ஜெனீவாவில் தமக்கு ஆதரவு தேடும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்க தரப்பு தீவிரமாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் ஜெனீவாவில் தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்வதற்காக தாயகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை திரட்டி அனுப்பும் முயற்சியில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் சிலர் ஈடுபட்டிருக்கின்றனர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்ட குறித்த செயற்பாட்டாளர்கள் ஜெனீவா செல்வதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடியதுடன் அங்கு செல்வது தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து கொழும்பு வந்திறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘ஜெனீவா செல்வதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட ஒரு மித்த முடிவாகும். ஜெனீவா செல்வதன் மூலம் ஒன்றுமே நடந்துவிடப் போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கேட்ட போது, ‘ஜெனீவா செல்வதன் மூலம் எதனைச் சாதித்துவிட முடியும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? எதுவுமே நடக்கப்போவதில்லை. கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானமே இறுதியானது’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியிடம் கேட்ட போது,
‘ஜெனீவாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணம் செய்வது மிக முக்கியமான விடயமாகும். ஜெனீவா போவதில்லை என்று முடிவு எடுத்திருந்தால் அதனை அறிக்கை ஊடாக வெளிப்படுத்தியிருக்க வேண்டிய தேவையில்லை. மாறாக அறிக்கை வெளியிட்டதன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு சார்பாகச் செயற்படுகின்றதா? என்று எண்ணத் தோன்றுகின்றது. ஜெனீவாவிற்கு பயணம் செய்வதாக இருந்தால் நான் தயாராக இருக்கின்றேன். அங்கு சென்று எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் உண்மையாக தமிழ் மக்களை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. ஜெனீவா பயணத்தினை புறக்கணித்ததன் மூலம், போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணையே தேவையில்லை என்ற செய்தியினை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உலகிற்கு சொல்ல முற்படுகின்றாரா?’ என்று கேள்வி எழுப்பினார் சங்கரி.
இதேபோன்று தமிழ்காங்கிரஸ், புளொட், சிறீ ரெலோ ஆகிய கட்சிகளின் பிரநிதிகளிடமும் ஜெனீவா பயணம் தொடர்பில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களால் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
இந்தச் செயற்பாடு தொடர்ந்தும் இடம்பெறும் என்று சம்பந்தப்பட்டோர் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten