தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 augustus 2011

போர்க் குற்றவாளிகளை வெளியே அனுப்புங்கள்! இந்திய மக்களவையில் அமளி!- ஜூனியர் விகடன்

[ சனிக்கிழமை, 06 ஓகஸ்ட் 2011, 08:45.28 AM GMT ]
இந்திய மக்களவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கிய அன்றே, யாரும் எதிர்பாராத அளவுக்கு அமளி! மறைந்த உறுப்பினர்களுக்கு முதல்நாளில் அஞ்சலி செலுத்திய பின், அவை ஒத்தி வைக்கப்படுவது மரபு. ஆனால், அவைத் தலைவர் மீரா குமார், இலங்கையில் இருந்து நாடாளுமன்றத் தூதுக்குழு வந்திருப்பதாக அறிவித்து, அவர்களை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்.
உடனே, ம.தி.மு.க. உறுப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை வெளியே அனுப்புங்கள் என அதிரும்படி முழக்கமிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி உறுப்பினர் லிங்கம் ஆவேசத்துடன் முழக்கமிட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நடராஜனை அடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் சேர்ந்துகொள்ள... களேபரம்!
மீரா குமாரின் முகத்தில் கோபம் கொப்பளித்ததும், இ.கம்யூ. கட்சி மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா, லிங்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். லிங்கமோ கட்டுப்படவில்லை. இவற்றை எல்லாம் தி.மு.க-வின் அமைச்சர் நெப்போலியன் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
அந்தக் கட்சியின் மற்ற எம்.பி-க்களோ, நில மோசடிக் கைதுகளைக் கண்டித்து தமிழகத்தில் அறப் போர் செய்துகொண்டு இருந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு காய்ச்சல் என்பதால், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இதே தூதுக் குழு, மாநிலங்கள் அவைக்குச் சென்றபோது, தி.மு.க. தரப்பில் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கப்சிப். அன்று மாலை, இந்திய-இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாநிலங்கள் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி விருந்து அளித்தார். அங்கு வந்த தி.மு.க-வின் திருச்சி சிவா, தூதுக் குழு வருகையை எதிர்த்துப் பேசிவிட்டு, உடனடியாக வெளியேறினார்.
என்ன நடந்தது என்று சம்பந்தப்பட்ட எம்.பி-க்களிடம் கேட்டோம்.
கணேசமூர்த்தி எம்.பி.:
ராஜபக்ஷவின் அண்ணனான இலங்கை நாடாளுமன்றத் தலைவர் சமல் ராஜபக்​ஷவின் தலைமையில் தூதுக் குழு வந்ததே, உள்ளே போன பிறகுதான் எங்களுக்குத் தெரியும். கேட்டதும் திகைப்படைந்து, உடனே சுதாரித்துக்கொண்டு எங்களின் உணர்வை வெளிப்படுத்தினோம்.
திருச்சி சிவா எம்.பி.:
வந்தவர்களுக்கு நம்முடைய எதிர்ப்பின் அடிப்படைக் காரணத்தை, நேருக்கு நேராக உணர்த்த விரும்பினேன். அதன்படி, அப்பாவித் தமிழ் மக்களைத் திட்டமிட்டுக் கொன்று குவித்த இலங்கை அரசின் தரப்பில் இருந்து வந்திருக்கும் தூதுக் குழுவை வரவேற்க, நாங்கள் விரும்பவில்லை.
60 வருடங்களுக்கு முன், இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும், 35 லட்சம் தமிழர்களும் இருந்தனர். இன்று, சிங்களவர் 1.5 கோடி பேர், தமிழரின் மக்கள் தொகையோ பலமடங்கு குறைந்துவிட்டது. தொடர்ந்து, அங்கு தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவதுதான் மக்கள் தொகை குறைந்து போனதற்குக் காரணம்! என்று அழுத்தம் திருத்தமாக கருத்தைப் பதிவுசெய்துவிட்டு, வெளிநடப்புச் செய்தேன்.
நடராஜன் எம்.பி.:
இலங்கை போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தந்தது. தமிழக சட்டப்பேரவை தீர்மானம் போட்டது. இந்த நிலையில், இந்தக் குழுவை நமது நாடாளுமன்றத்தில் அனுமதிப்பது ஆட்சேபனைக்கு உரியது. மக்களின் உணர்வை வெளிப்படுத்தவே அவையில் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.
லிங்கம் எம்.பி.:
அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்​றொழித்து இனப் படுகொலைக் குற்றத்துக்காக இலங்கை அரசு விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, நோட்டீஸ் கொடுத்து இருக்கிறோம். இந்தச் சூழலில், அந்த தூதுக் குழுவை வரவேற்க முடியுமா, அல்லது அதை அனுமதிக்கத்தான் முடியுமா?
இந்த விவகாரம் தொடர்பாக, ஒத்திவைப்புத் தீர்மானமும், கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொண்டுவர ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் தரப்பில் அனுமதி கேட்டார்கள். மீரா குமாரோ, தமிழக உறுப்பினர்களின் எதிர்ப்புக்காக, இலங்கைக் குழுவிடம் மன்னிப்புக் கேட்டார்.
கூடவே, அ.தி.மு.க-வின் குழுத் தலைவர் தம்பித்துரையை அழைத்து, கண்டித்து இருக்கிறார். அவர்களை வெளியேற்றுங்கள் என யார் சொன்னது? அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்றும் உஷ்ணமாகப் பேசி இருக்கிறார்.
நாங்கள் செய்தது இன நலன் சார்ந்தது என்று தம்பித்துரை பதில் அளித்துள்ளார்.  அனைத்து உறுப்பினர்களும் ஒரே மாதிரி நடந்து​கொண்டது உண்மையில் பாராட்டத்தக்கதுதான்!
தமிழ் எம்.பி. வரலாமா?
இலங்கையின் தூதுக் குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனும் இடம்பெற்று உள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தாய்த் தமிழக எம்.பி-க்களே கட்சி கடந்து இனப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்தபோது, ஈழத் தமிழர் ஒருவரே குழுவில் இடம்பெறுவது, அப்பட்டமான இனத் துரோகம் என கொந்தளிக்கிறார்கள் தமிழின உணர்வாளர்கள்!
ஜூனியர் விகடன்

Geen opmerkingen:

Een reactie posten