[ வீரகேசரி ]
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களை வெளிப்படுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி புதியதொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு வெளியான இந்த வீடியோவை உடனடியாகவே அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஆனால் இந்த வீடியோ அரச, இராணுவ உயர் மட்டங்களுக்குத் தெரிந்தே போர்க்குற்றங்கள் நடந்தன என்று அடித்துச் சொல்கிறது.
குறிப்பாக பாதுகாப்பு வலயங்கள் மீதான ஷெல் தாக்குதல்கள் குறித்து அரச தரப்பு நன்றாகவே அறிந்திருந்தது என்கிறது இந்த ஆவணப்படம்.
இதற்குச் சான்றாக ஐ.நா பணியாளர்களுடன் தொடர்புடைய சம்பவம் ஒன்றையும் சனல்4 ஆதாரப்படுத்தியுள்ளது.
அதைவிட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சூழல் குறித்தும் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, அது ஒரு திட்டமிட்ட நீதிக்குப்புறம்பான படுகொலை என்று கூறியுள்ளது சனல் 4.
இந்த ஆவணப்படத்தை வெளியிட முன்னரே, அதன் உள்ளடக்கம் பற்றிய சில கட்டுரைகள் பிரித்தானிய நாளேடுகளில் வெளியாகின.
சனல் 4 ஆவணப்படத்தில் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விவகாரம் இடம்பெறுவதாக முதல்முறையாக கடந்த 11ஆம் திகதி அதிகாலையில் தான் பிரிட்டனின் தி ரெலிகிராப் செய்தி வெளியிட்டது.
அதற்கு அரசதரப்பில் இருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.
பாலச்சந்திரன் கொலை செய்யப்படவில்லை என்றோ, அதில் படையினர் தொடர்புபடவில்லை என்றால், அவர் எத்தகைய சூழலில் கொல்லப்பட்டார் என்ற விளக்கத்தையோ அரசதரப்பு இதுவரை முறைப்படியாக வெளியிடவில்லை.
ஆனால், 11ஆம் திகதி பிரிட்டன் நேரப்படி மாலை 4.38 மணியளவில் டெய்லி மெயில் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியானது.
அதில் சனல் 4 வீடியோவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் தொடர்பான ஆய்வும் இடம்பெறும் என்று கூறப்பட்டிருந்தது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்த பின்னர் வெளியிடப்பட்ட படங்களில் காணப்படும் முரண்பாடுகள் குறித்தும், அவரது தலையில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் குறித்தும் சனல் 4 ஆவணப்படம் ஆராயும் என்றும் அந்தக் கட்டுரை கூறியது. இந்தக் கட்டுரை பிரிட்டனில் வெளியானபோது, இலங்கையில் நேரம் இரவு 10 மணியாகி விட்டது.
மறுநாள் 12ஆம் திகதி, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இந்தியாவின் தென் பிராந்திய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் அஜய் சிங்கை இராணுவத் தலைமையத்தில் சந்தித்து விட்டு முல்லைத்தீவுக்குப் பறந்தார்.
முல்லைத்தீவு படைத் தலைமையகம், அதன் கீழ் ஒட்டுசுட்டானில் உள்ள 64ஆவது டிவிஷன் தலைமையகம், புதுக்குடியிருப்பில் உள்ள 68ஆவது டிவிஷன் தலைமையகம் ஆகியவற்றில் படையினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன் இறுதிப்போர் நடந்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
முல்லைத்தீவில் படையினர் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி பிரபாகரனின் மரணம் தொடர்பாக சனல் 4 ஒரு வீடியோவை வெளியிடப் போவதாக அறிவதாகவும், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இராணுவம் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அங்கு அவர், உண்மையை உலகுக்கு காட்ட இராணுவம் விரும்புகிறது. எனவே இறுதிப்போர் குறித்து முறையான, ஒத்திசைவான ஆதாரங்களின் அடிப்படையில் ஆவணப்படம் ஒன்றை நாம் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த உண்மைத் தகவல்களை இந்த ஆவணப்படம் கொண்டிருக்கும்.
அப்போது அங்கிருந்தவர்களின் செவ்விகளும் அதில் இடம்பெறும்.
இதன் மூலம், நந்திக்கடலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகம் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டும்.
53ஆவது டிவிஷன் இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பற்றிய காட்சிகள் குறித்து செய்திகள் வெளியான போது அதை முறியடிப்பது குறித்து இராணுவத்தரப்பு எதையும் கூறவில்லை.
ஆனால், பிரபாகரன் விவகாரம் பற்றி அலசப் போவதாகத் தகவல் வந்ததும், இராணுவத் தளபதி சில மணி நேரங்களிலேயே ஒரு பதில் ஆவணப்படம் தயாரிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த விடயத்தில் மட்டும் அவர் ஏன் இத்தனை அவசரப்பட்டார் என்ற கேள்வி இப்போது உச்சம் பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடிக்கின்றன.
இதன் காரணமாக, பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பும் ஒரு தரப்பினரும் உள்ளனர்.
