வெளிவந்தது கடுகளவாக இருப்பினும் வராதது கடலளவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இலங்கையின் கொலைக்களத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்கிற தலைப்பிட்டு நான்கு புதிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
சர்வதேசமெங்கும் காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு சனல் 4 இன் விவரணப் படம் மேலும் வலுச் சேர்த்துள்ளது.
கடந்த வருடம் வெளிவந்த முதலாம் பாகத்தைவிட, இரண்டாவது பாகமானது, இலங்கை அரசின் அதிகார மையத்தை நோக்கி பல வினாக்களை முன்வைக்கிறது.
குறிப்பாக 2007 இலிருந்து 2010 வரை பிரித்தானியாவின் வெளிவிவகாரச் செயலாளராக இருந்த டேவிட் மிலிபாண்டும், அதே காலப் பகுதியில் ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பாளராகவிருந்த ஜோன் ஹோம்சும் இந்த ஆவணப்படம் குறித்து தமது காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார்கள்.
இவர்கள் இருவரினது குற்றச்சாட்டுகளும் இலங்கை அரசின் மீது திரும்பி இருந்தது.
அதேவேளை, கொலைக்களத்தின் முதலாவது பாகத்தை பார்வையிட்ட தனது 28 வயதான மகன், தானொரு சிங்களவர் என்று சொல்வதற்கு வெட்கப்படுவதாகக் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள், கூட்டமொன்றில் உரையாற்றிய விடயத்தையும் இப்படம் உள்ளடக்கியிருந்தது.
இறுதிப் போரில் நிகழ்ந்த திட்டமிட்ட இன அழிப்பினை, அறிந்தும் அறியாதது போல் சர்வதேசம் மௌனித்திருந்த விவகாரத்தை பலரும் சுட்டிக் காட்டினார்கள்.
இராஜதந்திரத்தின் பாதாள உலகப் பக்கத்தில் என்ன நடந்தது என்பதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிற வகையில் ஒருவர் கூற்று அமைந்திருந்தது.
இத்தனை அவலங்கள் நடந்தேறினாலும் அம்மக்களுக்கு நீதி கிடைக்குமா என்கிற கேள்வியோடு இந்த விபரணப்படம் முடிவடைகிறது.
மனித உரிமை மீறல், மானிடத்திற்கெதிரான குற்றங்கள் என்கிற குறுகிய வட்டத்துள் 62 வருடகால ஒடுக்குமுறையை அடக்கிவிடலாமென்று முயலும் வல்லரசாளர்கள், தேசிய இனமொன்றின் பிறப்புரிமை நசுக்கப்படுகிறது என்பதனைப் பற்றிப் பேசுவதற்கு மறுக்கின்றார்கள்.
அடக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவது தமது பூகோள நலன்களுக்கு இசைவான விடயமல்ல என்று கருதுவதால், குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பதன் ஊடாக நல்லிணக்கத்தை உருவாக்கி, பிரச்சினையை தீர்க்கலாமென்பதே இவர்களின் புதிய உலக ஒழுங்கின் அணுகுமுறையாகும்.
இந்திய நாடாளுமன்றத்தில் வெளிநாட்டமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கை, இத்தகைய அணுகுமுறையின் உள்ளார்ந்த பண்புகளை வெளிச்சமாக்குகிறது.
சனல் 4 காட்சிகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிடும் அமைச்சர், அதனை நம்புவதோடு, அமெரிக்கப் பிரேரணை பற்றி நிதானமாகத் தீர்மானிக்க வேண்டுமெனக் கூறுகின்றார்.
இதில் இலங்கை விவகாரத்தில் வரலாற்றுப்பூர்வமான நட்பு பாதிக்கக் கூடாது என்பதனை தமது பிராந்திய நலனடிப்படையில் பார்ப்பதோடு, பிரச்சினை பெரிதாகி கசப்புணர்வு அதிகரித்து விடக் கூடாதென்பதில் தாம் கரிசனை கொண்டுள்ளது போல் காட்டிக் கொள்ளவும் எஸ்.எம். கிருஷ்ணா முற்படுகின்றார்.
ஆகவே சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படும் போது தென்னிலங்கை அரசியல் மையம், பெரும் சிக்கலிற்குள்ளாகும் என்பதை இந்தியா மறைமுகமாக ஏற்றுக் கொள்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.
நடைபெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறாமல் நல்லிணக்கத்தை உருவாக்கிவிடலாமென்கிற இலங்கை அரசின் நிலைப்பாட்டோடு ஒத்துப் போகும் நிலையே, தனது பிராந்திய நலனிற்கு பொருத்தமாகவிருக்குமென்று இந்தியா கணிப்பிடுவது போலுள்ளது.
வரலாற்று பூர்வமான நட்பு, மற்றும் விசாரணை உருவானால் தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கம் சீர்குலையும் போன்ற இந்தியாவின் கருத்தாடல்களுக்கு, றொபேர்ட் ஓ பிளேக் அண்மையில் தெரிவித்த கருத்து, பதிலாக அமையுமென எதிர்பார்க்கலாம்.
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்கிற விடயங்களை இணைத்துச் செல்லாமல் பிரச்சினையை சமாளிக்க முற்பட்டால் மீண்டுமொரு போராட்டம் வெடிப்பது தவிர்க்க முடியாமல் அமைந்துவிடுமென பிளேக் கூறியதில் உண்மை உண்டு.
ஏனெனில் நட்பினைப் பேண இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் போக்கு பிளேக்கின் எதிர்வுகூறலை நிஜமாக்கி விடும்.
