[ விகடன் ]
மரணத்தின் ஓலமே பச்சைப் படுகொலையை உணர்த்தும். ஈழத்தில் இருந்து ஒலிக்கும் ஒப்பாரியும் ஓலமும் இப்போதுதான் உலக நாடுகளுக்கு ஓரளவு கேட்க ஆரம்பித்து இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அமெரிக்கா.
ஜெனிவாவில் கூடிப் பேசும் நாடுகள், வவுனியாவில் கூடி இருந்தால் உண்மை அதிகமாகவே சுடும். எனது பணிக் காலத்தில் நெஞ்சத்தைப் பதைபதைக்க வைத்த காட்சி அது! என்று 2009 மே மாதம் 23-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் மூச்சடைத்துப் போய்ச் சொன்னார்.
மே 19-ம் தேதி உயிர்ப் பறிப்பின் கடைசி தினம். அன்றில் இருந்து நான்கு நாட்கள் கழித்து சென்ற பான் கீ மூன் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இடங்களும் போர்க்குற்றத்தின் கொடூரச் சுவடுகள் தெரியாமல் அழிக்கப்பட்டு இருந்தன.
அந்தத் தடயங்களை மறைப்பதற்குத்தான் நான்கு நாட்களை எடுத்துக் கொண்டார் மகிந்த ராஜபக்ச. தடயம் அழிக்கப்பட்ட இடங்களே பான் கீ மூனைப் பதைபதைக்க வைத்தது என்றால், முந்தைய மூன்று ஆண்டுகள் எப்படி இருந்திருக்கும்?
குடியிருப்புகள் மீது வீசப்பட்ட குண்டுகள் மிகவும் பயங்கரமானவை. அவை வெடித்ததும் அந்தப் பகுதியில் காற்றில் இருக்கும் ஒக்ஸிஜனை உறிஞ்சும். அதனால், காற்றில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகும். இதனால் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் மூச்சடைத்துச் செத்துப்போவார்கள். அப்போது அவர்களுடைய உடைகள் எல்லாம் நார்நாராகக் கிழியும். செத்துப் போனவர்கள் உடல்கள் எல்லாம் நிர்வாணமாகவே கிடக்கும்! என்று தான் பார்த்த காட்சியை மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் குழுவிடம் தமிழ் ஈழப் பெண் ஒருவர் சொன்னார்.
அவர் சொன்னது கற்பனை அல்ல. அந்தப் பெண் சொன்னதை வாஷிங்டனில் உள்ள சர்வதேச மூத்தகுடி மக்கள் குழு வழிமொழிந்தது.
இலங்கை அரசின் செயற்பாடு, சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்!’ என்று எழுதப்பட்ட வாசகத்தில் கையெழுத்துப் போட்ட மூன்று முக்கியமானவர்கள்... தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர், ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான்.
மூன்று ஆண்டுகள் கழித்து, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா வந்து இதனை ஆரம்பிக்க வேண்டிய அளவுக்கு உலக நாடுகளிடம் மௌனம் நிலவியது.
ஜார் சக்கரவர்த்திக்குப் பாடம் கற்பித்த சோவியத் ஒன்றியமும், பண்பாட்டுப் புரட்சி கண்ட செஞ்சீனமும், பாடிஸ்டாவுக்கு எதிராகக் களமாடிய ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபாவும் ஈழத் தமிழர்க்கு அரணாக இருந்து காத்திருக்க வேண்டும். அல்லது காந்திய தேசமாவது கை கொடுத்திருக்க வேண்டும். அமைதி விடுதலை கண்டவர்களும் ஆயுத விடுதலை அடைந்தவர்களும் மௌனிக்க... அமெரிக்கா இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது.
ஒருகாலத்தில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைதான் இலங்கை. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் இரத்தத் தொடக்கமாக அமைந்தது 1983 ஜூலைப் படுகொலைகள்.
அப்போது அமெரிக்க அரசாங்கம் விடுத்த அறிக்கையில், 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கரவாதிகள் நடந்துகொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இந்த இனக் கலவரமாகும் என்று நியாயப்படுத்தியது. இந்தப் பாவத்துக்குப் பரிகாரம்தான் ஜெனிவாவில் இப்போது காணப்படுகிறது!
ராஜபக்ச மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. சபை மூவர் குழுவை அமைத்து விசாரித்தது. சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்று அந்த அறிக்கை சொல்கிறது. இந்த அறிக்கையை மையமாக வைத்துதான் அமெரிக்கா தனது தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.
அதை விடுத்து, இலங்கை அரசாங்கம் அமைத்த கண்துடைப்பு ஆணைய அறிக்கையை மையமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களுக்கும் மனித உரிமைக்கும் காட்டும் அக்கறை ஆகாது.
ஆனாலும், அமெரிக்கா இதையாவது செய்கிறதே, இவர்களாவது செய்கிறார்களே என்று மனத் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியது தான்!
பொருளாதார வளத்திலும் இராணுவ வளத்திலும் அமெரிக்காவுக்குச் சமமாக நிற்கும் சீனாவின் கைப்பாவையாக இலங்கை மாறிவிட்டது என்பதால், அந்த நாட்டை மிரட்டுவதற்கு அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது.
அமெரிக்கா எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்று கம்யூனிஸ நாடுகள் குருட்டுக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்த இரண்டு பகடைகளுக்கு மத்தியில் தமிழனின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. ராஜபக்ச உயிர் தப்பிவருகிறார்.
1949-ம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 3-ல் போர்க் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
போரில் நேரடியாகப் பங்கெடுக்காதவர்கள், போரில் ஈடுபாடுள்ள வீரர்களின் குடும்பத்தினர், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன்வந்தவர்கள், காயத்தாலோ, நோயினாலோ பாதிக்கப்பட்டவர்கள், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோரை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும்!’ என்று அந்த விதி கூறுகிறது.
ஐ.நா. சபை அமைத்த மூவர் குழு அறிக்கைப்படி கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேரும் (இதைவிட எண்ணிக்கை கூடுதலானது என்றாலும்!) இந்த விதிகளில் குறிப்பிடப்படும் வகையினர்தான். தங்கிய இடங்கள், பதுங்குக்குழிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வளையம் என அத்தனையையும் மயானமாக்கியவர்களுக்கு ஐ.நா. சபையோ 47 உறுப்பு நாடுகளோ தண்டனை தருமா? அதுவும் எப்போது என்று தெரியாது.
ஆனால், 'தெய்வம் நின்று கொல்லும்’ என்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!
Geen opmerkingen:
Een reactie posten