இந்தப் பிரசுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என தமிழர் பிரதேசங்கள் எங்கும் ஒரே நேரத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறு என தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்தத் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்வோம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களில் அறிவித்திருந்த செய்தி கிராமங்கள் தோறும் மக்களிடையே சென்றடைந்தது. இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தரும், சட்ட ஆலோசகர் மற்றும் மத்திய குழு உறுப்பினருமான சுமந்திரன் அவர்களும் 25.12.2012 அன்று ஜெனிவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என்று அறிவித்துள்ளதானது, தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஏற்றுக்கொண்ட எமக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றது.
கலந்துகொள்ளாமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. அத்துடன் இரா.சம்பந்தரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடனும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவா?
முன்னர் முக்கியமான கால கட்டங்களில் தமிழரசுக்கட்சி செய்த அதே தவறை இன்றும் தமிழரசுக் கட்சி தொடர்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.
இங்கிலாந்து நாட்டின் கரோ தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் றொபோட் கல்யோன் இலங்கை அரசாங்கம் ரவுடி இராட்சியம் போன்று செயற்படுவதையும், தமிழ் மக்களை கொடுமைப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டின் பாராளுமன்றத்தில் எமது சார்பாக தனது விவாதத்தினை திறம்பட எடுத்துரைத்தார். அந்த செய்தி 26.02.2012 அன்று சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது. அவரது உணர்வுகூட எமது தலைவருக்கு இல்லை என்று எண்ணும்போது எமக்கு மிகவும் கவலையாக உள்ளது.
தன்னிச்சையாக முடிவெடுத்து, அதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சாயம் பூசுவது எந்த வகையில் நியாயம் என்பதை அறிக்கை விடுத்தவர் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிரசுக்கட்சிதான், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பதை தமிழரசுக்கட்சி நிலைநாட்ட முற்படுகின்றதா?
நீங்கள் ஜெனிவா சென்று எதனையும் சாதிக்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும். உங்களது பிரசன்னம் குறைந்தபட்சம் புலம் பெயர் உறவுகளினதும், தாயக மக்களினதும் உணர்வுகளுக்கு ஓர் உந்து சக்தியாக இருக்கும் என்பதற்கு அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து எமது தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும், இழப்புக்களையும், குறைகளையும், கவலைகளையும் அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் இவ் அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று மக்களாகிய நாங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் ஜெனிவாவுக்குப் போவதில்லை என்ற இரா.சம்மந்தர் ஐயாவின் அறிக்கை எங்களை ஏமாற்றி விட்டது. அதுமட்டுமல்லாமல், தலைவர் சம்மந்தன் ஐயாவிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் நிகழ்ந்த இறுதிச் சந்திப்புக்குப் பின்னர் இந்த அறிக்கை வெளிவந்துள்ளதாலும், தமிழரசுக்கட்சி மீண்டும் எங்களை ஏமாற்ற முனைகின்றதா, என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. இந்த வரலாற்றுத் துரோகத்தில் இருந்து தமிழரசுக்கட்சி மீண்டெழுமா?
ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கு விளக்கமளித்தவர்கள் ஆயிரம் காரணங்களை முன்வைத்து தப்பிக்க முற்படுகின்றபோது, உண்மையை தமிழ் மக்கள் உணர்வார்கள். இன அடக்குமுறையில் ஏற்படுகின்ற அரசியல் தீர்வு பற்றி கிஞ்சித்தும் ஆர்வம் கொள்ளாத அரசே தனது பிரதிநிதிகள் பட்டாளத்தை அங்கு அனுப்பி தனது தரப்பு விளக்கத்தை உண்மையை மூடிமறைக்கும் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தமக்கான ஆதரவை தக்கவைக்க பெரும் பிரயத்தனத்தில் ஈடுபடுகின்றது. எல்லாவற்றையும் இழந்த எங்களை பிரதநிதித்துவப்படுத்தும் உங்களால் அங்கு சென்று உண்மை நிலையை எடுத்தியம்பக்கூட முடியவில்லையா?
இந்த 30 வருடகால ஆயுதப் போராட்டத்தின் மூலம் விடுதலை வேண்டி தமிழினம் பெற்று வந்த அழிவுகளும் இழப்புக்களும் சொல்லில் அடங்காதவை. இவை குறித்து சர்வதேச நாடுகள் ஒரு ஒழுங்கு வரையறையை இலங்கை மீது கொண்டு வரலாம் என்று எண்ணப்படும் நிலையில் ஜெனிவா சென்று தமிழருக்கு நியாயம் கேட்கக் கூடாது என்று எடுத்த தீர்மானத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் இரா.சம்மந்தரும் சட்ட ஆலோசகர் திரு,சுமந்திரன் அவர்களும் உறுதியாக இருப்பதைப் பார்க்கும்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஆட்சி அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதாகக் கருதும் தமிழரசுக் கட்சியே விலைபோய் விட்டதா, என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனது நெஞ்சங்களிலும் எழுகின்றது.
இந்நிலையில் தமிழர்களின் அரசியல் சக்தியாக விளங்கும் தமிழத்தேசிய கூட்டமைப்பின் ஏனைய 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கடசிகளும் தமிழ் மக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று ஜெனிவா சென்று தமிழ் மக்களின் நியாயத்தை எடுத்துதுரைப்பதன் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக கட்சி என்ற சிந்தனைக்கும் நம்பிக்கைக்கும் வலு சேர்ப்பீர்கள் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றோம்.
தமிழ்த்தேசிய கூட்மைப்பைப் பாதுகாப்பதற்கான மக்கள் சக்தி
Geen opmerkingen:
Een reactie posten