அதேவேளை, அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராக சகல வழிகளிலும் தமது இராஜதந்திர நகர்வுகளை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். பூகோள அரசியலில் அமெரிக்க எதிர்ப்பு நாடுகளாகவுள்ள அணிகளை ஒன்று சேர்க்கும் காய் நகர்த்தலில் ஜீ.எல். பீரிசும், தமரா குணநாயகமும் தீவிரமாக ஈடுபடுவதை காண்கிறோம்.
மேற்குலகின் பொருளாதாரத் தடையால், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஈரானுடன் சர்வதேச சமூகமானது ஆக்கபூர்வமான தொடர்புகளைப் பேண வேண்டுமென அறிவுரை சொல்லும் தமரா குணநாயகம், மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே இத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேச்சுக்களை முன்வைக்கிறார் என்பதனைப் புரிந்து கொள்வது இலகுவானது.
2011 இல் பல குற்றச் செயல்களுக்காக 670 பேருக்கு மரண தண்டனை வழங்கிய ஈரானின் மனிதாபிமானப் பணியை, சர்வதேசம் பின்பற்ற வேண்டும் என்பது போலிருக்கிறது அம்மையாரின் அறிவுரை.
ஜெனீவாவில் இத்தகைய இராஜதந்திர போர் தீவிரமடையும் அதேவேளை, இலங்கையில் வேறு விதமான பரப்புரைப் போர்க்களமொன்று திறக்கப்படுவதைக் காணலாம்.
சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவம் உட்படுத்தப்பட்டால், 83 போன்ற பாரிய இனமோதலொன்று உருவாகலாமென்று மத்திய அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க கூறியதாகவும் செய்தி ஒன்று வெளிவருகிறது.
இக்கூற்று, தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்ல சமிக்ஞையா என்பதனை தாராளவாதக் கட்சியின் பிரதிநிதி ரஜீவ விஜயசிங்கவே விளங்கப்படுத்த வேண்டும்.
ஜெனீவா போர் அரங்கில் தற்காப்புத் தாக்குதல்களும், பிரேரணை என்கிற எறிகணைத் தாக்குதல்களும் தீவிரமடையும் இவ்வேளையில், வருகிற 28 ஆம் திகதி எக்ஸ்போ 2012 (EXPO 2012) என்கிற வர்த்தகக் கண்காட்சி இலங்கையில் நடைபெறப்போகிறது.
இதில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 பேர் கலந்து கொள்வார்களென ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் (EDB) தலைவர் ஜானக இரத்நாயக்க கூறுகின்றார். குறிப்பாக சீனாவிலிருந்து 350 பேரும், இந்தியாவிலிருந்து 150 பேரும் இக் கண்காட்சியில் சமூகமளிப்பார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது வீழ்ச்சியுறும் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு ஏற்படுகிறது. ஆகவே உற்பத்தியை அதிகரிக்க, வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக, இக்கண்காட்சி மேற்கொள்ளப்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.
முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால், நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடையும்போது ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற சீனச் சூத்திரம் இலங்கையில் ஏன் நடைமுறைச் சாத்தியமாகவில்லை என்பதாகும்.
இக் கண்காட்சி தொடர்பாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறும் விளக்கங்களை அவதானித்தால், சூத்திரத்தின் சிக்கல் புரியும்.
ஆசியாவில் சீனாவிற்கு அடுத்த நிலையிலுள்ள இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது 7.2 சதவீதமாக இருப்பதாகவும், யூரோ வலய நாடுகளிலுள்ள நெருக்கடி, தமது ஆடை ஏற்றுமதியைப் பாதிக்கவில்லை எனப் பெருமையடையும் பசில் ராஜபக்ச, வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) மட்டுமே தமது ஒரே பிரச்சினையென்று கூறுகின்றார்.
அத்தோடு 9.7 பில்லியன் டொலர் வர்த்தகப் பற்றாக்குறையும், எரிபொருள் பற்றாக்குறையும், தமது பொருளாதாரத்திற்கு தடையாக அமையாதெனவும் சொல்கிறார்.
ஆனாலும் பொருளாதார வளர்ச்சி வீதம் பற்றிக்கூறும் ஆட்சியாளர், கடன் வளர்ச்சியடையும் வீதம் குறித்து பேசுவதில்லை.
மொத்த உள்ளூர் உற்பத்தியை (GDP) வைத்து, ஒருநாட்டின் பொருளதார பலத்தை கணிப்பிடும் போக்கு மாற்றமடைந்து, அதன் வர்த்தக பற்றாக்குறையானது, இதே மொத்த உள்ளூர் உற்பத்தியின் 10 வீதத்திற்கும் அதிகமாக இருந்தால், அந்நாட்டினை முதலீட்டாளர்கள் அந்நியப்படுத்தும் புதிய போக்கினைப் பார்க்கலாம்.
இந்நிலையில் இலங்கை ஆட்சியாளர்கள் முன்னெடுக்கும் மேற்குலக எதிர்ப்பு நிலைப்பாடு தீவிரமடைந்தால், வர்த்தகப்பற்றாக் குறை 10 சதவீதத்தைத் தாண்டும் வாய்ப்புக்கள் அதிகம்.
பிரேரணைகள் மட்டுமல்ல, உலகின் பாரிய நிதி மையங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மேற்குலக அணியினரின் பொருண்மிய அழுத்தங்களும் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும்.
Geen opmerkingen:
Een reactie posten