய வழி வகுத்துள்ளது.
இவர்களின் வருகையால் இலங்கைக்கு இருந்த சில அனுதாபங்களும் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இங்கு இலங்கையின் தூதுவராக கடமையாற்றும் தமிழரான செல்வி. தமரா குணநாயகம், ஆசிய ரீபியூனின் ஆசிரியர் கே.ரி. ராஜசிங்கம், பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ள பெண் இலக்கிய வாதி மற்றும் கொழும்பில் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜீவன் தியாகராசா போன்ற பலர் இலங்கைப் பிரேரணையில் தோல்வி காணும் கட்டத்தில் அரசுடன் இணைந்த தமிழர்களினால்தான் இலங்கை அரசு இப் பிரேரணையில் படுதோல்வி கண்டது என்ற வீண் குற்றத்திற்கு ஆளாகப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேரணைக்கு ஆதரவான செயற்பாடு
அமெரிக்காவின் இப் பிரேரணைக்கு ஆதரவாக பலம் பொருந்திய பல நாடுகள் மிக முக்கியமான சர்வதேச அமைப்புகள், பல முக்கிய புள்ளிகள் நிபுணர்களுடன் பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர் வாழ் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலர் செயற்பட்டு வருகின்றனர்.
ஆகையால் இப் பிரேரணை வெற்றி அடையும் கட்டத்தில் எந்தவொரு புலம்பெயர் வாழ் அமைப்பும், நாம் தான் இதை வெற்றிகரமாக நிறைவேற்ற இரவு பகலாக உழைத்தோம் என மார் தட்டுவதற்கு எந்த இடமில்லை என்பதை முன் கூட்டியே கூற விரும்புகிறேன்.
அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக பல மேற்கு நாட்டவர்கள் தமது நேரம், உழைப்பில் பெரும் பகுதியை தனிப்பட்ட முறையில் ஜெனீவாவில் செயல்படுவதை நாம் காணக் கூடியதாகவுள்ளது.
தமிழ் மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காது பிரித்தானிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி ஜோன் ரான், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சிபோன் மக்டொன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொபேட் எவேன்ஸ், திருமதி டியேறி மக்கோனால் ஆகியோர் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.
இதேவேளை கொழும்பிலிருந்து வருகை தந்த நீண்ட கால மனித உரிமையாளரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, திருமதி நிமல்கா பெர்னாண்டோ, திருமதி சுனிலா அபேசேகரா ஆகியோரின் வீரம் நிறைந்த பங்களிப்பும் பாராட்டிற்குரியது.
சிவபூசைக்குள் கரடி
ஐ.நா. மனித உரிமை அமர்வுகளில் கடந்த 22 ஆண்டுகளாக கலந்து கொள்பவன் என்ற வகையில் இங்கு ஓர் கருத்தை எந்தவித தயக்கமின்றி கூற விரும்புகிறேன்.
எமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் கடந்த பல சகாப்தங்களாக நடந்தபொழுதிலும் எந்த ஐ.நா. அமர்வுகளிலும் அதாவது பாதுகாப்பு சபை, பொதுச் சபை, மனித உரிமை சபை ஆகியவற்றில் இன்று போல் இவ்வளவு தூரம் சர்வதேசத்தினுடைய பார்வை எம்மீது ஒரு பொழுதும் இருக்கவில்லை.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் எந்த அனுபவம் தகைமையற்றவர்கள் பலர் ஆய்வாளர்களாகவும், தலைவர்களாகவும் விளங்க விரும்பிய காரணத்தினால் இன்று மூன்று வருடமாகியும் நாம் எதையும் உருப்படியாக சாதிக்கவில்லை.
அமெரிக்காவின் பிரேரணை பற்றி மிகச் சுருக்கமாக கூறுவதானால் இது ஓர் ஆரம்பமே அன்றி முடிவு அல்ல.
அதாவது இலங்கைத் தமிழர்களாகிய நாம் யாவற்றையும் இழந்துள்ள இந்நிலையில் விசேடமாக அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படும் அத்திவாரக் கல்லை, நாம் நாட்ட முயற்சிக்கத் தவறினால் நிச்சயம் எமது இனம் மக்கள் நிலம் ஆகியவற்றுடன் எமது இலட்சியத்தையும் நாம் மறந்து செயற்படுகிறோம் என்பதே அர்த்தமாகும்.

Geen opmerkingen:

Een reactie posten