பிரபாகரனின் மரணம் பற்றி திடீரென அறிவிக்கப்பட்ட விதம், அவரது சடலத்தின் தோற்றங்களின் மாறுபாடு, தலையில் உள்ள பாரிய காயம், அவரது மரணம் எப்போது நிகழ்ந்தது என்று இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படாதது என்று பல கேள்விகளுக்கான தீர்க்கமான பதில் இன்னமும் இல்லை.
இந்தநிலையில், இராணுவத் தரப்பு பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வீடியோவை தயாரிக்கின்ற நிலையில் அது சர்ச்சைக்குரிய விவகாரமாகியுள்ளது என்பது உறுதி.
ஆனால், சனல் 4 ஆவணப்படத்தில் இந்த விவகாரம் குறித்து அதிகம் அலசப்படவில்லை.
ஆனால் சனல் 4 ஆவணப்படம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் இராணுவத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய திடீரென முல்லைத்தீவுக்குச் சென்றதும், பிரபாகரனின் மரணம் பற்றிய ஆவணப்படத்தை தயாரிக்கும் அறிவிப்பை 68ஆவது டிவிஷன் படையினர் மத்தியில் வெளியிட்டதற்கும் தொடர்புகள் உள்ளன.
68ஆவது டிவிஷனில் இடம்பெற்றிருந்த 4ஆவது விஜயபா காலாட்படை பற்றாலியனே, பிரபாகரனின் சடலத்தை நந்திக்கடலில் இருந்து மீட்டதாக அறிவிக்கப்பட்டது.
68ஆவது டிவிஷன் படையினரின் தாக்குதலிலேயே அவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அந்த மரணம் பற்றி சர்ச்சைகள் தோன்றும் போது அதிலுள்ள படையினர் குழப்பமடைவது இயல்பு.
இத்தகைய நெருக்கடி மிக்க சூழலில், இராணுவத்தளபதி வன்னிக்கு மேற்கொண்ட பயணம் படையினரின் குழப்பத்தைத் தீர்ப்பதற்குத் தான்.
அவரது உரையில், படையினரை ஜனாதிபதியோ, பாதுகாப்புச் செயலரோ கைவிடமாட்டார்கள் என்ற உறுதியான தொனியையும் அவதானிக்க முடிகிறது.
�போரின் போது மனித உரிமைகளை மீறியுள்ளதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலரும் நாம் எவ்வாறு பணியாற்றினோம் என்பதை நன்கு அறிவார்கள்.
மிகச்சிறிய நாடான எம்மால், பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று சர்வதேசம் நம்பவில்லை.
நாம் பெற்ற வெற்றியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதனால் இராணுவத்துக்கும், அரசுக்கும் கெட்டபெயரை ஏற்படுத்த ஜெனீவாவில் கூட்டாக வேலை செய்கிறார்கள்.
அரசாங்கத்தை தூக்கியெறிய முனைகிறார்கள்.
போரில் என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
பொய்யான குற்றச்சாட்டுகளின் பின்னால் உள்ள உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை அனைவருக்கும் உள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவினால், கூறப்பட்டுள்ள விசாரிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்திடம் அத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க எவரும் முன்வரவில்லை.
சாவகச்சேரியில் 3 படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்களுடன் உள்ள நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு சிறிய சம்பவமானாலும் அது ஒட்டுமொத்த இராணுவத்துக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.� என்றும் இராணுவத்தளபதி கூறியிருந்தார்.
இராணுவத்தளபதி சந்தித்த, 68ஆவது டிவிஷனும், 64ஆவது டிவிஷனும் இறுதிப்போரில் பங்கெடுத்தவை.
அதுபோலவே, மறுநாள் மன்னாரில் உள்ள 54ஆவது டிவிஷனுக்கும் சென்று இராணுவத்தினருடன் பேசியுள்ளார் லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய.
இந்த டிவிஷன் ஆனையிறவு வீழ்ச்சியுடன் கைவிடப்பட்டு, அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டதாயினும், இதிலுள்ள படையினர் வன்னிப் போரில் பங்கேற்றவர்கள்.
ஏற்கனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானபோதும், அதன் பரிந்துரைகளால் படையினர் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக இதுபோன்ற பயணத்தை இராணுவத்தளபதி மேற்கொண்டிருந்தார்.
போர்க்குற்றங்களுக்காக தாம் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் படையினர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, அரசாங்கம் தம்மைக் கைவிட்டு விடுமோ என்ற எண்ணம் அவர்களிடம் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருக்கிறது இராணுவத் தலைமை.
ஜெனீவா தீர்மானம், சனல் 4 குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில் இராணுவத்தரப்பு அவசரப்பட்டு நிதானமிழப்பதையும் காணமுடிகிறது.
பரபரப்பாக பதற்றமாக இராணுவத்தரப்பு எடுக்கும் நடவடிக்கைள் பல சமயங்களில் அதன் பலவீனத்தை வெளிப்படுத்தி விடுகின்றன.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten